180kmph வேகம்... வேற ஆளா இருந்தால் காரை நிறுத்தியிருக்க கூட மாட்டாங்க! அஜித் கார் பந்தயத்தில் ஏன் ஈடுப்பட்டார்
நடிகர் அஜித்குமார் (Actor Ajithkumar) கார் ரேஸ் பயிற்சியின்போது சந்தித்த விபத்து குறித்த தகவல்கள் தான் சமூக வலைத்தளங்கள் முழுவதும் நிரம்பி வழிகிறது. ஏனெனில், அஜித்குமார் அந்த அளவிற்கு இந்திய அளவில் முன்னணி நடிகர். அதுமட்டுமின்றி, அஜித் விபத்தில் சிக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியுற செய்துள்ளது. உண்மையில், எதற்காக நடிகர் அஜித் இந்த பயிற்சியில் ஈடுப்பட்டார்? எங்கு இந்த பயிற்சி ஓட்டம் நடைபெற்றது? விபத்தின்போது எவ்வளவு வேகத்தில் காரை அஜித் ஓட்டினார் என்பது குறித்த விபரங்களை பற்றி இனி பார்க்கலாம்.
பொதுவாகவே, நடிகர், நடிகைகளாக இருந்தாலும் அவர்களுக்கு இன்னொரு தனி திறமையும் இருப்பது உண்டு. அந்த வகையில் நடிகர் அஜித்குமார் ஓர் கார் பந்தய (Car Race) பிரியர் என்பது நம் எல்லாருக்கும் தெரிந்ததே. இன்னும் சொல்லப்போனால், கார் பந்தயங்களில் கலந்துக் கொள்வதற்கு தேவையான பணத்திற்காகவே அஜித் சினிமாவில் நடிக்க வந்தார் என்றெல்லாம் கூட கூறப்படுகிறது.

இதனாலேயே கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பினும், அஜித்குமார் அவ்வப்போது கார் பந்தயங்களில் ஈடுப்படுகிறார். குறிப்பாக, கடந்த சில வருடங்களாக அஜித்குமாரின் நடிப்பில் 2 வருடங்களுக்கு ஒரு படம் தான் திரைக்கு வருகிறது. அந்த அளவிற்கு சினிமாவை காட்டிலும் பல விஷயங்களில் நடிகர் அஜித்குமார் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். முக்கியமாக, சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் கூட கலந்துக்கொள்ள நடிகர் அஜித்குமார் திட்டமிட்டுள்ளார்.
அந்த கார் பந்தயங்களுள் ஒன்று, துபாயில் வருகிற ஜனவரி 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற இருக்கும் துபாய் மிச்செலின் 24 ஹவர்ஸ் (Dubai Michelin 24H) பந்தயம் ஆகும். இதில் கலந்துக் கொள்வதற்காக ஒரு அணியை உருவாக்கி உள்ள நடிகர் அஜித்குமாரும் இந்த பந்தயத்தில் டிரைவராக பங்கேற்க உள்ளார். அதற்கான பயிற்சியில் போர்ஷே 911 ஜி3 கப் 992 என்கிற ரேஸ் கார் உடன் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போதுதான் விபத்து நடந்துள்ளது.

விபத்தின்போது மணிக்கு 180கிமீ வேகத்தில் காரை அஜித் ஓட்டியுள்ளார். அஜித்குமாரின் இந்த பயிற்சி ஓட்டம் துபாயில் மோட்டார் சிட்டி பகுதியில் அமைந்துள்ள துபாய் ஆட்டோட்ரோம் (Dubai Autodrome) என்கிற ரேஸ் டிராக்கில் மேற்கொள்ளப்பட்ட போது உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. மொத்தம் 5.390கிமீ நீளத்தில் பந்தய சாலையை கொண்டதாக துபாய் ஆட்டோட்ரோம் உள்ளது.
துபாய் மிச்செலின் 24 ஹவர்ஸ் தொடரின் முக்கியமான பந்தயங்கள் ஜனவரி 11 மற்றும் 12ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஜனவரி 5ஆம் தேதியில் இருந்தே இந்த பந்தய தொடர் சம்பந்தமான மற்ற நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிவிட்டன. அந்த வகையில் இன்று (ஜனவரி 7) நடைபெற்ற டிராக் டே (Track Day)-இல் பங்கேற்ற போதுதான் நடிகர் அஜித்குமார் இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

வருகிற ஜனவரி 10ஆம் தேதி துவங்கவுள்ள தகுதிச்சுற்று ஆட்டங்களில் இருந்து பந்தயங்கள் நேரலையாக ஒளிப்பரப்பப்பட உள்ளன. இந்த கார் ரேஸ் தொடரின் பெயரில் உள்ள '24 ஹவர்ஸ்' என்பது அதன் இறுதிச்சுற்று பந்தயத்தை குறிக்கிறது. அதாவது, மிச்செலின் 24ஹவர்ஸ் தொடரின் இறுதி பந்தயம் ஆனது 24 மணிநேரத்திற்கு நடைபெறும். 2025ஆம் ஆண்டிற்கான இந்த தொடரின் இறுதி பந்தயம் இந்திய நேரப்படி ஜனவரி 11ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் துவங்கி, 12ஆம் தேதி 2.30 மணியளிவில் நிறைவடையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 24 மணிநேரத்துக்கு தொடர்ச்சியாக பந்தயத்தில் ஈடுப்பட வேண்டும் என்பது உண்மையில் மிகவும் கடினமாக விஷயம் ஆகும். இத்தகைய போட்டியில் கலந்துக் கொள்ள முடிவு செய்திருப்பது நடிகர் அஜித்குமாரின் மன வலிமையை காட்டுகிறது. ஆதலால், அத்தகையவரை இவ்வாறான விபத்துக்கள் எல்லாம் ஒன்று செய்யாது. இந்த பந்தயத்தில் தமிழ்நாடு அரசின் உதவியுடன் நடிகர் அஜித் கலந்துக் கொண்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications









