தின கூலி வேலை செய்தவருக்கு அடித்த ஜாக்பாட்! வாகனத்தை பரிசா கொடுக்க ஆனந்த் மஹிந்திரா போன் நம்பர கேட்டிருக்காரு!
தினக் கூலி வேலை செய்து வந்தவருக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா விலை உயர்ந்த வாகனத்தை பரிசாக வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான காரணம் என்ன? எந்த வாகனத்தை அவர் அந்த நபருக்கு பரிசாக வழங்க இருக்கின்றார்?, என்பது குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இணையத்தில் மிகவும் துடிப்பாக இருக்கும் தொழிலதிபர்களில் ஆனந்த் மஹிந்திரா-வும் ஒருவர் ஆவார். இவர், சிறப்புமிக்க மனிதர்களை சிறப்பிக்க தவறியது இல்லை. அந்தவகையில், கடந்த காலங்களில் இவரால் சிறப்பிக்கப்பட்டவர் பலர் உள்ளனர். குறிப்பாக, தேசத்திற்கு புகழ் மற்றும் பெருமிதம் சேர்ப்பவர்களை கௌரவிப்பதில் இவர் பெயர்போனவராக இருக்கின்றார்.

வாழ்க்கையில் சாதனைப் படைத்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு இவர் சிறப்பு பரிசுகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால் தன்னுடைய மிக சிறந்த தயாரிப்புகளான விலை உயர்ந்த கார்களையே ஆனந்த் மஹிந்திரா சாதனை புரிந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அவர் வழங்கிக் கொண்டிருக்கின்றார்.
நீரஜ் சோப்ரா தொடங்கி பிரக்ஞானந்தா வரை என பலருக்கு இவர் காரை பரிசாக வழங்கி இருக்கின்றார். அந்த வரிசையில் தற்போது ஓர் தினக் கூலி செய்யும் இளைஞர் இணைந்திருக்கின்றார். இவரை தினக் கூலி வேலை செய்யும் சாதாரண தொழிலாளி என்று மட்டுமே நினைத்துக் கொள்ள வேண்டாம்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்காக பதக்கம் வென்றுக் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர் ஆவார். உத்தரப்பிரதேசம் மாநிலம், சோன் பத்ரா பகுதியைச் சேர்ந்தவர் ராம் பாபு. இவர் ஓர் கூலி தொழிலாளியின் மகன் ஆவார். மேலும், இவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்திற்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கும் விதாக கட்டுமான கூலி தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கின்றார்.
அதேநேரத்தில் தன்னுடைய பேஷன் ஆனான ஸ்போர்ட்ஸிலும் அதிக ஈடுபடுடன் இருந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே ஆசிய போட்டிகளில் கலந்துக் கொண்டு இந்தியாவிற்கு வெண்கல பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார். 35 கிமீ ரேஸ்-வாக் போட்டியிலேயே முதல் மூன்றாம் இடத்தைப் பிடித்து அவர் இந்த பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.

மிக வறுமையான சூழலிலும் இத்தகைய சாதனையை அவர் படைத்திருப்பதனால் அவரை கௌரவிக்கும் முயற்சியில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா களமிறங்கி இருக்கின்றார். இந்த தகவல் அவருடைய எக்ஸ் பதிவின் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது. அவர், எக்ஸ் வலைதளத்தில், "ஆசிய போட்டியில் பதக்கத்தை வென்றவராக மாறிய தினக் கூலி தொழிலாளி. கட்டுப்படுத்த முடியாத தைரியமும், உறுதியும் கொண்டவர்.
இவருடைய தொடர்பு எண் இருந்தால் எனக்கு கொடுக்கவும். அவர் விருப்பப்படும் வாகனத்தை டிராக்டர் அல்லது பிக்-அப் டிரக்கை வழங்க தயாராக இருக்கின்றோம். அது அவரை ஆதரிக்க உதவியாக இருக்கும்" என தெரிவித்து இருக்கின்றார். இத்தகைய பதிவின் வாயிலாகவே ராம் பாபுவிற்கு புதிய வாகனம் கிடைக்க இருப்பது தற்போது உறுதியாகி இருக்கின்றது.
கடந்த காலங்களில் ஆனந்த் மஹிந்திரா போட்டிகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையில், ராம் பாபுவிற்கு அவரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் விதமாக அதற்கான வாகனத்தை வழங்க அவர் திட்டமிட்டு இருக்கின்றார். ஆனால், இந்த வாகனம்தான் வழங்கப்பட இருக்கின்றது என்கிற துள்ளியமான விபரம் வெளியிடப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கிய 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் அக்டோபவர் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. சீனாவிலேயே இந்த போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை இந்தியாவில் இருந்து அதிகளவில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று சாதனைப்படுத்தி இருக்கின்றனர். இந்த முறை அதிகபட்சமாக இந்தியாவிற்கு 107 பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications









