மகனை இழந்த வலியில் பதியப்பட்ட வழக்கு!! மஹிந்திரா சொன்ன அந்த ஒரு பதில் - வழக்கின் திசை மாறிடுச்சு!
மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக ஓர் செய்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த நிலையில் மஹிந்திரா நிறுவனம் இதற்கு தனது விளக்கத்தை அளித்துள்ளது. அதனை பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.
பொய்யான வாக்குறுதியை அளித்துள்ளதாக கூறி உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா உள்பட 12 பேர் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளதாக ஓர் செய்தி நேற்றில் இருந்து தீயாய் இணையத்தில் பரவி வருகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பான வதந்திகளும் கிளம்பியுள்ளன.

காரின் பாதுகாப்பு விஷயத்தில் பொய்யான வாக்குறுதிகள் கொடுக்கப்படுவதாகவும், இதன் விளைவாக தனது மகனை இழந்துள்ளதாகவும் இந்த வழக்கை தாக்கல் செய்த ராஜேஷ் மிஷ்ரா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ராஜேஷ் மிஷ்ராவின் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி பார்க்கும்போது, கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் இவர் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
விளம்பரங்களிலும், சமூக வலைத்தள பக்கங்களிலும் காட்டப்பட்ட வாக்குறுதிகளை நம்பி, பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த காரை வாங்க தான் முடிவெடுத்ததாக ராஜேஷ் மிஷ்ரா தனது புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2022 ஜனவரி 14ஆம் தேதி லக்னோவில் இருந்து கான்பூருக்கு வந்துக் கொண்டிருந்தப்போது எதிர்பாராத விதமாக ராஜேஷ் மிஷ்ராவின் ஸ்கார்பியோ கார் விபத்தில் சிக்கியுள்ளது.
அந்த சமயத்தில் காரினுள் ராஜேஷ் மிஷ்ராவின் மகன் அபூர்வ் மிஷ்ரா மற்றும் அவரது நண்பர்கள் இருந்துள்ளனர். இந்த விபத்தில், மருத்துவரான அபூர்வ் மிஷ்ரா உயிரிழந்துள்ளார். விபத்தின்போது, சாலையை அடர் பனி சூழ்ந்திருந்ததாகவும், இதில் பாதை தெரியாமல் டிவைடர் மீது மோதியதில் கார் பலமுறை புரண்டு விபத்திற்கு உள்ளானதாகவும் ராஜேஷ் மிஷ்ரா தனது புகாரில் கூறியுள்ளார்.
மேலும், காரில் இருந்த அனைவரும் சீட்பெல்ட்களை அணிந்திருந்தாகவும், விபத்தின்போது சரியான நேரத்தில் ஏர்பேக் விரிவடையாததே தனது மகனின் உயிரிழப்புக்கு காரணம் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது. வழக்கில் சிக்கியிருப்பதாக கூறப்படும் ஆனந்த் மஹிந்திரா சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்க நபர் மற்றும் பெரும் தொழிலதிபர் என்பதால், இந்த வழக்கை சிலர் திரித்து வெளியிட ஆரம்பித்தனர். அதாவது, விபத்தில் சிக்கிய காரில் ஏர்பேக்குகள் இல்லை என்றுக் கூட கூறப்பட்டது.
இதனையடுத்து, மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சார்பில் இந்த வழக்கு தொடர்பான விளக்க அறிக்கை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, விபத்தில் சிக்கியது 2020ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்9 வேரியண்ட் ஆகும். இதில் ஏர்பேக்குகள் உள்ளன. நாங்கள் (மஹிந்திரா) விசாரித்ததில் ஏர்பேக்கில் எந்த பழுதும் இல்லை.
விபத்தில் கார் ரோல் ஓவர் செய்துள்ளது. அத்தகைய சமயங்களில் காரின் முன் ஏர்பேக்குகள் விரிவடையாது என்பதை கூறிக்கொள்கிறோம். 2022 அக்டோபரில் எங்கள் குழுவால் விரிவான தொழிற்நுட்ப விசாரணை முடிந்தது. இந்த விவகாரம் தற்போது துணை நீதித்துறையில் உள்ளது. மேலும், தேவைப்படும் எந்தவொரு விசாரணைக்கும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க நாங்கள் கடமைப்பட்டு உள்ளோம். துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு காரும் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகே விற்பனைக்கு வருகிறது. விற்பனைக்கு வந்த பின்பும் க்ளோபல் என்சிஏபி என பல்வேறு அமைப்புகள் மூலம் மோதல் செய்து பார்க்கப்பட்ட பின்பே காருக்கு தர மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. அப்படியிருக்கையில், ஒரு கார் நிறுவனத்தை சந்தேகப்படுவது க்ளோபல் என்சிஏபி போன்ற சர்வதேச அமைப்புகளை சந்தேகிப்பது போன்றதாகும்.


Click it and Unblock the Notifications








