சுரங்க வாகனங்களும், பிரம்மிக்க வைக்கும் சுவாரஸ்யங்களும்... !

Written By:

உலகிலேயே ராட்சத வாகனங்களை பயன்படுத்தும் துறைகளில் மிக முக்கியமானது சுரங்கத் தொழில். இந்த துறையின் பொருளாதார வளமையும், தேவையும் இந்த ராட்சத வாகனங்களை பார்த்தே உணர்ந்து கொள்ள முடியும். ஆபரணங்களுக்கான மூலப்பொருட்கள், பயன்பாட்டு கருவிகளை தயார் செய்வதற்கான உலோக மூலப்பொருட்களை பூமியை அகழ்ந்து எடுப்பது மட்டுமின்றி, இன்று மருத்துவ துறையிலும் சுரங்கங்களிலிருந்து பெறப்படும் தாதுக்களின் பங்கு மிக அளப்பறியதாக இருக்கிறது.

இந்தநிலையில், பூமியிலிருந்து அகழ்ந்து எடுப்பதற்கான ராட்சத எந்திரங்கள், அதனை இடமாற்றம் செய்வதற்கு உலக அளவில் பொதுவாக பயன்பபடுத்தப்படும் ராட்சத வாகனங்களின் திறன் வியப்பை தருவதாக அமைந்துள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்கள், படங்கள் மற்றும் கூடுதல் சுவாரஸ்யங்களை ஸ்லைடரில் காணலாம்.

01. சுரங்கத் தொழில்

01. சுரங்கத் தொழில்

சுரங்கத் தொழிலும் நீண்ட பாரம்பரியம் கொண்டதாகவே இருக்கிறது. மனித குலம் நாகரீக சமுதாயத்திற்கு மாறியபோது ஆயுதங்கள், ஆபரணங்கள் செய்வதற்கு தேவைப்பட்ட உலோகங்களை எடுப்பதற்காக பூமியின் மேலடுக்கில் முதலில் அகழ்ந்து எடுத்துள்ளனர். பின்னர், தேவை அதிகரிக்க அதிகரிக்க, அதன் மதிப்பும் கூடியதால், இதற்கான பிரத்யேக அகழ்வு பணிகளில் மும்முரம் காட்டத் தொடங்கினர்.

02. சுரங்க வகைகள்

02. சுரங்க வகைகள்

திறந்தவெளி சுரங்கம், நிலத்தடி சுரங்கம் என இரண்டு வகைகள் உள்ளன. தற்போது அனைத்து துறைகளும் எந்திரமயமாகிவிட்ட நிலையில், சுரங்கத் தொழிலில் கனரக பயன்பாட்டு வாகனங்களும், ராட்சத எந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அதில், மிரள வைக்கும் சில எந்திரங்கள் மற்றும் கனரக வாகனங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.

 03. பேக்கர் 288 அகழ்வு எந்திரம்

03. பேக்கர் 288 அகழ்வு எந்திரம்

உலகின் மிகப்பெரிய சுரங்க அகழ்வு பணிக்கான எந்திரத்தை ஜெர்மனியை சேர்ந்த க்ரப் நிறுவனம் உருவாக்கியது. கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவு கொண்ட இந்த எந்திரத்தை பற்றியத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

04. வடிவம்

04. வடிவம்

பேக்கர் 288 எந்திரம் 311 அடி உயரமும், 705 அடி நீளமும் கொண்டது. இந்த எந்திரம் 45,500 டன் எடை கொண்டது.

05. பயன்பாடு

05. பயன்பாடு

மேற்கு ஜெர்மனியிலுள்ள தகேபு ஹம்பேக் நிலக்கரி சுரங்கத்திற்காக இந்த எந்திரம் தயாரிக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 2,500 சரக்கு ரயில் பெட்டிகளில் நிரப்புவதற்கான நிலக்கரியை இந்த எந்திரம் அகழ்ந்து ரயில் பெட்டிகளில் நிரப்பிவிடும்.

06. விந்தை

06. விந்தை

13 ஆண்டுகள் சுரங்கப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, இந்த எந்திரத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. ஆனால், இதன் உருவம் இதனை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது.

 07. சவால்கள்

07. சவால்கள்

அந்த சுரங்கத்திலிருந்து 14 மைல் தூரத்திற்கு அப்பால் உள்ள மற்றொரு சுரங்கத்திற்கு இந்த எந்திரத்தை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இந்த எந்திரத்தில் மூன்று வரிசை கொண்ட டிராக் செயின் பொருத்தப்பட்டு, இது நகரும் வசதி கொண்டதாக கட்டமைக்கப்பட்டிருந்தது. இதனை வயல்வெளிகள் வழியாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டாலும், சேறு சகதியில் சிக்கிவிடும் என்று கருதப்பட்டது.

08. வெற்றி

08. வெற்றி

ஒருவழியாக முறையாக திட்டமிட்டு இதனை நகர்த்த தொடங்கினர். மூன்று வார பயணத்திற்கு பின்னர் பல்வேறு சவால்களை கடந்து 14 மைல் தூரத்தை அடைந்து, புதிய சுரங்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. சுரங்கப் பணிகளில் பெரும்பாலும் ராட்சத எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், பயன்படுத்தப்படும் சில வாகன வகைகளையும், அதன் பயன்பாட்டையும் தொடர்ந்து காணலாம்.

 09. ஆர்டிகுலேட்டிங் டிரக்

09. ஆர்டிகுலேட்டிங் டிரக்

ஹைட்ராலிக் இணைப்பு மூலமாக பின்புறத்தில் மிகப்பெரிய பக்கெட்டும், கேபினும் தனித்தனியாக இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலமாக, கரடுமுரடான சுரங்கப் பகுதிகளில் மிக எளிதாகவும், நிலையாகவும் செல்லும். ஓட்டுவதும், பாரத்தை இறக்குவதும் மிக மிக எளிதாக இருக்கும்.

10. ஆர்டிகுலேட்டிங் டிரக் தொடர்ச்சி

10. ஆர்டிகுலேட்டிங் டிரக் தொடர்ச்சி

இதன் விசேஷமான ராட்சத சக்கரங்களும், டயர்களும் எந்த ஒரு சாலையிலும் கண்ணை மூடிக் கொண்டு எந்த சாலையிலும் செலுத்த உதவுகிறது. அதிக பாரத்தை மிக எளிதாக கொண்டு செல்வதற்கு இது பயன்படுகிறது. இவை 6 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. 40 டன் எடையை கொண்ட அசாதாரணமாக எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. இதில், வால்வோ டிரக்குகள் மிகவும் பிரபலம்.

11. டிராக் செயின் புல்டோசர்

11. டிராக் செயின் புல்டோசர்

டயர் பொருத்தப்பட்ட மாடல் மற்றும் டிராக் செயின் மூலமாக இயங்கும் மாடல்களில் புல்டோசர் கிடைக்கிறது. இதில், டிராக் செயின் மாடல் அதிக தரைப்பிடிமானத்தை வழங்கும். மேலும், சேறு, சகதி மற்றும் கரடுமுரடான சாலைகளில் செலுத்த முடியும். அவ்வளவு எளிதாக மாட்டிக் கொள்ளாது.

12. டயர் பொருத்தப்பட்ட புல்டோசர்

12. டயர் பொருத்தப்பட்ட புல்டோசர்

டிராக் செயின் மாடலைவிட இந்த புல்டோசர் மாடல் விரைவாக செல்லும் திறன் கொண்டது. இதன் இரு பிரிவுகள் ஹைட்ராலிக் சிஸ்டம் மூலமாக இணைக்கப்பட்டிருக்கிறது. இதனால், எளிதாக திருப்ப முடியும். இதன் ராட்சத பக்கெட்டுகள் மூலமாக வெகு எளிதாக அதிக பாரத்தை டிரக்குகளில் ஏற்ற முடியும்.

13. கேபிள்/ ஹேமர் டிராக்டர்

13. கேபிள்/ ஹேமர் டிராக்டர்

மின்சார வயர்கள், இழுவை மற்றும் கேபிள் பதிப்பு பணிகளுக்காக பயன்படுகிறது. ஜேசிபி வாகனம் போன்ற வாகனத்தின் மற்றொரு பயன்பாட்டு வடிவம்தான் இது. ஜேபியின் முன்பக்கத்தில் பக்கெட்டிற்கு பதிலாக, இழுவைக்கும், கேபிள்களை பதிப்பதற்கும் வசதியுடைய வடிவமைப்பு கொண்ட கருவி பொருத்தப்பட்டிருக்கிறது.

14. டிராக்லைன்

14. டிராக்லைன்

இது அகழ்வு எந்திரம். நிலக்கரி, மணல் சுரங்கங்களில் இந்த வகை எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. கிரேன் போன்ற சாதனத்தில் கம்பி வடங்கள் மூலமாக பிணைக்கப்பட்ட பிளேடுடன் கூடிய அகழ்வு தொட்டி பொருத்தப்பட்டிருக்கிறது.

 15. போர்வெல் எந்திரம்

15. போர்வெல் எந்திரம்

மலைகள் மற்றும் பாறைகள் செரிந்த பகுதியில் அகழ்வு பணிகளின்போது, வெடி வைத்து தகர்ப்பதற்காக முதலில் ராட்சத போர்வெல் எந்திரங்களை கொண்டு துளைகள் போடப்படும். இதற்கான எந்திரங்கள் மிகவும் திறன் கொண்டவையாக தயாரிக்கப்படுகின்றன. எவ்வளவு கடினமான பாறையிலும் துளை போட்டுவிடும்.

16. தம்ப் டிரக்

16. தம்ப் டிரக்

இது பரவலாக அனைத்து சுரங்கங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிக பாரத்தை ஏற்றிச் செல்வதற்கும், எளிதாக இறங்குவதற்கும் இந்த தம்ப் டிரக்குகள் பயன்படுவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நம்மூரில் டிப்பர் என்போமே, அதேபோன்று ஹைட்ராலிக் சிஸ்டத்தின் மூலமாக பாரத்தை பின்புறமாக கொட்டிவிடுவதற்கு ஏதுவான அமைப்பு கொண்டது. மிக திறன் கொண்ட எஞ்சின் மற்றும் உறுதிமிக்கதாக தயாரிக்கப்படுகின்றன. 450 டன் ஏற்றும் திறன் கொண்ட தம்ப் டிரக்ககுகள் வரை தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

17. மோட்டார் கிரேடர்

17. மோட்டார் கிரேடர்

நிலத்தை சமன்படுத்துவதற்கு பயன்படும் எந்திரம்தான் இந்த மோட்டார் கிரேடர். சுரங்கங்கள் மட்டுமின்றி, சாலை அமைக்கும் பணிகளிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

18. மாஸ் எக்ஸவேட்டர்

18. மாஸ் எக்ஸவேட்டர்

ராட்சத அகழ்ந்து எடுக்கும் பொக்லின்தான் இவ்வாறு அழைக்கப்படுகிறது. வாய்க்கால், குளங்களை தூர்வாரும் பணிகளுக்கு பயன்படுத்துவதைவிட இது வடிவத்திலும், திறனிலும் பன்மடங்கு பெரியது. வெகுவேகமாகவும், எளிதாகவும் பாரத்தை டிரக்குகளில் ஏற்ற பயன்படுகிறது. இதற்கு தகுந்தாற்போல் முன்புறத்தில் வலுவான பக்கெட்டும், அகழ்ந்து எடுப்பதற்கான கூர்மையான உலோக பாகங்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

19. ஸ்க்ராப்பர்

19. ஸ்க்ராப்பர்

ஒற்றை எஞ்சின், இரட்டை எஞ்சின் மாடல்களில் வருகிறது. இதுவும் நிலத்தை சமன்படுத்துவதறகும், பாரத்தை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுகின்றன.

