பக்கத்துல இருக்க விநாயகர் கோவிலுக்கு போய்ட்டு வர கூட ரோல்ஸ்-ராய்ஸ் காரா... அம்பானி குடும்பத்தாரின் அட்ராசிட்டி
அம்பானி குடும்பத்திற்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மீது அலாதி பிரியம் உண்டு என்பதை பலமுறை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பல ரோல்ஸ் ராய்ஸ் கார்களை அவர்கள் வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு ஆனந்த் அம்பானி சென்றுள்ளார்.
இதில் ஹைலைட்டான அம்சம் என்னவென்றால், "ஸ்டார் ஆஃப் இந்தியா ஆரஞ்சு" என்ற அரிய ஆரஞ்சு நிறத்திலான ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் VIII எக்ஸ்டென்டட் காரில் ஆனந்த் அம்பானி சென்றது ஆகும். இந்தக் காரின் அசாதாரண நிறம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனாலேயே கார் ஆர்வலர்கள் உடனடியாக இதுகுறித்து பேசத் தொடங்கினர்.

இந்த பிரத்தியேகமான ஆரஞ்சு நிறம் மிகவும் அரிதானது மட்டுமல்லாமல், ஆழமான வரலாற்று தொடர்புகளையும் கொண்டுள்ளது. 'சிஎஸ்12 விலாக்ஸ்' என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ள விபரங்களின்படி பார்க்கும்போது, ஆனந்த் அம்பானியின் ஃபாண்டம் VIII சீரிஸ் II எக்ஸ்டென்டட் கார் கோயிலுக்கு அருகே நிறுத்தப்பட்டு, ஆனந்த் அம்பானிக்காக காத்திருந்துள்ளது.
இந்தக் காரின் உடல் முழுவதும் "ஸ்டார் ஆஃப் இந்தியா ஆரஞ்சு" நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. காரின் பொனட்டில் வெள்ளை நிறத்தின் ஒரு சாயல் காணப்படுகிறது. மேலும், இந்த பாண்டோம் காரின் பதிவு எண் 'MH 01 FB 01' என்கிற ஃபேன்சி நம்பராக உள்ளது. ஆனந்த் அம்பானி தனது பாதுகாப்புப் படையினருடன் கோயிலில் இருந்து வெளியே வந்து, பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ அங்கிருந்து சென்றுள்ளார்.

பின்னர் அவர் காரின் முன் இருக்கையில் அமர, ரோல்ஸ் ராய்ஸ் கார் புறப்பட்டு சென்றுள்ளது. ஆனந்த் அம்பானியின் பாதுகாப்புப் படையினரும் ரேஞ்ச் ரோவர், டொயோட்டா ஃபார்ச்சூனர், மெர்சிடிஸ் ஜி-வேகன், மெர்சிடிஸ் வி-கிளாஸ் மற்றும் எம்ஜி க்ளாஸ்டர் போன்ற விலையுயர்ந்த கார்களை பயன்படுத்தியுள்ளனர். மேலும், காவல்துறையினரும் தங்கள் மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 வாகனங்களில் ஆனந்த் அம்பானியின் கான்வாய்க்கு துணையாக வந்துள்ளனர்.
தற்போதைய தலைமுறை பாண்டோம் காரான பாண்டோம் VIII, முதன்முதலில் 2017ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு, சீரிஸ் II என்ற பெயரில் 2022 ஆம் ஆண்டில் வெளியானது. 2017 இல் நடந்த அறிமுக நிகழ்வில், "ஸ்டார் ஆஃப் இந்தியா ஆரஞ்சு" நிறத்தில் புதிய பாண்டோம் VIII காரை ரோல்ஸ்-ராய்ஸ் காட்சிப்படுத்தி இருந்தது.

இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இருப்பினும், இந்த நிறம் ஒரு கலர் ஆப்ஷனாக வழங்கப்படாது என்று ரோல்ஸ்-ராய்ஸ் பின்னர் தெரிவித்தது. ஆனால், இந்த கண்காட்சிக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, அம்பானி குடும்பத்தினர் தங்கள் புதிய பாண்டோம் VIII சீரிஸ் II காரை இந்த தனித்துவமான நிறத்தில் ஆர்டர் செய்துள்ளனர்.
இந்த ஆரஞ்சு நிறம், 1934ஆம் ஆண்டில் குஜராத்தின் ராஜ்கோட் மஹாராஜாவுக்காக வடிவமைக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் II காரின் வண்ண அமைப்பை நினைவுபடுத்துகிறது. த்ரூப் & மாபர்லி உருவாக்கிய இந்தியாவின் அனைத்து விதமான கால நிலைகளுக்கு ஏற்ற இந்த கோச்வொர்க் "ஸ்டார் ஆஃப் இந்தியா" என்று அழைக்கப்படுகிறது.

வழக்கமான பாண்டோம் VIII சீரிஸ் II எக்ஸ்டென்டட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.5 கோடி ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில கோடி ரூபாய்கள் அதிகமாக வருவது மட்டுமின்றி, இவ்வாறான கார்களை வாங்குபவர்கள், அதனை தனது விருப்பத்திற்கேற்ப கூடுதலாக செலவு செய்து மாற்றி, டெலிவிரி பெறுவது வழக்கம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அம்பானி குடும்பத்தினர் வாங்கும் காரின் நிறங்கள் எப்போதும் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. பெரும்பாலான ரோல்ஸ் ராய்ஸ் உரிமையாளர்கள் தங்கள் கார்களை வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு போன்ற ஒற்றை நிறங்களில் தேர்வு செய்யும்போது, இந்த பில்லியனர் குடும்பத்தினர் கவர்ச்சிகரமான நிறங்களில் கேரேஜில் வைத்துள்ளனர். அந்த வகையில், ஆனந்த் அம்பானியும் பாண்டோம் VIII சீரிஸ் II எக்ஸ்டென்டட் காரை ஆரஞ்சு நிறத்தில் வைத்திருப்பது ஆச்சிரியம் ஒன்றுமில்லை.


Click it and Unblock the Notifications









