எளிமையில் ரஜினிகாந்துக்கே சவால் விடும் அமேஸான் அதிபர் ஜெஃப் பேசோஸ்!
உலகின் பெரும் பணக்காரர் என்ற பெருமையை மீண்டும் பிடித்துள்ள அமேஸான் அதிபர் ஜெஃப் பேசோஸ் பயன்படுத்தும் கார்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. அவரது கார்கள் மற்றும் அவர் வாங்கியிருக்கும் தனி நபர் விமானம் பற்றிய
உலகின் பெரும் பணக்காரர் வரிசையில் முதலிடத்தில் உள்ள மைக்ரோசாஃப்ட் அதிபர் பில்கேட்ஸுக்கு அமேஸான் இணையதள அதிபர் ஜெஃப் பேசோஸ் கடும் போட்டியை கொடுத்து வருகிறார். கடந்த ஜூலையில் அமேஸான் பங்குகள் ஜிவ்வென உயர்ந்ததால், பில்கேட்ஸை சொத்து மதிப்பில் வீழ்த்தி முதலிடத்தை ஒரு நாள் பிடித்தார்.

இந்த நிலையில், அதேபோன்று பில்கேட்ஸை வீழ்த்தி, உலகின் பெரும் பணக்காரர் என்ற பெருமையை மீண்டும் பெற்றிருக்கிறார் அமேஸான் இணையதள நிறுவன அதிபர் ஜெஃப் பேசோஸ். கணிணி தொழில்நுட்ப வல்லுனர், முதலீட்டாளர், சிறந்த வழிகாட்டி, கொடையாளர் என்ற பன்முக சிறப்புகளை பெற்றவர்.

அமைதிப்படை திரைப்படத்தில் எம்எல்ஏ,வாக வெற்றி பெற்றவுடன் நடிகர் சத்யராஜின் கேரக்டர் தலைகீழாக மாறும். ஆதரித்து அரவணைத்த மணிவண்ணனையே அவர் உதாசீனப்படுத்துவார். அதேபோன்று, நிஜ வாழ்க்கையிலும் பலர் பணம், பதவி, புகழ் வரும்போது தங்களது வாழ்க்கை முறையை அடியோடு மாற்றிக் கொள்வதை பார்த்து வருகிறோம்.

பணம் வந்தவுடன், பிரம்மாண்ட வீடு கட்டியவுடன், அவர்களது அடுத்த தங்களது அந்தஸ்துக்கு ஏற்ற விலை உயர்ந்த காரை வாங்குவதுதான் இலக்காக இருக்கிறது. ஆனால், பெரும் பணக்காரர்களில் சிலர் தங்களது பழைய வாழ்க்கை முறையில் அதிக மாற்றம் இல்லாமல் வாழ்ந்து வருவது ஆச்சரியப்படுத்தும் விஷயமாக இருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டாளர் வாரன் பஃபெட், நம் நாட்டை சேர்ந்த விப்ரோ அதிபர் அஸிம் பிரேம்ஜி உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் வரிசையில், அமேஸான் இணையதள அதிபர் ஜெஃப் பேசோஸ் மிக எளிமையானவராக இருக்கிறார்.

ஆம். இன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபர் பில் கேட்ஸுக்கு இணையான சொத்து மதிப்புடன் வலம் வரும் ஜெஃப் பேசோஸ் வைத்திருக்கும் கார்களை பார்த்தால், ஆச்சரியம் பீறிடுகிறது. அவர் அன்றாடம் பயன்படுத்தும் கார் மாடல்கள் இந்த ஆச்சரியத்துக்கு காரணம்.

1988ம் ஆண்டு செவர்லே பிளேசர் எஸ்யூவி மாடலை ஏற்கனவே பயன்படுத்தி வந்துள்ளார் ஜெஃப் பேசோஸ். இந்த எஸ்யூவியை மிகவும் நேசிப்பதாகவும், இதன் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும் என்று அவர் கூறி இருந்தார்.
தொடர்புடைய இதர செய்திகள்:

இந்த எஸ்யூவியில் நீண்ட தூர பிரயாணங்கள் செல்வதும் அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. அவ்வாறு ஒருமுறை அவர் சியாட்டில் நகரில் இருந்து நியூயார்க் நகருக்கு பயணித்துள்ளார். இந்த எஸ்யூவியில் 125 பிஎச்பி பவரை அளிக்கும் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆகியவை கொண்டது. 1988ம் ஆண்டு இந்த காரை 12,700 அமெரிக்க டாலர் மதிப்பில் அவர் வாங்கியிருக்கிறார். இந்த எஸ்யூவி மிக நீண்ட காலம் பயன்படுத்தி இருக்கிறார்.

சரி, செவர்லே பிளேசர் எஸ்யூவி அவரது வளர்ச்சியின் ஆரம்ப காலத்தில் வாங்கிய மாடலாக நாம் கருதினாலும், அடுத்து அவர் வாங்கி பயன்படுத்திய கார் மாடலும், ஆச்சரியப்படுத்தும் விஷயமாக இருக்கிறது.

ஆம், அடுத்து அவர் ஹோண்டா அக்கார்டு செடான் காரை வாங்கி பயன்படுத்தி வருகிறார். 1996ம் ஆண்டு மாடலான இந்த காரில்தான் அவரை அதிகம் பார்க்க முடியும் என்று அவரின் வளர்ச்சி பற்றி எழுதும் பத்திரிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.

இதுகுறித்து ஒருமுறை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை ஜேப் பேசோஸிடம் நேர்முகம் நடத்தியது. அப்போது, அமேஸான் நிறுவனம் பங்குகளை வெளியிட்டதற்கு பின் உங்களது வாழ்க்கை முறை எவ்வாறு மாறி இருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர், "எந்த மாற்றமும் இல்லை. நான் இன்னமும் ஹோண்டா அக்கார்டு காரையே பயன்படுத்தி வருகிறோம். ஒரேயொரு மாற்றம் எனது வங்கி கணக்கில் பெரும் தொகை இருக்கிறது. அதுதான் பெரிய மாற்றம்"! என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அதன் பிறகு அமேஸான் நிறுவனத்தின் வெளிநாட்டு வர்த்தம் மற்றும் அலுவல் தேவை கருதி அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வதற்காக தனிநபர் விமானம் ஒன்றை வாங்கி பயன்படுத்தி வருகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி650இஆர் என்ற தனி நபர் சொகுசு விமானத்தை வாங்கி பயன்படுத்தி வருகிறார். இந்த விமானம் 66.5 மில்லியன் டாலர்கள் விலை மதிப்பு கொண்டது.

இந்த விமானத்தின் மிக முக்கிய அம்சம், மிக நீண்ட தூரம் பயணிக்கும் திறன் வாய்ந்த தனி நபர் ஜெட் விமானம். ஆம், இந்த விமானம் இடை நில்லாமல் 13,890 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் வாய்ந்தது. பிசினஸ் ஜெட் விமான ரகத்தில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் மாடலாக மார் தட்டுகிறது.

அதிகபட்சமாக மணிக்கு 1,049 கிமீ வேகத்தில் பறக்கக்கூடியது. இந்த விமானத்தில் 8 பயணிகளும், 4 விமான ஊழியர்களும் பயணிக்கலாம். இந்த விமானத்தில் மிக சொகுசான இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

அலுவலக பணிகளை பார்ப்பதற்கு ஏதுவாக மேஜை வசதி, உணவு அருந்தும் இடம், பயணிகள் உறங்கியபடி பயணிக்கும் வசதி என மிகச் சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும். வாடிக்கையாளர் விருப்பத்தின் அடிப்படையில், படுக்கை வசதியுடன் கூடிய மாடலும் கஸ்டமைஸ் செய்து தரப்படுகிறது.

கார், விமானம் போன்றவை தேவை கருதி அவர் வாங்கி பயன்படுத்தும் விஷயம். இந்த நிலையில், உபேர் டாக்சி நிறுவனத்திலும் ஜெஃப் பேசோஸ் முதலீடு செய்துள்ளார். அதேபோன்று, போக்குவரத்து துறைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

இதையெல்லாம்விட, பயண விரும்பியான ஜெஃப் பேசோஸ், விண்வெளி சுற்றுலா திட்டத்தை கையில் எடுத்து புளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பெரும் முதலீடு செய்து தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தின் மூலமாக விண்வெளி சுற்றுலாவுக்கான விண்கலத்தை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார். இந்த திட்டமும் ஓரிரு ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் வாய்ப்புள்ளது.

தவிரவும், பொருட்களை வியாபாரம் செய்யும் இணையதள உலகில் முதல்முறையாக ட்ரோன் சாதனங்கள் பொருட்களை டெலிவிரி செய்யும் முறையையும் அறிமுகம் செய்து உலகை ஆச்சரியப்பட வைத்தார்.
தொடர்புடைய இதர செய்திகள்:


Click it and Unblock the Notifications








