தன் உயிரை பணயம் வைத்து 3 பேரின் உயிரை காப்பாற்றிய கார் டிரைவர்! பலவீனமான இதயம் உள்ளவங்க வீடியோவ பாக்காதீங்க!
இந்திய சாலைகளில் வாகனம் ஓட்டுவது என்பது உண்மையில் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நீங்கள் என்னதான் கவனமாக ஓட்டினாலும், மற்றவர்களும் அப்படி இருப்பார்கள் என சொல்ல முடியாது. இது 100 சதவீதம் உண்மை என நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று சமீபத்தில் நடைபெற்றுள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) காரில் ஒரு குடும்பத்தினர் சமீபத்தில் ஜாம்ஷெட்பூர் (Jamshedpur) நகரில் இருந்து கொல்கத்தா (Kolkata) நோக்கி சென்று கொண்டிருந்தனர். அது இரவு நேரம். எனவே கும்மிருட்டாக இருந்தது. அவர்கள் மணிக்கு சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்தனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் இது வேக வரம்புகளுக்கு உட்பட்டதுதான். ஆனால் அந்த நேரத்தில் ஸ்கூட்டர் ஒன்றில் 3 பேர் திடீரென சாலையை கடக்க முயற்சி செய்தனர். இரு சக்கர வாகனங்கள் என்பது இருவர் பயணிப்பதற்கு மட்டும்தான். போதாக்குறைக்கு அதில் 2 பேர் ஹெல்மெட் அணியவில்லை என்பது போல் தெரிகிறது (வீடியோ அவ்வளவு தெளிவாக இல்லை).
இப்படி ஏகப்பட்ட விதிமீறல்களுடன், சாலையை கொஞ்சம் கூட கவனிக்காமல், அவர்கள் கடக்க முயற்சி செய்தனர். ஆனால் நல்ல வேளையாக மஹிந்திரா ஸ்கார்பியோ கார் அவர்களின் மீது மோதவில்லை. மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் டிரைவர் கவனமாக இருந்ததுதான் இதற்கு முக்கியமான காரணம். ஸ்கூட்டரில் வந்தவர்கள் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக, சாலையின் எதிர்புறத்திற்கு அவர் காரை ஓட்டினார்.

அந்த நேரத்தில் சாலையின் எதிர்புறத்திலும் நிறைய வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. நல்ல வேளையாக அந்த வாகனங்கள் மீதும் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் மோதவில்லை. மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் டேஷ்போர்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. அது தற்போது யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், தாறுமாறாக வாகனங்களை ஓட்டிய வேறு ஒரு சில நபர்களும் காட்டப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், அதிர்ஷ்டவசமாக ஸ்கார்பியோ கார் ஸ்கூட்டர் மீதோ அல்லது வேறு வாகனங்கள் மீதோ மோதவில்லை. ஆனால் விபத்து நடந்திருந்தால், அதன் பழி ஸ்கார்பியோ டிரைவர் மீது சுமத்தப்பட்டிருக்கலாம்.
ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. உண்மையை சொல்லப்போனால் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் டிரைவர் தன்னுடைய உயிரையே பணயம் வைத்து, ஸ்கூட்டரில் வந்த 3 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார். எனவே அவருக்கு நாம் பாராட்டுக்களை தெரிவிப்பதுதான் சிறந்த ஒன்றாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த சம்பவம் நமக்கு 2 விஷயங்களை கற்று கொடுக்கிறது. ஒன்று, சாலையில் வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம் சரியாக ஓட்டினாலும், அனைவரிடம் இருந்தும் அதனை எதிர்பார்க்க முடியாது. மற்றொன்று காரில் டேஷ்போர்டு கேமராக்களை பொருத்துவது தொடர்பானது.
உங்கள் காரில் உடனடியாக டேஷ்போர்டு கேமரா ஒன்றை வாங்கி மாட்டுங்கள். சாலை விபத்துக்கள் நிகழ்ந்தால், உங்கள் மீது தவறு இல்லாதபட்சத்தில், சாட்சியாக காட்டுவதற்கு அவை உதவி செய்யும். டேஷ்போர்டு கேமராக்கள் தற்போதெல்லாம் ஓரளவிற்கு குறைவான விலையிலேயே கிடைக்கின்றன. எனவே தாமதம் செய்யாமல் உடனடியாக ஒரு டேஷ்போர்டு கேமராவை வாங்கி மாட்டுங்கள்.


Click it and Unblock the Notifications