20. எலிவேட்டிங் ஸ்க்ராப்பர்

20. எலிவேட்டிங் ஸ்க்ராப்பர்

தரையிலிருந்து மண்ணை சமன்படுத்துவதோடு அல்லாமல், அந்த மண்ணை, பின்புறத்தில் உள்ள பக்கெட்டில் அகழ்ந்து எடுத்து நிரப்பிக் கொள்ளும் விசேஷ அமைப்புடையது.

21. விசேஷ ஸ்க்ராப்பர்

21. விசேஷ ஸ்க்ராப்பர்

இந்த ஸ்க்ராப்பரில் ட்ராக் செயின் அமைப்பு கொண்டது. எனவே, சேறு, மணல் பாங்கான இடத்திலும் பயன்படுத்தக்கூடிய ஸ்க்ராப்பர் எந்திரம்.

22. ஷவல்

22. ஷவல்

அகழ்ந்து எடுப்பது, அதிக பாரத்தை டிரக்குகளில் ஏற்றுவதற்கு பயன்படும் ராட்சத எந்திரங்கள். இவை மிக அதிக எடையையும், மலையையும் குடைந்து டிரக்குகளில் ஏற்றும். இவற்றை அசெம்பிள் செய்வதற்கான பல கிரேன்கள் உதவி தேவைப்படும் என்றால், இதன் உருவத்தை பார்த்துக் கொள்ளுங்கள். மலை விழுங்கி மகாதேவன் என்றால் பொருத்தமாக இருக்கும். ஏனெனில், ஒரு பெரிய மலையை கூட ஒரு சில நாட்களில் இருந்த இடம் தெரியாமல் தரை மட்டமாக்கும் வல்லமை கொண்டது.

23. நிலத்தடி சுரங்க அகழ்வு எந்திரம்

23. நிலத்தடி சுரங்க அகழ்வு எந்திரம்

நிலத்திற்கு அடியில் தோண்டப்படும் சுரங்கங்களில் இந்த எந்திரம் பயன்படுகிறது. முன்புறத்தில் சக்கரம் போன்ற அமைப்பில் இருக்கும் கூர்மையான அகழ்வு எந்திரங்கள் தொடர்ந்து இயங்கி சுரங்கத்தை ஏற்படுத்தும்.

24. பணியாளர் வாகனம்

24. பணியாளர் வாகனம்

சுரங்கப் பணிகள் நடைபெறும் இடங்களிலும், சுரங்கத்திற்குள் பணியாளர்களை கொண்டு செல்வதற்கும் இந்த வாகனம் பயன்படுகிறது.

 25. ஸ்கேலர்

25. ஸ்கேலர்

குறிப்பிட்ட கடினமான இடத்தை உடைத்து நொறுக்குவதற்கும், துல்லியமாக பாறைகளை துளைத்து எடுப்பதற்கும் இந்த எந்திரம் பயன்படுகிறது.

26. சிசர் லிஃப்ட்

26. சிசர் லிஃப்ட்

சுரங்கத்திற்குள் கூரை பகுதியை சிறிய எந்திரங்களை கொண்டு அகழ்ந்து எடுப்பதற்கு ஏதுவாக மனிதர்கள் நின்று பணியாற்றும் வசதியை தருகிறது. உயரம் குறைவான சுரங்கத்திற்குள் கொண்டு சென்று பின்னர் உயரத்தை தேவைக்கு ஏற்ப வைத்துக் கொண்டு நின்று பணியாற்றலாம்.

27. ஷாட்க்ரெட்டர்

27. ஷாட்க்ரெட்டர்

அகழ்ந்து எடுக்கப்பட்ட சுரங்கத்தின் பக்கவாட்டு மற்றும் கூரைப்பகுதி பெயர்ந்து விழாமல் கான்க்ரீட் கலவையை ஸ்பிரே செய்து வலிமையாக்குவதற்காக பயன்படும் எந்திரம்.

