யாருன்னே தெரியாதவரின் பைக்கில் லிஃப்ட் கேட்டு போனது அவரா! காரணத்தை கேட்டதும் அவர் மேல மரியாதை அதிகமாயிருச்சு!
இந்தியாவின் நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் (Traffic Jam) பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகள் விரிவுபடுத்தப்படாமல் தொடர்ந்து குறுகலாகவே இருந்து வருவது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.
வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை (Traffic Rules) பின்பற்றாமல், கண்மூடித்தனமாக ஓட்டுவதும் கூட சில சமயங்களில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்து விடுகிறது. சாமானிய மக்கள் மட்டுமல்லாது, அரசியல்வாதிகள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களும் கூட இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்னையில் சிக்கி கொள்கின்றனர்.

இந்த வரிசையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் (Amitabh Bachchan) சமீபத்தில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையில் சிக்கி கொண்டுள்ளார். அதற்கு பிறகு அவர் செய்த காரியம், தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமிதாப் பச்சனை பற்றி பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது.
அவர் அனைத்து இடங்களுக்கும் சரியான நேரத்திற்கு வருவார். கால தாமதம் செய்யவே மாட்டார். ஒரு இடத்திற்கு கால தாமதமாக செல்வதை அமிதாப் பச்சன் வெறுக்க கூடியவர். அமிதாப் பச்சனிடம் உள்ள இந்த குணம் உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று. இந்த சூழலில் நேற்று (மே 14) அமிதாப் பச்சன் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டுள்ளார்.

ஆனால் அவர் அவசரமாக ஷூட்டிங் செல்ல வேண்டியிருந்தது. எனவே இந்தியா முழுவதும் மக்களால் விரும்பப்படும் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் கூட, கொஞ்சம் கூட யோசிக்காமல், அவ்வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த ஒருவரிடம் அமிதாப் பச்சன் லிஃப்ட் கேட்டார். கரும்பு தின்ன கூலியா? என்பது போல், அந்த நபரும் அமிதாப் பச்சனை உடனடியாக பைக்கில் ஏற்றி கொண்டார்.
அமிதாப் பச்சன் லிஃப்ட் (Lift) கேட்டு சென்றது, ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) பைக் ஆகும். இந்த சம்பவம் மும்பையில் (Mumbai) நடைபெற்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அமிதாப் பச்சனின் எளிமையை காட்டுவதாக அவரது ரசிகர்கள் தற்போது சமூக வலை தளங்களில் புகழ்ந்து கொண்டுள்ளனர்.
இதற்கிடையே அனைத்து விதங்களிலும் உயர்ந்த மனிதர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக, தனக்கு லிஃப்ட் வழங்கிய நபருக்கு அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்துள்ளார். தான் லிஃப்ட் கேட்டு, பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்யும் புகைப்படத்தை அமிதாப் பச்சன் இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
''இந்த பயணத்தை வழங்கியதற்காக உங்களுக்கு நன்றி நண்பா. உங்களை யாரென்று எனக்கு தெரியாது. ஆனால் நான் வேலை செய்யும் இடத்திற்கு சரியான நேரத்தில் என்னை கொண்டு சென்று சேர்த்துள்ளீர்கள்'' என பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், இந்த பதிவின் மூலம் தனக்கு லிஃப்ட் வழங்கிய நபரை பெருமைப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அமிதாப் பச்சன் மேலும் பேசுகையில், ''பைக்கில் பயணம் செய்தது எனது கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது. ஆனால் மக்கள் மோசமாக வாகனங்களை ஓட்டுவது என்னை கோபம் அடைய செய்கிறது'' எனவும் கூறியுள்ளார். ஆனால் அமிதாப் பச்சன் மற்றும் அவருக்கு லிஃப்ட் வழங்கியவர் என இருவருமே ஹெல்மெட் (Helmet) அணியவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நேரம் தவற கூடாது என்பதற்காக, அமிதாப் பச்சன் மிகவும் எளிமையாக பைக்கில் லிஃப்ட் கேட்டு சென்றதெல்லாம் உண்மையிலேயே நல்ல விஷயம்தான். ஆனால் எவ்வளவுதான் அவசரமாக இருந்தாலும், ஹெல்மெட் அணிந்து கொண்டுதான் பயணம் செய்ய வேண்டும். அதுதான் அனைவருக்குமே நல்லது.


Click it and Unblock the Notifications








