உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சொத்து இருந்தும் காரை அவரே ஓட்டும் தொழிலதிபர்! அந்த கோடீஸ்வரரின் மகனா இது?
ஆகாஷ் அம்பானி (Akash Ambani), இந்தியாவின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மூத்த மகன். இவர்களது குடும்பத்தில் இல்லாத கார்களே கிடையாது என சொல்லலாம். பெரும்பாலும் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களில் தான் வெளியே வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால், சமீபத்தில் ஆகாஷ் அம்பானி தனது விலையுயர்ந்த ஃபெராரி காரில் சென்றுள்ளார். இணையத்தில் வெளியாகியுள்ள இது தொடர்பான வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை பெற்றிருப்பதுடன், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. அது என்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை வைத்திருக்கும் ஒரே குடும்பம் முகேஷ் அம்பானி குடும்பம் என சொல்லலாம். ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்கள் மட்டும் 3 உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். திருமணம் ஆன பின், ஆகாஷ் அம்பானி தனது தந்தையின் அரவணைப்பில் இருந்து சற்று ஒதுங்க ஆரம்பித்தார்.

தந்தையின் மூலமாக நிறுவனங்கள் கிடைத்தாலும், அவற்றை தனது சொந்த முயற்சியில் வளர்த்துவரும் ஆகாஷ் அம்பானி தனது குடும்ப பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக சில விலையுயர்ந்த கார்களை வாங்க ஆரம்பித்தார். அவற்றுள் முக்கியமானது, ஃபெராரி புரோசாங்குவே (Ferrari Purosangue) ஆகும். இந்த ஃபெராரி காரின் விலை சுமார் ரூ.10 கோடியாக உள்ளது.
ஃபெராரி புரோசாங்குவே காரை ஆகாஷ் அம்பானி ஓட்டி செல்லும் வீடியோ ஒன்று தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், ஆகாஷ் அம்பானியின் பளபளக்கும் சிவப்பு நிறத்திலான ஃபெராரி புரோசாங்குவே காரையும், அதற்கு முன்னாலும் பின்னாலும் ஆகாஷ் அம்பானியின் பாதுகாப்புக்காக சில கார்கள் பெக்கான் விளக்குகளை ஒளிர விட்டப்படி செல்வதையும் காண முடிகிறது.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட நமது கவனத்தை ஈர்ப்பது, காருக்குள் அமர்ந்திருக்கும் ஆகாஷ் அம்பானியின் டிரைவிங் ஆகும். ஏனெனில், ஸ்டேரிங்கை பிடித்தப்படி காரை ஓட்டும் அவர் முறையாக சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை. காரின் முன்பக்க விண்ட்ஷீல்டு கருப்பாக இருப்பினும், காருக்குள் ஆகாஷ் அம்பானி எந்தவொரு சீட் பெல்ட்டையும் அணிந்தில்லாததை காண முடிகிறது.
முகேஷ் அம்பானியின் குடும்பத்தில் 2 ஃபெராரி புரோசாங்குவே கார்கள் உள்ளன. அதில் ஒன்றை ஆனந்த் அம்பானியின் திருமணத்தின்போது நடிகர் ஷாரூக்கானை அழைத்து செல்ல பயன்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 2வது புரோசாங்குவே கார் ஆகாஷ் அம்பானி உடன் சாலையில் காட்சி தந்துள்ளது. பெரும்பாலும் டிரைவர் இல்லாமல் ஆகாஷ் அம்பானி தனது கார்களை அவரே ஓட்டுகிறார்.

இந்த ஃபெராரி காரை ஆகாஷ் அம்பானி சமீபத்தில்தான் வாங்கியிருப்பார் என நினைக்கிறோம். முகேஷ் அம்பானி குடும்பத்தில் உள்ள இரு ஃபெராரி புரோசாங்குவே கார்களும் ரோஸ்ஸோ போர்டோஃபினோ என்கிற அடர் சிவப்பு நிறத்தில் உள்ளன. ஏற்கனவே கூறியதுபோல், மிகவும் விலையுயர்ந்த ஃபெராரி காரான புரோசாங்குவேயின் விலை ஆனது ஏறக்குறைய ரூ.10 கோடியாக உள்ளது.
இந்த காஸ்ட்லீயான ஃபெராரி காரில் 6.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 725 பிஎஸ் மற்றும் 716 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. ஃபெராரி புரோசாங்குவே காருக்கு இந்தியாவில் விற்பனையில் போட்டியாக லம்போர்கினி உருஸ் மற்றும் அஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் கார்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் ஓட்டுவது ஆகாஷ் அம்பானிக்கு பிடித்தமான விஷயமாக உள்ளது. சமீபத்தில் கூட மனைவி ஷ்லோகா மெஹ்தா மற்றும் தங்கை இஷா அம்பானியை அமர வைத்து விலையுயர்ந்த அல்ட்ரா-லக்சரி ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் ட்ராப்ஹெட் காரை ஓட்டியதை பார்த்தோம். இருப்பினும், கார் ஓட்டும்போது யாராக இருந்தாலும் சீட் பெல்ட் அணிவது அவசியம் என்பதை ஆகாஷ் அம்பானி உணர வேண்டும்.


Click it and Unblock the Notifications









