சில்வர்ஸ்டோனில் அஜித் ரேஸ் – கொடியசைத்து துவங்கி வைக்கும் முதல்வர் விஜய்.. நேரலையில் பார்ப்பதற்கான விபரம்!
தமிழ்நாட்டின் மோட்டார்ஸ்போர்ட்ஸ் வரலாற்றில் இன்று ஒரு பொன்னான நாளாக பதிவு செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் நடைபெறும் 'மிச்செலின் லீ மான்ஸ் கப்' கார் பந்தய தொடரில், பிரபல நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார் களமிறங்குகிறார். இந்த சர்வதேச பந்தயத்தில் தமிழ்நாட்டு முதல்வர் ஜோசப் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
திரையுலகில் பல தசாப்தங்களாக ரசிகர்களால் எதிர் துருவங்களாக பாவிக்கப்பட்ட இந்த இரு பெரும் நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் இன்று மோட்டார்ஸ்போர்ட்ஸ் மூலம் சர்வதேச மேடையில் இணைந்திருப்பது ஒட்டுமொத்த இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உலகிலும், சினிமா உலகிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சில்வர்ஸ்டோன் லீமான்ஸ் பந்தயம்
2026 மிச்செலின் லீ மான்ஸ் கப் தொடரின் ஐந்தாவது சுற்றாக சில்வர்ஸ்டோன் பந்தயம் இன்று நடைபெறுகிறது. இந்த பந்தயம் 5.891 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட பிரமாண்டமான சில்வர்ஸ்டோன் கிராண்ட் ஃப்ரீ பந்தய சுற்றுப் பாதை கொண்ட களத்தில் 2 மணி நேர பந்தயமாக நடத்தப்படுகிறது. இதில் LMP3, LMP3 Pro/Am மற்றும் GT3 ஆகிய பிரிவுகளில் மொத்தம் 44 பந்தய கார்கள் பங்கேற்கின்றன.
தமிழ் நடிகரும், ரேஸருமான அஜித் குமார் தனது Ajith RedAnt by Virage அணியின் சார்பாக 16-ஆம் எண் கொண்ட பந்தய காருடன் 'LMP3 Pro/Am என்ற பிரிவில் பங்கேற்கிறார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பந்தய வீரர் ரோமைன் வோஸ்னியாக் இவருடன் இணைந்து காரை இயக்குகிறார். இவர்களுடன் நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் ஆகிய முன்னணி இந்திய வீரர்களும் இந்த பந்தயத்தில் பங்கேற்கின்றனர்.
நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் Silverstone பந்தயம் இங்கிலாந்து நேரப்படி மாலை 5.15 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியை இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு நேரலையில் காணலாம். அதிகாரப்பூர்வமாக FIAWEC+ தளத்தில் Michelin Le Mans Cup போட்டியை இலவசமாக நேரலையில் பார்க்க முடியும். மேலும், அங்கு போட்டியின் ரீப்ளே மற்றும் போட்டியின் சிறப்புத் தொகுப்புகளையும் பின்னர் காணலாம். இதற்கு FIAWEC+ தளத்தில் உங்களது இமெயில் விபரங்களை கொடுத்து அக்கவுண்ட் துவங்கி நேரலையில் கண்டு ரசிக்க முடியும்.
சில்வர்ஸ்டோன் லீ மான்ஸ் பந்தயம்
இதர சர்வதேச கார் பந்தயங்கள் போல் குறிப்பிட்ட தூரம் கொண்ட பந்தய களத்தை நிர்ணயிக்கப்பட்ட சுற்றுகளை வேகமாகவும், நிபந்தனைகளுக்கு உட்பட்டும் கடக்கும் பந்தயமாக லீமான்ஸ் பந்தயங்கள் இருக்காது. இது ஓட்டுனர்களின் சகிப்புத்தன்மையையும், காரின் நம்பகத்தன்மையையும் சோதிக்கும் ஒரு கடினமான நீண்ட நேர தொடர் பந்தயமாக நடத்தப்படுகிறது.
