சாதாரண வண்டி டயர் மாதிரி கிடையாது... விமானங்களின் டயர்களில் இவ்ளோ ரகசியங்கள் மறஞ்சிருக்கா? ஆச்சரியமா இருக்கே!
விமானங்களின் டயர்களில் மறைந்துள்ள மிகவும் பிரம்மிப்பான விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானங்கள் வானத்தில் பறப்பவை என்றாலும், டேக்-ஆஃப் செய்யவும், லேண்ட் ஆகவும், ரன்வே-யில் பயணம் செய்யவும் டயர்கள் அவசியம். ஆனால் வழக்கமான ஆட்டோமொபைல்களுக்கான டயர்கள் விமானங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. விமானங்களின் எடை மிகவும் அதிகம் என்பதால், ஹெவி-ட்யூட்டி டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

விமானங்களின் டயர்கள் பல்வேறு விதமான வெப்பநிலைகளை தாக்குபிடிக்க வேண்டும். 10 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பறக்கும்போது மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் என்ற மிகவும் குளிரான சூழல் இருக்கும். அதே நேரத்தில் உலகின் வெப்பமான பிராந்தியங்களில் தரையிறங்கும்போது, மிகவும் கடுமையான வெயில் இருக்கும்.

இதுபோன்ற பல்வேறு விதமான வெப்ப நிலைகளை தாக்கு பிடிக்கும் வகையில், விமானங்களின் டயர்கள் விசேஷமாக தயாரிக்கப்படுகின்றன. விமானங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் டயர்களில் ஏராளமான சுவாரஸ்யங்கள் மறைந்துள்ளன. அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த தகவல்கள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.

ஹைட்ரோபிளானிங் அபாயத்தை குறைக்கும் வலுவான த்ரெட் பேட்டர்ன்!
வழக்கமான ஆட்டோமொபைல்களில் பயன்படுத்தப்படும் டயர்களில் இருக்கும் த்ரெட் பேட்டர்ன் (Tread Pattern) உடன் ஒப்பிடும்போது விமானங்களில் பயன்படுத்தப்படும் டயர்களின் த்ரெட் பேட்டர்ன் வித்தியாசமானது. மிக பலமாக காற்று வீசும் சமயங்களில், ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதற்காக, விமானங்களுக்கான டயர் உற்பத்தியாளர்களால் விசேஷ த்ரெட் பேட்டர்ன் பயன்படுத்தப்படுகிறது.

டயர்களுக்கும், ஓடுபாதைக்கும் இடையே ட்ராக்ஸனை (Traction) உருவாக்குவதற்கு இந்த த்ரெட் பேட்டர்ன் உதவி செய்கிறது. இதனால் காற்று பலமாக வீசும் சமயங்களில், விமானத்தின் இயக்கம் குறைக்கப்படுகிறது. அத்துடன் ஹைட்ரோபிளானிங் (Hydroplaning) அபாயத்தையும், இந்த வலுவான த்ரெட் பேட்டர்ன் குறைக்கிறது.

ரன்வே ஈரமாக இருந்தால் ஹைட்ரோபிளானிங் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஹைட்ரோபிளானிங் ஏற்பட்டால் விமானம் ரன்வேயில் கட்டுப்பாட்டை இழந்து, சறுக்கி சென்று விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடந்த காலங்களில் ஹைட்ரோபிளானிங் காரணமாக கார்கள் பல முறை விபத்துக்களில் சிக்கியுள்ளன.

ஆனால் விமானம் ஹைட்ரோபிளானிங் அபாயத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகளை, அதனுடைய டயர்களின் வலுவான த்ரெட் பேட்டர்ன் குறைக்கிறது. இதன் மூலம் பயணிகள் உள்பட அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. ஹைட்ரோபிளானிங் என்பது அக்வாபிளானிங் (Aquaplaning) என்ற பெயராலும் அறியப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

எரியக்கூடிய பண்புகள் அற்ற நைட்ரஜன்!
பொதுவாக வழக்கமான ஆட்டோமொபைல்களின் டயர்களில் சாதாரண காற்றுதான் நிரப்பப்படும். ஆனால் விமானங்களின் டயர்களில் நைட்ரஜன் வாயு (Nitrogen Gas) நிரப்பப்படுகிறது (வழக்கமான ஆட்டோமொபைல்களின் டயர்களிலும் தற்போது நைட்ரஜன் வாயு நிரப்பப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை).

கடந்த காலங்களில் சில விமானங்களில் ஆக்ஸிஜன் (Oxygen) நிரப்பப்பட்ட டயர்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் ஆக்ஸிஜன் பயன்பாடு டயர் வெடிப்புகளுக்கு காரணமாக இருந்தது. இது விமானங்களின் டயர்களில் ஆக்ஸிஜனை தவிர்க்க காரணமாக அமைந்தது. ஆனால் நைட்ரஜன் விமானங்களுக்கு பாதுகாப்பான ஆப்ஷனாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் நைட்ரஜன் 'இன்னெர்ட்' (Inert) வாயுவாக கருதப்படுகிறது. அதாவது செயலற்ற வாயு என்று கூறலாம். இது மற்ற கெமிக்கல்களுடன் வினைபுரியாது. எனவே நைட்ரஜனுக்கு எரியக்கூடிய பண்புகளும் இல்லை. எனவேதான் விமானங்களின் டயர்களில் நைட்ரஜனை நிரப்புவது பாதுகாப்பாக ஒன்றாக கருதப்படுகிறது.

அடிக்கடி மாற்றப்படும்!
பொதுவாக 120 முதல் 400 லேண்டிங்குகள் செய்யப்பட்ட பின்னர் விமானத்தின் டயர்கள் மாற்றப்படும். ஆனால் விமானத்தின் மாடல், ரன்வே, வானிலை மற்றும் பைலட் போன்ற பல்வேறு காரணிகளை பொறுத்து இந்த எண்ணிக்கை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. 120 முதல் 400 லேண்டிங்குகள் என்பது பொதுவான எண்ணிக்கையாகும்.

ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள்!
சந்தையில் பல்வேறு வகையான விமான டயர்கள் கிடைக்கின்றன. ஆனால் விமானங்களுக்கான டயர்களின் உற்பத்தியை பொறுத்தவரையில் குட்இயர் (Goodyear), மிச்செலின் (Michelin), டன்லூப் (Dunlop) மற்றும் பிரிட்ஜஸ்டோன் (Bridgestone) போன்ற நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மேற்கண்ட நிறுவனங்கள் வழக்கமான ஆட்டோமொபைல்களுக்கும் டயர்களை தயாரிக்கின்றன.


Click it and Unblock the Notifications








