இதை யாருமே எதிர்பாக்கல... பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா... எதற்காக தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடிக்கு, மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சமீபத்தில் 5 மாநிலங்களின் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. எனவே பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவினரும் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். 4 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில், வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார்.

அங்கு பல்வேறு பேரணிகளில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதையும் மனதில் வைத்துதான், பிரதமர் நரேந்திர மோடி இந்த பேரணிகளில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இந்த பேரணிகளில் பிரதமர் மோடியை போல், மற்றொரு விஷயமும் கவனத்தை ஈர்த்தது. அவர் பயன்படுத்திய கார்தான் அது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி, மஹிந்திரா தார் காரை பயன்படுத்தினார். இது இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் கிடைக்க கூடிய விலை குறைவான ஆஃப் ரோடு எஸ்யூவி கார்களில் மஹிந்திரா தாரும் ஒன்று.

பிரதமர் நரேந்திர மோடி 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவித்து வருகிறார். அத்துடன் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார். இருப்பினும் அவரே வெளிநாட்டு கார்கள் போன்ற தயாரிப்புகளை பயன்படுத்துவதாக விமர்சனங்கள் உள்ளன. இப்படிப்பட்ட ஒரு சூழலில், யாரும் எதிர்பார்க்காத வகையில், மஹிந்திரா தார் எஸ்யூவி காரை, பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தினார்.

இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) நன்றி தெரிவித்துள்ளார். மிகவும் வலுவான மற்றும் 'மேட் இன் இந்தியா' மஹிந்திரா தார் எஸ்யூவியை பயன்படுத்தியதற்காக, சமூக வலை தளம் மூலமாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆனந்த் மஹிந்திரா தனது நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஜீ-க்கு நன்றி. 'மேட் இன் இந்தியா' வாகனத்தை விட வேறு எந்த வாகனமும் வெற்றி அணிவகுப்புகளுக்கு சிறந்ததாக இருக்காது. இவ்வாறு ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். ஆனந்த் மஹிந்திராவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய சந்தையில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது. முன்பதிவுகள் குவிந்தாலும், செமி கண்டக்டர் சிப்கள் பற்றாக்குறையாலும், புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு நீண்ட காலம் காத்திருப்பு காலம் நிலவுகிறது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் பலர் இந்த காரை டெலிவரி பெறுவற்காக ஆவலுடனும், பொறுமையாகவும் காத்து கொண்டுள்ளனர்.

மஹிந்திரா தார் எஸ்யூவி காரில், ஒரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மொத்தம் 2 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்களில், 2.0 லிட்டர் mStallian பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மறுபக்கம் இந்த காரின் டீசல் வேரியண்ட்களில், 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை தார் எஸ்யூவியை தொடர்ந்து மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த எக்ஸ்யூவி700 காருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 'இந்தியன் கார் ஆஃப் தி இயர் 2022' மஹிந்திரா எக்ஸ்யூவி700 சமீபத்தில் தட்டி சென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். எக்ஸ்யூவி700 காருக்கு மஹிந்திரா நிறுவனம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுதவிர எலெக்ட்ரிக் கார்களிலும் மஹிந்திரா நிறுவனம் வரும் காலங்களில் தீவிர கவனம் செலுத்தவுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் எதிர்கால எலெக்ட்ரிக் கார்களை பொறுத்தவரை, எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