இதில் எரிபொருள் நிர்வாகம், டயர் மேலாண்மை, பந்தயத்தின் நடுவே ஓட்டுநர்களை மாற்றுவது, பிட் ஸ்டாப் செல்லும்போது காரை நொடிகளில் சரிசெய்து மீண்டும் இயக்குவதற்கான திட்டமிடல் மற்றும் வேகத்தை சீராக பராமரிப்பது போன்றவை வெற்றியை தீர்மானிக்கும். '24 ஹவர்ஸ் ஆஃப் லீ மான்ஸ்' மற்றும் 'ஐரோப்பியன் லீ மான்ஸ்' போன்ற உலகின் உச்சகட்ட சகிப்புத்தன்மை போட்டிகளுக்கு வீரர்களை தயார் செய்யும் முக்கிய அடித்தளமாக இந்த மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயம் விளங்குகிறது.
பந்தயத்தை தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய், தனது பயணத்தின் ஒரு பகுதியாக அங்குள்ள மோட்டார்ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்புகளையும் நேரில் ஆய்வு செய்கிறார். மிச்செலின் லீ மான்ஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ அழைப்பை ஏற்று, பந்தயத்தை முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்த பந்தயத்திற்கு முன்பாக ஊடகங்களை சந்தித்த நடிகரும், ரேஸருமான அஜித்குமார், "திரைத்துறையில் 34 ஆண்டுகளாக இணைந்திருக்கும் எங்கள் நட்பின் அடிப்படையில், சென்னையிலும் இது போன்ற சர்வதேச பந்தயங்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்ய நேரில் வருமாறு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தோம். அவரது இடையறாத அரசுப் பணிகளுக்கு மத்தியில் இங்கு வருவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
சென்னை 'மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி' கனவு
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார்ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் கடந்த செப்டம்பர் 3ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதில் Formula 1 முதல் Formula 4 வரையிலான போட்டிகளுக்கு ஏற்ற சர்வதேச தரத்திலான பந்தயக் களம் உருவாக்குவதுடன், இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகளை வழங்கும் கட்டமைப்புகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைப்பது என்பது வெறும் பந்தயப் பாதையை உருவாக்குவது மட்டுமே நோக்கமாக இருக்காது. அதனுடன் இணைந்த பந்தயப் பயிற்சிகள், வாகன சோதனை மையங்கள், மோட்டார்ஸ்போர்ட்ஸ் பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சர்வதேச தரத்திலான தங்கும் விடுதிகள், வீரர்களுக்கான மருத்துவ உதவி, சிகிச்சை மையங்கள் மற்றும் விளையாட்டு சுற்றுலா என்ற மிகப்பெரிய பொருளாதார கட்டமைப்பு உருவாகும்.
தமிழகம் ஏற்கனவே வாகனத் தயாரிப்பு மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் ஆசியாவின் முக்கிய மையமாக இருக்கும் நிலையில், இந்த மோட்டார் பந்தய விளையாட்டு உள்கட்டமைப்பு பொருளாதார ரீதியில் கூடுதல் வலிமை சேர்க்கும்.
எதிர்காலத்திற்கான முக்கிய கட்டம்
முதலமைச்சர் விஜய் சில்வர்ஸ்டோனின் சர்வதேச பந்தய பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வணிக ரீதியான நிர்வாக முறைகளை நேரில் பார்வையிடுகிறார். மற்றொருபுறம், அதே களத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஜித் குமார் சர்வதேச பந்தயத்தில் களம் காண்கிறார்.
இந்த நிகழ்வு, சென்னையில் அமையவுள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்தை சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்வதுடன், தமிழகத்தில் மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையை ஒரு தொழில்முறை விளையாட்டாகவும் தொழிலாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல பெரும் உதவியாக இருக்கும்.
The article has been updated with typo corrections and relevant inter links.


Click it and Unblock the Notifications