28. டேங்கர்

28. டேங்கர்

சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீர் வாகனம். அதிக பாரம் ஏற்றும் தம்ப் டிரக்கையே தண்ணீர் டேங்கராக மாற்றியிருக்கின்றனர்.

29. சுரங்க வாகன தயாரிப்பாளர்கள்

29. சுரங்க வாகன தயாரிப்பாளர்கள்

சுரங்க வாகன தயாரிப்பில் கேட்டர்பில்லர், ஜான் டியர், வால்வோ, கொமட்சூ, கேஸ் ஆகிய நிறுவனங்கள் மிகவும் பிரபலமாக விளங்குகின்றன.

30. பிறப்பு முதல் இறப்பு வரை

30. பிறப்பு முதல் இறப்பு வரை

குழந்தை பிறந்தது முதல் வளர்ந்து முதிரும் வரை பயன்படும் சுரங்கத் தாதுப்பொருட்கள்

800 பவுண்ட் காரீயம்

750 பவுண்ட் துத்தநாகம்

1,500 பவுண்ட் அலுமினியம்

32,7000 பவுண்ட் இரும்பு

26,500 பவுணட் களிமண்

28,213 பவுண்ட் தாது உப்புகள்

1,238,101 பவுண்ட்டுகள் கற்கள், மணல், சரளை கற்கள் மற்றும் சிமென்ட் பயன்படுகிறதாம்.

31. உலகின் மிகப்பெரிய சுரங்கம்

31. உலகின் மிகப்பெரிய சுரங்கம்

உலகின் மிகப்பெரிய சுரங்கப் பணிகள் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. கார்ஸ்வெயிலர் ஸ்ட்ரிப் என்ற சுரங்கப் பணிகள்தான் அது. லிக்னைட் எடுப்பதற்காக இந்த சுரங்கப் பணிகள் நடக்க உள்ளன. இதற்காக 48 கிமீ² பரப்புக்கு சுரங்கப் பணிகள் நடைபெற இருப்பதால், அங்குள்ள கிராம மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். இதிலிருந்து 1.3 மில்லியன் டன் லிக்னைட் எடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. சுரங்கப் பணிகள் முடிந்த பின்னர், இதனை ஏரியாக மாற்ற முடிவு செய்துள்ளனர். அந்த சமயத்தில் ஜெர்மனியின் இரண்டாவது பெரிய ஏரி என்ற பெருமையை இது பெறும்.

32. மிர் சுரங்கம்- ரஷ்யா

32. மிர் சுரங்கம்- ரஷ்யா

உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கமாக குறிப்பிடப்படுகிறது. தற்போது இந்த சுரங்கம் மூடப்பட்டாலும், இதனை பற்றிய செய்திகளில் சுவாரஸ்யங்கள் பொதிந்து கிடக்கின்றன.

33. இரண்டாவது பெரிய குழி

33. இரண்டாவது பெரிய குழி

உலகின் இரண்டாவது பெரிய குழியாக மிர் மைன் குறிப்பிடப்படுகிறது. காரணம், இந்த வைர சுரங்கம் ஒரு பிரம்மாண்ட குழியாகவே தோண்டப்பட்டிருக்கிறது. கடந்த 1955ல் சோவியத் யூனியனை சேர்ந்த புவியியல் நிபுணர்களான யூரி கபார்டின், எலாஜினா, விக்டர் ஆகியோர் புவி ஆராய்ச்சிக்காக இந்த பகுதிக்கு வந்துள்ளனர்.

34. கண்டுபிடிப்பு

34. கண்டுபிடிப்பு

அப்போது எரிமலை வெடிப்பு காரணமாக உருவான ஒரு இடத்தை ஆய்வு செய்தபோது கிம்பர்லைட் எனப்படும் எரிமலையை கண்டறிந்துள்ளனர். இது வைரத்துடன் தொடர்புடைய எரிமலை பகுதி என்பதால், அங்கு வைரம் இருக்கும் என்று அனுமானித்து இந்த வைரச் சுரங்கத்திற்கு பிள்ளையார் சுழி போட்டனர்.

