விமர்சித்தவர்களின் முகத்தில் கரியை பூசிய நடிகர் அஜித் ரேஸிங் அணி... 2வது இடம் பிடித்து அசத்தல்!
நடிகர் அஜித் குமாரின் ரேஸிங் பயணம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. கடந்த வாரம் இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் ரேஸில் எதிர்பார்த்த முடிவு கிடைக்காமல் 38வது இடத்தில் நிறைவுசெய்த அஜித் ரெட்ஆண்ட் பை விராஜ் அணியை சமூக வலைதளங்களில் சிலர் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், அந்த முடிவுக்குப் பிறகு அடுத்த வாய்ப்பிலேயே அணி தனது திறமையை நிரூபித்துள்ளது.
ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர எண்டியூரன்ஸ் பந்தயத்தில் அஜித் ரெட்ஆண்ட் ரேசிங் அணி GT3 Pro-Am பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடுமையான போட்டி, நீண்ட நேர ஓட்டம் மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த முடிவு கிடைத்திருப்பது அணிக்கு முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம், பார்சிலோனா பந்தயத்துடன் 2026 Michelin 24H European Series சீசனும் நிறைவடைந்துள்ளது. சீசன் முழுவதும் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் அஜித் ரெட்ஆண்ட் ரேசிங் அணி GT3 Pro-Am சாம்பியன்ஷிப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அணி சாம்பியன்ஷிப் மேடையில் இடம்பிடித்துள்ளது.
சில்வர்ஸ்டோன் முடிவை மட்டும் வைத்து அஜித்தின் ரேஸிங் பயணத்தை விமர்சித்தவர்களுக்கு, இந்த வெற்றி முக்கியமான பதிலாக அமைந்துள்ளது. ஏனென்றால் சில்வர்ஸ்டோனில் ஒட்டுமொத்தமாக 38வது இடம் கிடைத்தாலும், அஜித் பங்கேற்ற LMP3 Pro/Am பிரிவில் அந்த அணி மூன்றாவது இடத்தைப் பதிவு செய்திருந்தது. பந்தயத்தின் போது ஏற்பட்ட சம்பவத்துக்குப் பிறகு கார் மீண்டும் சீரமைக்கப்பட்டு போட்டியை தொடர வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
சில்வர்ஸ்டோன் பந்தயத்திற்கு முன்பும் அஜித்தின் ரேஸிங் குறித்து சமூக வலைதளங்களில் அதிக கவனம் இருந்தது. குறிப்பாக அந்த போட்டிக்குப் பிறகு வெளியான சில வீடியோக்களைத் தொடர்ந்து நடிகர் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தன. அதே நேரத்தில், சில்வர்ஸ்டோன் முடிவை விட அவரது அணியின் பிரிவு வாரியான செயல்பாட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பார்வையும் இருந்தது.
இப்போது பார்சிலோனாவில் கிடைத்துள்ள இரண்டாவது இடம் அந்த விவாதங்களுக்கு வேறொரு கோணத்தை கொடுத்துள்ளது. ஒரு பந்தயத்தில் கிடைத்த முடிவை வைத்து ஒட்டுமொத்த ரேஸிங் பயணத்தை மதிப்பிட முடியாது என்பதை அஜித் ரெட்ஆண்ட் ரேசிங் அணியின் சீசன் முடிவு காட்டுகிறது.

இந்த வெற்றியை கொண்டாடிய அஜித், நம் மூவர்ண தேசியக் கொடியுடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். அணியின் அதிகாரப்பூர்வ பதிவில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சாம்பியன்ஷிப் மேடையில் இடம்பிடித்திருப்பது ஓட்டுநர்கள், பொறியாளர்கள், மெக்கானிக்குகள் மற்றும் ஆதரவாளர்களின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சில்வர்ஸ்டோனில் நடந்த போட்டியில் முதல்வர் விஜய் நேரடியாக பங்கேற்று போட்டியை துவங்கி வைத்தார். அத்துடன், அஜித் ரேஸிங் அணிக்கு நேரடியாக ஆதரவையும், உற்சாகத்தையும் வழங்கினார். அந்த போட்டியில் காரில் ஏற்பட்ட சிறு பிரச்னை காரணமாக 38வது இடம் பிடித்த அஜித் ரேஸிங் அணி, அதன்பிறகு பார்சிலோனாவில் 2வது இடத்தைப் பிடித்து அதிரடியான கம்பேக் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, 2026 சாம்பியன்ஷிப்பில் 3வது இடத்தையும் பிடித்து தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக போடியம் ஏறியுள்ளது.
ஒரு போட்டியில் ஏற்பட்ட பின்னடைவைத் தாண்டி அடுத்த சுற்றிலேயே வலுவாக மீண்டு வர முடியும் என்பதை அஜித்தின் ரேஸிங் அணி நிரூபித்துள்ளது. அதைவிட முக்கியமாக, போட்டியும் சவால்களும் நிறைந்த வெளிநாட்டு களத்தில் இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி போடியத்தில் அஜித் குமார் நின்ற அந்த தருணம், இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications
