விமானத்தில் இருந்து இறக்கி விட்டதால் கைக்குழந்தையுடன் தவித்த தம்பதி... இரக்கமற்ற பயணிகளால் விபரீதம்
விமானத்தில் இருந்து திடீரென இறக்கி விடப்பட்டதால், தங்கள் கைக்குழந்தையுடன் தம்பதியினர் தவிப்பிற்கு ஆளாகினர். இரக்கமற்ற பயணிகள் சிலரால், அவர்களுக்கு இந்த சோகம் ஏற்பட்டது.

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்டு (Detroit) நகரை சேர்ந்தவர் யோஷி அட்லர். இவரது மனைவி ஜென்னி. யோஷி அட்லர்-ஜென்னி தம்பதியினருக்கு சுமார் ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த சூழலில் யோஷி அட்லர் தனது குடும்பத்துடன் மியாமி நகருக்கு சுற்றுலா சென்றார். பின்னர் கடந்த புதன் கிழமை இரவு (23ம் தேதி), அங்கிருந்து டெட்ராய்டு திரும்ப அவர்கள் ஆயத்தமாயினர். இதற்காக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் யோஷி அட்லர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.

சரியான நேரத்திற்கு விமான நிலையம் சென்றடைந்து விட்ட யோஷி அட்லர் குடும்பத்தினர், வழக்கமான பரிசோதனைகளை முடித்து கொண்டு, விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தனர். ஆனால் விமானம் புறப்பட தயாரான சூழலில், யோஷி அட்லர் குடும்பத்தினர் மட்டும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டனர்.

அத்துடன் விமானத்தின் கதவுகளை மூடிய விமான ஊழியர்கள், யோஷி அட்லர் குடும்பத்தினரை விமான நிலையத்தின் வாயிலுக்கு அனுப்பி வைத்தனர். கைக்குழந்தையுடன் இருந்த தங்களை திடீரென விமானத்தில் இருந்து இறக்கி விட்டதால், யோஷி அட்லர் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

இதன் காரணமாக கைக்குழந்தையுடன் விமான நிலையத்தில் அவர்கள் தவிக்க நேரிட்டது. பின்னர் தங்களை விமானத்தில் இருந்து இறக்கி விட்டது ஏன்? என்பது தொடர்பாக, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவன அதிகாரிகளிடம் யோஷி அட்லர் விசாரித்தார்.

அப்போது யோஷி அட்லர் குடும்பத்தினரின் உடலில் இருந்து விரும்பத்தகாத மணம் வீசியதாகவும், இதனால் ஒரு சில பயணிகள் புகார் செய்தனர் எனவும் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் உங்களை விமானத்தில் ஏற்ற அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் எனவும் அவர்கள் கூறினர்.

இதன் காரணமாகதான் உங்கள் குடும்பத்தை விமானத்தில் இருந்து இறக்கி விட்டோம் என விமான நிறுவன அதிகாரிகள் யோஷி அட்லரிடம் தெரிவித்தனர். இதனால் தர்ம சங்கடத்திற்கு ஆளான யோஷி அட்லர், தங்கள் மீது எந்த தவறும் இல்லை என கூறி பார்த்தார்.

ஆனால் விமான நிறுவன அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இதன் காரணமாக விமான நிலையத்திலேயே அவர்கள் கைக்குழந்தையுடன் தவிக்க நேரிட்டது. கைக்குழந்தையுடன் தம்பதியை விமானத்தில் இருந்து இறக்கி விட்டதை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

என்றாலும் அன்றைய தின இரவை கழிப்பதற்காக யோஷி அட்லர் குடும்பத்தினருக்கு ஹோட்டல் அறை, உணவு வழங்கியதாகவும், அவர்கள் ஊர் திரும்ப வசதியாக மறுநாள் காலை மற்றொரு விமானத்தில் அவர்களுக்கு டிக்கெட் கொடுத்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக WXYZ-TV Detroit செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக விமான நிலையத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் யோஷி அட்லர் தன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டார். அந்த காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. அதனை நீங்கள் கீழே காணலாம்.
இந்த சம்பவம் அமெரிக்காவை கடந்து உலகம் முழுக்க பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் பயணம் செய்கையில் இதுபோன்று பல்வேறு வழிகளில் தர்ம சங்கடங்கள் ஏற்படலாம். குறிப்பாக முதல் முறை பயணிப்பவர்களுக்குதான் பல்வேறு பிரச்னைகள் உண்டாகும்.

எனவே முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய இருப்பவர்கள், தர்ம சங்கடங்களுக்கு ஆளாவதை தவிர்க்கவும், பிரச்னைகளில் சிக்கி கொள்ளாமல் இருக்கவும் சில வழிமுறைகளை பின்பற்றலாம். இதுகுறித்த தகவல்களை இனி பார்க்கலாம்.

முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்யும்போது தேவையில்லாத அச்சம் ஏற்படும். இந்த அச்சத்தை மூட்டை கட்டி வைத்து விடுங்கள். பயணத்தை உற்சாகமாக அனுபவிக்க தயாராகுங்கள். விமானத்தில் ஏறி அமர்ந்ததும், மூச்சை இழுத்து விட்டு கொண்டு ஆழ்ந்த சுவாசம் எடுத்து கொள்ளலாம்.

விமான நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு, சர்வதேச விமானங்கள் உள்ளிட்ட காரணிகளை பொறுத்து, அனுமதிக்கப்படும் லக்கேஜ் அளவு மாறுபடும். அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக எடுத்து சென்றால், கூடுதல் தொகை செலுத்த வேண்டியதிருக்கும்.

எனவே தேவையான பொருட்களை மட்டும் சரியான அளவில் 'பேக்' செய்து எடுத்து செல்லுங்கள். நீங்கள் பயணம் செய்யவுள்ள விமானத்தில் எவ்வளவு லக்கேஜ் அனுமதிக்கப்படும்? என்பதை முன்பாகவே தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

உள்நாட்டு விமானம் என்றால் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவும், சர்வதேச விமானம் என்றால் 3 மணி நேரத்திற்கும் முன்னதாகவும் விமான நிலையத்திற்கு சென்று விடுவது நல்லது. வழியில் போக்குவரத்து நெரிசல், கார் பிரேக் டவுன் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம்.

எனவே இதையெல்லாம் கணக்கில் கொண்டு சற்று முன்னதாகவே புறப்படுங்கள். இதில், குழப்பம் ஏற்பட்டால் விமானத்தை தவற விடும் சூழல் உருவாகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். முன்னதாகவே விமான நிலையத்திற்கு செல்வதால் எந்த பிரச்னையும் ஏற்பட போவதில்லை.

இன்றைய சூழலில் விமான நிலையங்கள் ஆர்வம் மிக்க இடங்களாக மாறியுள்ளன. ஷாப்பிங், பிரவுசிங் என விமான நிலையங்களில் ஏராளமான வசதிகள் உள்ளன. முன்னதாக விமான நிலையத்திற்கு சென்றால், இவற்றில் பொழுதை கழிக்கலாம்.

அத்துடன் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் மறக்காமல் கொண்டு சென்று விடுங்கள். விமானத்தில் உணவு, ஸ்நாக்ஸ் மற்றும் மது ஆகியவை குறிப்பிட்ட அளவு வழங்கப்படுவதுடன், அவை விற்பனையும் செய்யப்படும். ஆனால் பெரும்பாலும் பணம் ஏற்றுக்கொள்ளப்படாது.

எனவே உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டுகளை தயார் நிலையில் வைத்து கொள்ளுங்கள். விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக வெளியாகும் அறிவிப்பை கவனமாக கேளுங்கள். இதில், வானிலை, உங்கள் லக்கேஜ் எங்கே வரும் என்பதற்கான பெல்ட் நம்பர் ஆகியவை சொல்லப்படும்.


Click it and Unblock the Notifications








