ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ரிட்டையர்டு போர் விமானங்களை பயன்படுத்தும் அமெரிக்கா!
உலகையே அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்கு ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாட்டாமைகள் முழு முனைப்போடு களமிறங்கி செயலாற்றி வருகின்றன.
ராணுவ பலத்தில் ஜாம்பாவனாக விளங்கினாலும் உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பாக வலுவாக நிற்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை வேரறுப்பதில் பல நாடுகள் திக்கி திணறி வருகின்றன. இதற்காக, பல்வேறு ராணுவ யுக்திகளையும் ராணுவ பலத்தில் ஜாம்பவானாக விளங்கும் நாடுகள் பின்பற்றி வருகின்றன. இந்தநிலையில், ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், பழமையான போர் விமானங்களை அமெரிக்கா பயன்படுத்துவது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

விமான மாடல்
இந்த விமானத்தை ராக்வெல் ஓவி-10 பிரான்கோ என்ற பெயரில் அழைக்கப்டுகிறது. இது இலகு வகை தாக்குதல் போர் விமான ரகத்தை சேர்ந்தது. அதிகபட்சமாக 3 டன் எடையுடைய வெடிப்பொருட்களை சுமந்து செல்லும் ஆற்றல் வாய்ந்தது.

விண்டேஜ் விமானங்கள்
கடந்த 1965ம் ஆண்டு முதல்முறையாக வெற்றிகரமாக பறந்த இந்த விமானம் 1969ம் ஆண்டு அமெரிக்க ராணுவ பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த1995ல் இந்த வகை விமானங்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டாலும், குறிப்பிட்ட நேரங்களில் அத்தி பூத்தாற் போல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வியட்நாம் போர்
வியட்நாம் போரில் இந்த விமானத்தின் பங்கு மிக முக்கியமானதாக அமைந்திருத்ததை ராணுவ வரலாற்று ஆய்வாளர்களும், பாதுகாப்புத் துறை நிபுணர்களும் மறக்காமல் குறிப்பிடுகின்றனர். சரி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த இந்த விமானத்தை ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்துவதற்கான விஷயங்களை பார்க்கலாம்.

வசதி
அமெரிக்காவின் நவீன போர் விமானங்களைவிட இந்த ஓவி10 போர் விமானம் மிக தாழ்வாகவும், குறைவான வேகத்திலும் பறந்து இலக்குகளை தாக்கும். மேலும், தரையிலிருக்கும் ராணுவ துருப்புகள் முன்னேறுவதற்கு ஒத்துழைப்பையும், உளவுத் தகவல்களையும் இந்த விமானம் எளிதாக பரிமாறிக் கொள்ளும்.

மற்றொரு சிறப்பம்சம்
போர் முனைகளுக்கு அருகிலிருந்து இந்த விமானத்தை இயக்க முடியும் என்பது மற்றொரு சிறப்பம்சம். ஈராக்கில் அமெரிக்க ராணுவ வீரர்கள் சுற்றி வளைக்கும்போது, தப்பிச் செல்லும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை வானிலிருந்து சுட்டு வீழ்த்தும் பணிகளில் இந்த விமானம் ஈடுபட்டிருக்கிறது. ஆனால், எந்த இடத்திலிருந்து இயக்கப்படுகிறது என்பது படு ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கிறது.

பார்வை திறன்
தாழ்வாக பறக்கும்போது இலக்குகளை துல்லியமாக காணும் வகையில், இதன் காக்பிட் வடிவமைப்பு இருக்கிறது. இது போர் விமானிகளுக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குதல் செலவு
அமெரிக்காவின் எஃப்15 எஸ் மற்றும் எஃப்/ஏ- 18எஸ் போன்ற நவீன வகை போர் விமானங்களை இயக்குவதற்கு மணிக்கு 40,000 டாலர்களை செலவிட வேண்டும். ஆனால், இந்த விமானத்தை இயக்குவதற்கு மணிக்கு 1,000 டாலர்கள் மட்டுமே செலவாகும் என்பதும் மிக முக்கிய காரணமாம்.

ஆயுதங்கள்
இந்த விமானத்தில் 7.62மிமீ விட்டமுடைய நான்கு எந்திர துப்பாக்கிகள், நான்கு ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் ஏவுகணைகளை பொருத்த முடியும். இதன்மூலம், இலக்குகளையும், எதிரிகளையும் துல்லியமாக அடிக்க முடியுமாம்.

மூச்சுவிடாமல் பறந்த ஓவி10
கடந்த மே மாதம் முதல் இதுவரை 82 நாட்கள் இந்த விமானத்தை பயன்படுத்தியிருக்கின்றனர். இதுவரை 134 முறை பறந்து, 120 தாக்குதல் பணிகளை சத்தமில்லாமல் நடத்தி முடித்திருக்கிறதாம்.

ரெட்டை வால் விமானம்
இந்த விமானம் இரண்டு வால் பகுதிகளை கொண்டதாகவும் மிக விததியாசமான வடிவமைப்பு கொண்டது. தற்போது இரண்டு ஓவி10 போர் விமானங்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.

இரண்டு பேர் இயக்கலாம்
இந்த விமானத்தை இரண்டு பேர் இயக்க முடியும். ஒருவர் பைலட்டாகவும், மற்றொருவர் வழிகாட்டி மற்றும் ஆயுதங்களை இயக்குபவராகவும் இருப்பார்கள். தற்போது பயன்படுத்தப்படும் விமானங்கள் 1965ம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிக்கப்பட்டவையாம்.

வேகம்
இந்த விமானம் மணிக்கு 452 கிமீ வேகம் வரை பறக்கும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 1,382 கிமீ தூரம் வரை செல்லும். அதிகபட்சமாக 30,000 அடி உயரம் வரை பறக்க வைக்க முடியும்.

பல நாடுகளிடம்...
அமெரிக்கா மட்டுமின்றி, இந்த விமானங்களை பல நாடுகள் வாங்கி வைத்திருக்கின்றன. பல நாடுகளில் பயன்பாட்டில் இருக்கின்றன. மேலும், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவிடமும் இந்த விமானங்கள் உள்ளன. நாசா வைத்திருந்த விமானங்களே இப்போது பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி
உலகின் காஸ்ட்லியான டாப் 10 போர் விமானங்கள்!


Click it and Unblock the Notifications








