பைலட் வேலைக்கு ஒல வச்சுட்டாங்க.. சென்னை வந்த ஆளில்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்! இந்த ரூட்லதான் இத இயக்க போறாங்க
சென்னை மெட்ரோ கட்டம் இரண்டு (Chennai Metro Phase 2)-இல் ஆளில்லாமல் இயங்கும் ரயில் (Driverless Train)-கள் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அந்த பைலட் இல்லாமல் இயங்கும் திறன் கொண்ட ரயில்கள் சென்னை மெட்ரோல் நிர்வாகத்திற்கு டெலிவரி கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூருவில் டிசைன் செய்யப்பட்ட டிரைவர் இல்லாமல் இயங்கும் திறன் கொண்ட ரயில்கள் சென்னை வந்திருப்பது மெட்ரோ ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம் ஆல்ஸ்டாம் (Alstom).
இது ஓர் ஸ்மார்ட் மற்றும் சஸ்டெயினபிள் (நிலையான) இயக்க திறனைக் கொண்ட ஊர்திகளை உற்பத்தி செய்யும் முன்னணி பிராண்டு ஆகும். இந்த நிறுவனமே சென்னைக்கான ஆளில்லாமல் இயங்கும் திறன் கொண்ட மெட்ரோ ரயில்களை உருவாக்கி வழங்கி இருக்கின்றது. 36 ஆளில்லாமல் இயங்கும் ரயில்களை தயாரித்து தருவதற்கான ஆர்டரை இந்த நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் தட்டிச் சென்றது.

குறிப்பு: படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே முதல் கட்டமாக ஓர் பைலட் தேவைப்படா மெட்ரோ ரயிலை அது தயாரித்துக் கொடுத்திருக்கின்றது. இந்த ரயில் சென்னை மெட்ரோ ரயில் கட்டம் இரண்டில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. பூந்தமல்லி பைபாஸ் முதல் கலங்கரை விளக்கம், இந்த வழித்தடத்திலேயே இந்த ரயில் இயக்கப்பட இருக்கின்றது.
இது ஓர் 26 கிமீ இடைவெளிக் கொண்ட வழித்தடம் என்பது குறிப்பிடத்தகுந்தது. மொத்தமாக 28 ஸ்டேஷன்களை இந்த வழித்தடம் கொண்டிருக்கும். இதில் 18 நிறுத்தங்கள் மேம்பாலத்திலும், 10 நிறுத்தங்கள் பூமிக்கு அடியிலும் இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த பிரத்யேக வழித்தடத்தில் சிறப்பாக இயங்கும் வகையிலேயே இந்த மெட்ரோ ரயிலானது வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
ஆல்ஸ்டாம் நிறுவனம் இந்த தானியங்கி ரயிலை பெங்களூருவில் வைத்து வடிவமைத்து, ஆந்திராவின் ஸ்ரீசிட்டி-யில் வைத்து தயாரித்து இருக்கின்றது. இங்கிருந்தே தற்போது அது சென்னைக்கும் வந்திருக்கின்றது. 'மேக்-இன் இந்தியா' மற்றும் 'ஆத்மான் நிர்பார் பாரத்' எனும் திட்டங்களின்கீழே இந்த ரயில் தயாரிக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், இந்த ஆல்ஸ்டாம் நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு மெட்ரோ ரயில்களை தயார் செய்து வழங்குவது இது முதல் முறையல்ல. கட்டம் ஒன்றிற்கான மெட்ரோ ரயில்களையும் இதுவே தயாரித்து வழங்கி இருக்கின்றது. சுமார் 208 மெட்ரோ ரயில் கார்களை அது தயாரித்து வழங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிலையிலேயே மெட்ரோ ரயில் கட்டம் இரண்டிற்குமான மெட்ரோ ரயில்களையும் தயாரித்து வழங்கும் பணியில் ஆல்ஸ்டாம் நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. மூன்று கார்களைக் கொண்ட ரயில்களையே அது தயாரித்து வருகின்றது. அதிநவீன வசதிகள் தாங்கியதாக இந்த மெட்ரோ ரயில்கள் இருக்கும் என கூறப்படுகின்றது.
குறிப்பாக, கட்டம் ஒன்றில் பயன்படுத்தப்படும் மெட்ரோ ரயில்களைக் காட்டிலும் மிக அதிக வசதிகள் கொண்ட மற்றும் சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கக் கூடியதாக இந்த ரயில்கள் இருக்கும் என கூறப்படுகின்றது. இதற்கு சான்றாக அதன் ஆளில்லாமல் இயங்கும் திறன் உள்ளது. நிறுத்தங்களில் நிறுத்துவது, புறப்படுவது மற்றும் ஹாரன்களை அடித்தல் என அனைத்தையும் பைலட்டின் உதவியின்றி அதுவே செய்துக் கொள்ளும் என கூறப்படுகின்றது.
இந்த ரயில் மணிக்கு 90 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது. ஆனால், பயன்பாட்டின்போது அது மணிக்கு 80 கிமீ வேகத்தில் மட்டுமே இயக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த ரயிலில் 'ஆட்டோமேட்டிக் டிரெயின் ஆபரேஷன்' மற்றும் 'ஆட்டோமேட்டிக் டிரெயின் புரடெக்சன்' எனும் இரண்டு அம்சங்களை ஆல்ஸ்டாம் வழங்கி இருக்கின்றது.
இதுவே ரயிலின் பாதுகாப்பு மற்றும் இயக்கம் ஆகியவற்றிற்கு உதவியாக இருக்கும். மிக முக்கியமாக டிரைவர் இல்லாமல் இயங்குவதற்காக லெவல் 4 வகை ஆட்டோமேஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, ரயில் பயணிகளுக்கான பல்வேறு புதிய அம்சங்களை சேர்த்திருப்பதாக ஆல்ஸ்டம் தெரிவித்து உள்ளது.
அந்தவகையில் நின்று கொண்டு பயணிக்கும் பயணிகளுக்காக பெர்ச் வகை இருக்கைகளை முதல் முறையாக சென்னை மெட்ரோவில் ஆல்ஸ்டாம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. நின்றுக் கொண்டு வரும் பயணிகள் இதன் மீது சாய்ந்துக் கொண்டு பயணிக்க முடியும். இதன் வாயிலாக அமர்ந்தபடி பயணிப்பதற்கான அனுபவம் அவர்களுக்கு கிடைக்கும்.
ஏசி, பெண்களுக்கான தனிப் பெட்டி, தரமான கை பிடிகள் (உயரம் குறைந்தவர்களாலும் இதனை நுகர முடியுமாம்), சிசிடிவி கேமிரா, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது. ஆல்ஸ்டாம் நிறுவனம் இந்த ரயிலின் உற்பத்தி பணிகளை நடப்பாண்டு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கிவிட்டது. இந்த நிலையிலேயே தற்போது டெலிவரி பணிகளையும் ஆல்ஸ்டாம் தொடங்கி இருக்கின்றது. இது ஓர் 124 மில்லியன் யூரோ மதிப்புள்ள புராஜெக்ட் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கட்டம் இரண்டு மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே ஆளில்லாமல் இயங்கும் ரயில் டெலிவரி பணிகளும் தொடங்கி இருக்கின்றது. எனவே சீக்கிரமே மெட்ரோ ரயில் 2 பொது பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது பயன்பாட்டிற்கு வரும் எனில் போக்குவரத்து நெரிசல் மேலும் பலமடங்காகக் குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