 35. சவால்கள்

35. சவால்கள்

சைபீரிய பகுதியில் அமைந்திருக்கும் இந்த மிர் சுரங்கம் மிக மோசமான சீதோஷ்ண நிலை கொண்ட பகுதி, ஆண்டின் பெரும்பாலான நாட்கள் உறைநிலையில், குளிர் நிலவும் பிரதேசம். எனவே, அங்கு அகழ்வு பணிகளை மேற்கொள்வது மிக சவாலான விஷயமாக இருந்தது. கோடை காலத்திலும் அங்கு குடில்களை அமைக்க முடியாத நிலை. மிகுந்த சிரத்தைக்கு பின்னர் கோடை காலங்களில் ஆய்வு செய்தனர்.

36. பணிகள்

36. பணிகள்

பகலில் மட்டுமே பணிகள் நடைபெறும். இரவில் எந்திரங்களை மூடாக்கு போட்டு மூடிவிடுவார்கள். இல்லையெனில், எந்திரங்கள் மூர்ச்சையாகிவிடும் நிலை இருந்துள்ளது. பல சவால்களை கடந்து இந்த சுரங்கத்தை தோண்டினர்.

37. வைர படிமானம்

37. வைர படிமானம்

மேல்புறத்தில் கிம்பர்லைட் அடுக்கை தோண்டியெடுத்தபோது, தரையிலிருந்து 340 மீட்டர் ஆழத்தில் உயர் வகை வைர படிமானம் இருந்துள்ளது.

38. ஆழம்

38. ஆழம்

இந்த வைர சுரங்கம் 525 மீட்டர் ஆழமும், 1,200 மீட்டர் விட்டமுடையதாக தோண்டப்பட்டது. உலகிலேயே நான்காவது பெரிய அகழ்வு பணியாகவும், உலகினஅ இரண்டாவது பெரிய குழியாகவும் இது குறிப்பிடப்படுகிறது. குளிர்காலத்தில் இந்த சுரங்கத்தில் மைனஸ் 40 டிகிரி அளவுக்கு குளிர் நிலவுமாம்.

தம்ப் டிரக்கும், மிர் சுரங்கமும்...

தம்ப் டிரக்கும், மிர் சுரங்கமும்...

மிர் வைர சுரங்கத்திற்குள் எறும்பு போல நிற்கும் ராட்சத தம்ப் டிரக். சுரங்கத்தின் பிரம்மாண்ட்டத்தை காட்டும் ஒரு சாம்பிள்.

39. எல்லாமே பிரம்மாண்டம்தான்...

39. எல்லாமே பிரம்மாண்டம்தான்...

சுரங்கத் தொழில் என்று வந்தாலே, அதில் பயன்படுத்தப்படும் வாகனங்கள், வருவாய் என எல்லாமே பிரம்மாண்டம்தான். எனினும், சுரங்கத் தொழிலில் செல்வ வளம் கொழிப்பதில் உலகிலேயே தென் ஆப்பிரிக்கா முதலிடம் வகிக்கிறது. உலகிலேயே அதிக பிளாட்டினம் உற்பத்தி செய்யும் நாடாகவும், தஹ்கம், வைரம் மற்றும் நிலக்கரி எடுப்பதில் முன்னிலை வகிக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் இருக்கும் கனிம வளத்தின் மதிப்பு 2.5 டிரில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

40. இதர நாடுகள்

40. இதர நாடுகள்

தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து அதிக கனிம வளம் நிறைந்த உலகின் இரண்டாவது நாடு என்கிற பெருமையை ரஷ்யா பெறுகிறது. இங்குள்ள கனிம வளத்தின் மதிப்பு 794 பில்லியன் டாலர்களாக தெரிவிக்கப்படுகிறது. உலகிலேயே அதிக நிக்கல் படிமான செறிவை பெற்றிருக்கும் நாடு ரஷ்யா. அந்நாட்டு பொருளாதாரத்தில் சுரங்கத் தொழிலில் முக்கிய இடம் வகிக்கிறது. மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா இருக்கிறது. நிக்கல், பாக்சைஸ், தங்க படிமானங்கள் செறிந்த நாடு. ஆஸ்திரேலியாவின் கனிம வள மதிப்பு 737 பில்லியன் டாலர்களாக தெரிவிக்கப்படுகிறது.

