எவ்வளவு பெரிய பிஸ்னஸ்மேன்... குழந்தையாக மாறி காரை ஓட்டி அசத்திவிட்டார்!! எத்தனை பேருக்கு இப்படி தோன்றும்?
திறமை எங்கிருந்தாலும் அதனை பாராட்ட ஆனந்த் மஹிந்திரா மறந்தது இல்லை. மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவ்வாக இருக்கக் கூடியவர். குறிப்பாக, எலான் மஸ்க்கை போன்று எக்ஸ் தளத்தை பயன்படுத்த ஆனந்த் மஹிந்திரா மிகவும் விரும்புகிறார். இதனால், அந்தந்த சமயத்தில் வைரலாக இருக்கும் விஷயங்கள் ஆனந்த் மஹிந்திராவுக்கு தெரியாமல் போவதில்லை. அவற்றுள் ஆட்டோமொபைல் தொடர்பானவற்றை இவர் லைக் மற்றும் ரீ-ட்விட் செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த சில வாரங்களாக இணையத்தில் கவனத்தை பெற்றுவரும் புஜ்ஜி கார் ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வழக்கமாக, இவ்வாறு தன்னை கவரும் விஷயங்களை எக்ஸ் தளத்தில் பதிவிடும் ஆனந்த் மஹிந்திரா, இந்த முறை புஜ்ஜி காரை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். புஜ்ஜி காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் கல்கி 2898 திரைப்படத்திற்காக புஜ்ஜி காரை நிஜமாக உருவாக்கி உள்ளனர்.

அறிவியல் சார்ந்த திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள கல்கி 2898 திரைப்படத்தை நாக் அஷ்வின் இயக்கி உள்ளார். மஹிந்திரா நிறுவனத்தின் உதவியுடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால்தான், ஆனந்த் மஹிந்திரா புஜ்ஜி காரை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும் புஜ்ஜி கார் உடன் மும்பையில் ஆனந்த் மஹிந்திரா இருக்கும் வீடியோவை கல்கி 2898 படக்குழுவினர் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு பதில் அளித்துள்ள ஆனந்த் மஹிந்திரா, "ஒரு முக்கிய இந்திய அறிவியல் புனைகதை திரைப்படத்தை தயாரிப்பதற்காக... இவ்வளவு பெரிய கனவு காணும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்..." என குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது, புஜ்ஜி காரை ஆனந்த் மஹிந்திரா ஓட்டி பார்த்தார். இதற்காகவே, மும்பையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் புஜ்ஜி வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

புஜ்ஜி வாகனத்தினுள் ஏறுவதற்கு முன்னர், வாகனத்தை சுற்றி பார்த்த ஆனந்த் மஹிந்திரா, பின்னர் இதனை உருவாக்கியவர்களிடம் புஜ்ஜி வாகனம் குறித்த விபரங்களை கேட்டறிந்தார். பின், ஆனந்த் மஹிந்திரா நுழைவதற்காக புஜ்ஜி வாகனத்தின் சிங்கிள் பப்புள் கண்ணாடி திறக்கப்பட்டது. வழக்கமான கார்களை போல் இல்லாமல் வித்தியாசமானது என்பதால், புஜ்ஜி வாகனத்தை எவ்வாறு ஓட்டுவது என்பது ஆனந்த் மஹிந்திராவிடம் ஒவ்வொன்றாக தெரிவிக்கப்பட்டது.
புஜ்ஜி வாகனத்தை சில மீட்டர்கள் தொலைவிற்கு மட்டுமே ஆனந்த் மஹிந்திரா இயக்கி பார்த்தார். மேலும், தான் கொண்டு சென்ற மஹிந்திரா ஸ்கார்பியோ-என் காரை புஜ்ஜி வாகனத்திற்கு பக்கத்தில் நிற்க வைத்தும் ஆனந்த் மஹிந்திரா புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். ஆனந்த் மஹிந்திரா தனது சொந்த பயன்பாட்டிற்காக சிவப்பு நிறத்திலான ஸ்கார்பியோ-என் காரை வைத்துள்ளார். அதனை தான் மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அவர் கொண்டு சென்றுள்ளார்.

ஸ்கார்பியோ-என் உள்பட மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் அனைத்தும் நன்கு அளவில் பெரியதானவை என்பதை நான் கூற வேண்டியது இல்லை. இருப்பினும், புஜ்ஜி வாகனத்துடன் நிற்கையில், மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் சிறியதாக தெரிகிறது. அப்படியென்றால், புஜ்ஜி கார் எந்த அளவிற்கு பிரம்மாண்டமானது என்பதை அறியலாம். மஹிந்திரா நிறுவனம் மட்டுமின்றி, புஜ்ஜி வாகனத்தின் உருவாக்கத்திற்கு கோயம்புத்தூரை சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டிவ் நிறுவனமும் உதவியுள்ளது.
சுமார் 6 டன்கள் எடையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில் 34.4-இன்ச்சில் ஹப்லெஸ் சக்கரங்கள் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் ஒரேயொரு சக்கரம் மட்டுமே நன்கு பெரியதாக வழங்கப்படுகிறது. புஜ்ஜி வாகனத்தின் நீளம் 6075மிமீ, உயரம் 2186மிமீ மற்றும் அகலம் 3380மிமீ ஆகும். இந்த வாகனத்தால் எந்தவொரு திசையிலும் எளிதாக திரும்பி செல்ல முடியும் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு திரைப்படத்திற்காக இவ்வளவு பெரிய வாகனம் உருவாக்கப்பட்டு இருப்பது உண்மையில் பாராட்டத்தக்கது. ஏனெனில், ஹாலிவுட்டில் கூட சிஜிஐ மூலமாகவே இத்தகைய வாகனங்களை திரைப்படங்களில் காட்டுகின்றனர். இதில் இருந்து கல்கி 2898 திரைப்படத்தின் முக்கியத்துவத்தை அறிய முடிகிறது. இத்தகைய வாகனத்தை உருவாக்க மஹிந்திரா நிறுவனம் உதவியிருப்பதன் மூலம், புது முயற்சிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற அந்த நிறுவனத்தின் கொள்கையை உணர முடிகிறது.


Click it and Unblock the Notifications









