பிக்-அப் டிரக்காக மாறிய ஆல்டோ.. பயணிகளை மட்டுமல்ல லக்கேஜையும் இதுல ஏத்திட்டு போகலாம்.. ஏழைக்கான எல்லுருண்டை!
மாருதி சுஸுகி ஆல்டோ, இதுவே இந்தியர்கள் பலரின் முதல் கார் மாடல் ஆகும். இப்போதும் இந்தியர்கள் மத்தியில் இந்த கார் மாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மலிவு விலை, பராமரிப்பு செலவு குறைவு, மைலேஜை மிக தாராளமாக வழங்கும் என்கிற காரணத்தினால் இந்த வாகனத்திற்கு மிக மிக அமோகமான வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது.
ஆனால், புதிய மாசு உமிழ்வு விதி காரணமாக இந்த காரையே இந்தியாவில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது மாருதி சுஸுகி. இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமாக சந்தையில் விற்பனையில் இருந்த ஓர் கார் மாடலே மாருதி சுஸுகி ஆல்டோ ஆகும். இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கார் மாடலையே தற்போது இளைஞர் ஒருவர் பிக்-அப் டிரக்கைப் போல் மாற்றி இருக்கின்றார்.

ஆமாங்க, பயணிகள் பயணிக்க உதவும் இந்த காரை பொருட்களை ஏற்றிச் செல்ல உதவும் வாகனமாக ஒருவர் மாற்றி இருக்கின்றார். இந்த மாற்றப்பட்ட ஆல்டோவின் வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அந்த காரின் முழுமையான விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், தற்போது கணிசமான தகவல்கள் அந்த வாகனம் பற்றி தெரிய வந்திருக்கின்றது.
உபி மாநிலத்திலேயே இத்தகைய வாகன மாடிஃபிகேஷன் அரங்கேறி இருக்கின்றது. ஆல்டோவை பிக்-அப் டிரக்காக மாற்றுவதற்காக அதன் உரிமையாளர் ஆல்டோவில் பல்வேறு மாற்றங்களைச் செய்திருக்கின்றார். மிக முக்கியமாக காரின் பின் பக்கத்தை முழுமையாக அவர் மாற்றி அமைத்திருக்கின்றார். முன் பக்கத்தில் மட்டும் மேற்கூரை இருக்கும் வகையில் பின் பக்கத்தில் அதை முழுமையாக அவர் அகற்றி இருக்கின்றார்.
இதைத்தொடர்ந்து, பின்பக்கத்தை தனி பகுதியாக மாற்றும் வகையில் அதை இரும்பு பேனலால் சீல் வைத்திருக்கின்றார். இத்துடன் பின் பக்கத்தை தெளிவாக பார்க்க ஏதுவாக மைய பகுதியில் பெரிய கண்ணாடியையும் அவர் நிறுவி இருக்கின்றார். இத்தகைய செயல்களினாலேயே மாருதி சுஸுகி ஆல்டோ தற்போது பிக்-அப் டிரக்கைப் போல் மாறி இருக்கின்றது.
மேற்கூரையை ஆல்டோ இழந்திருந்தாலும் அதன் பின் மற்றும் முன் பக்கம் அப்படியே இருக்கின்றது. ஆகையால், அது ஆல்டோ என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஹெட்லைட், டெயில் லைட், பம்பர், முன் பக்க கிரில் ஆகியவையும் அப்படியே இருக்கின்றன. இதேபோல், எஞ்சினும் அப்படியே பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இது ஓர் ஷார்ட் வைரல் வீடியோ என்பதால் எங்களால் இந்த காரை பிக்-அப் டிரக்காக மாற்றியதற்கான செலவு எவ்வளவு என்பது பற்றிய விபரங்களைப் பெற முடியவில்லை. மேலும், இந்த பிக்-அப் டிரக்காக மாறி இருக்கும் ஆல்டோவை ஆராயும் பணியிலேயே பலர் களமிறங்கி இருக்கின்றனர். இந்தியாவில் இதுபோன்று வாகனங்கள் மாடிஃபை செய்யப்படுவது முதல் முறையல்ல.
இதற்கு முன்னதாகவும் வாகன மாடிஃபிகேஷன் நிகழ்வு பல நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. ஆனால், இது விநோத மாடிஃபிகேஷன் சம்பவமாக காட்சியளிக்கின்றது. இதனால்தான் கார் ஆர்வலர்கள் பலரின் கவனத்தை இந்த கார் தற்போது ஈர்த்து இருக்கின்றது. அதேவேளையில், இதுபோன்று வாகனங்களை மாடிஃபை செய்வதற்கு இந்தியாவில் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன மாடிஃபிகேஷனுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும், வாகன ஆர்வலர்கள் பலர் இந்த தடையை மீறி தங்களின் வாகனங்களை மாடிஃபைச் செய்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான வாகனங்களை பொதுவெளியில் பயன்படுத்தினால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், ஒரு சிலர் பெரும் தொகையை செலவிட்டு தங்களுக்கு பிடித்தவாறு கார்களை வேறு உருவத்திற்கு அப்கிரேட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