41. இந்தியாவில் சுரங்கத் தொழில்

41. இந்தியாவில் சுரங்கத் தொழில்

நம் நாட்டு பொருளாதாரத்தில் சுரங்கத் தொழிலும் முக்கிய பங்களிப்பை தந்து வருகிறது. நம் நாட்டின் மொத்த உற்பத்தியில் சுரங்கத் தொழிலில் 10 முதல் 11 சதவீதம் பங்களிப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகிலேயே மைக்கா ஷீட் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இதேபோன்று, இரும்பு தாது உற்பத்தியில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய நாடு. பாக்சைட் உற்பத்தியில் உலகின் ஐந்தாவது பெரிய நாடாகவும் விளங்குகிறது.

42. நவீன மயம்

42. நவீன மயம்

சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியாவில் சுரங்கத் தொழில் வெகு வேகமாக வளர்ச்சி கண்டதுடன், மெல்ல நவீனமயமாகியது. 1991 மற்றும் 1993ம் ஆண்டு செய்யப்பட்ட பொருளாதார கொள்கைகளில் மாற்றம் காரணமாக, சுரங்கத் தொழில் வேகமாக வளர்ந்ததுடன், நவீனமயமாக்கவும் உதவியது. இந்தியாவில் 3,100 சுரங்கங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இதுதவிர, ஆயிரக்கணக்கான சிறிய அளவிலான சுரங்கங்களும் உள்ளன. இதில், கச்சா எண்ணெய் எடுப்பதற்கான துரப்பணப் பணிகளும் அடங்கும். இந்த துறையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

43. மெகா ஊழல்கள்

43. மெகா ஊழல்கள்

செல்வ வளம் கொழிக்கும் சுரங்கத் தொழிலில் ஏராளமான மெகா ஊழல்களும் நடந்து நாட்டையே பரபரப்புக்குள்ளாகியிருக்கின்றன. சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்வதிலும், மதிப்பிடுவதிலும் மெகா ஊழல் நடக்கும் துறையாக இருக்கிறது. சமீபத்திய நிலக்கரி ஊழலும் இதற்கு சாட்சியாக உள்ளது. இதனால், அரசுக்கு 1.86 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக, மத்திய தணிக்கை துறை பகீர் தகவலை வெளியிட்டது. இது ஒரு சாம்பிள்தான். அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, நக்சலைட்டு இயக்கங்களும், சுரங்க அதிபர்களை மிரட்டி கோடிகளை கறக்கும் சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்டன.

44. சுரங்க வாகனங்கள்

44. சுரங்க வாகனங்கள்

இந்தியாவிலும் சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் வாகன தயாரிப்பு மிகப்பெரிய துறையாக இருக்கிறது. இந்த துறையில் பாரத் பென்ஸ், மேன், BEML, எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், வால்வோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. இதனால், இந்திய வாகன தயாரிப்புத் துறையிலும் சுரங்கத் தொழில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

உலகின் மிகப்பெரிய தம்ப் டிரக்

உலகின் மிகப்பெரிய தம்ப் டிரக்!

வாசகர்கள் அதிகம் பார்வையிட்ட எங்களது படத் தொகுப்புகளை தொடர்ந்து காணலாம்.

புதிய பஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்களை காணலாம்.

விரைவில் விற்பனைக்கு வரும் புதிய டாடா டிகோர் காரின் பிரத்யேகமான படங்களின் தொகுப்பை இந்த கேலரியில் காணலாம்.

டாடா ஹெக்ஸா காரின் படங்களை இந்த கேலரியில் காணலாம்.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்களை கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Amazing & Interesting Facts of Mining Vehicles That You Had No Idea About!!!

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more