இந்தியா எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது பாருங்க... ஆனந்த் மஹிந்திராவையே கவர்ந்த ட்ரோன் வீடியோ!!
நெடுஞ்சாலைகளை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்வதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. குறிப்பாக, நாட்டு மக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு மும்பை-டெல்லி நெடுஞ்சாலை கடந்த பல மாதங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்த நெடுஞ்சாலை கட்டமைப்பில் மற்றொரு புதிய மைல்கல் தான், பெங்களூர்- மைசூர் இடையேயான புதிய விரைவுச்சாலை ஆகும்.
மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை தான் சமீப வாரங்களாக செய்திகளில் ஹைலைட்டாக குறிப்பிடப்பட்டு வருகிறது. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள பெங்களூர்-மைசூர் இடையேயான இந்த நெடுஞ்சாலை விரைவில் முழுவதுமாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த நெடுஞ்சாலையினை பிரதமர் நரேந்திர மோடி இந்த பிப்ரவரி மாதம் முடிவதற்குள்ளாக திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்னதாக சில பகுதிகளில் ஏற்கனவே வாகன ஓட்டிகளால் இந்த விரைவுச்சாலை பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அவ்வாறு பயன்படுத்திய வாகன ஓட்டிகள் சிலர் நெடுஞ்சாலையில் நின்றவாறு புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதேநேரம் அரசாங்கம் சார்பிலும் ட்ரோன் வீடியோ ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் சிஇஓ ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், புதிய பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலையின் ஒரு மேம்பாலம் பகுதியில் சாலைக்கு கீழ் தண்டவாளத்தில் வந்தே பாரத் இரயில் ஒன்று செல்வதை காண முடிகிறது. இது ஒரு அருமையான காட்சி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் வந்தே பார்த் இரயிலும் மத்திய அரசின் சமீபத்திய குறிப்பிடத்தக்க சாதனைகளுள் ஒன்றாகும்.
Drone view of the new Bengaluru-Mysuru expressway with the Vande Bharat train passing underneath. A powerful visual symbol of how global-standard infrastructure is transforming India…👏🏽👏🏽👏🏽 pic.twitter.com/nBRiyCFHEd
— anand mahindra (@anandmahindra) February 13, 2023
நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுவரும் வந்தே பாரத் இரயில் நமது தமிழ்நாட்டை பொறுத்தவரையில், சென்னையில் இருந்து பெங்களூர் வரை என ஒரேயொரு வழித்தடத்தில் மட்டுமே தற்போதைக்கு இயக்கப்படுகிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இரயில்களாக இந்தியன் இரயில்வே துறைக்கு பெரும் நிதியை சேமித்துத்தரும் பொருட்டு வந்தே பாரத் இரயில்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இவ்வாறான மத்திய அரசின் இரு பெரும் சாதனைகளை ஒன்றாக பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது. இதே சிலிர்ப்பு உணர்வுடன் மேற்குறிப்பிடப்பட்டுள்ள ட்ரோன் வீடியோவை வெளியிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா, இதுகுறித்த டுவிட்டர் பதிவில், "உலக தரத்திலான உள்கட்டமைப்பு எவ்வாறு இந்தியாவை மாற்றுகிறது என்பதற்கு இது பவர்ஃபுல்லான காட்சி அடையாளம்" என பதிவிட்டுள்ளார்.

ஆனந்த் வெளியிட்டுள்ள வீடியோவை இதுவரையில் மட்டும் 7.3 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுக்களித்துள்ளனர். மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மொத்தம் 10 லேன்களுடன் புதிய பெங்களூர்-மைசூர் விரைவுச்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 2 லேன்கள் சர்வீஸ் சாலைகளாக இருக்க, மத்திய 6 லேன்கள் தான் முக்கிய விரைவுச்சாலை ஆகும்.
7 கிமீ ஸ்ரீரங்கபட்னா பைபாஸ், 10கிமீ மந்தியா பைபாஸ், 7 கிமீ பிடாடி பைபாஸ், 22 கிமீ ரமனகரம் பைபாஸ் & சன்னாபட்னா பைபாஸ் மற்றும் 7 கிமீ மடூர் பைபாஸ் என இந்த விரைவுச்சாலையில் மொத்தம் 5 பைபாஸ் அடங்குகின்றன. இதில் மடூர் விரைவுச்சாலை தான் ஏற்கனவே பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுவிட்டது. விரைவுச்சாலை முழுவதுமாக திறக்கப்பட்டதற்கு பிறகு லைட் வெயிட் வாகனங்களுக்கு ரூ.250 டோல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








