திருமணத்துக்கு வந்தவங்க கொடுத்த பரிசு... இவ்வளவு விலையில் இருக்கும்னு சத்தியமா எதிர்பார்க்கல!!
பெரும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்ல திருமணம் மொத்த உலகமும் பிரம்மிக்கும் வகையில் நடந்து முடிந்தது. முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்ட்டிற்கும் கடந்த ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடந்தது. உலகிலேயே மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணம் இது என கூறப்படுகிறது. ஏனெனில், ஏறக்குறைய சுமார் ரூ.5,000 கோடி செலவில் இந்த திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், அந்த அளவிற்கு திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பின்பும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
தற்போது விஷயம் என்னவென்றால், புது மாப்பிள்ளையான ஆனந்த் அம்பானி திருமண பரிசாக விலையுயர்ந்த காரை பெற்றுள்ளார். பொதுவாக, திருமணம் என்றாலே மாப்பிள்ளைக்கு நிறைய பரிசுகள் வருவது வழக்கமான ஒன்றே. அப்படியென்றால், உலகமே வியக்கும் அளவிற்கு நடைபெற்றுள்ள முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் மாப்பிள்ளைக்கு பல காஸ்ட்லீயான பரிசுகள் கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அவ்வாறான காஸ்ட்லீயான பரிசாக கிடைத்திருப்பதே, டார்ட்ஸ் (Dartz) என்கிற லக்சரி எஸ்யூவி கார் ஆகும். இவ்வாறான பெயரில் ஒரு காரை நம்மில் நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். ஆனால், அப்படியொரு திருமண பரிசுதான் ஆனந்த் அம்பானிக்கு கிடைத்துள்ளது. இந்த லக்சரி காரின் விலை 16 இலட்சம் டாலர்கள் என கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.13.39 கோடி ஆகும்.
இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த காரில் அப்படியென்ன உள்ளது என்பதை இனி தொடர்ந்து பார்க்கலாம். டார்ட்ஸ் என்பது லாட்வியா நாட்டை சேர்ந்த கார் கஸ்டமைசேஷன் நிறுவனமாகும். அதாவது, லக்சரி கார்களை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொடுப்பது டார்ட்ஸ் நிறுவனத்தின் தொழிலாகும். டார்ட்ஸ் உருவாக்குவது மொத்தமும் பிரத்யேகமான தோற்றத்தை கொண்ட, பாதுகாப்பு கவசங்கள் பொருத்தப்பட்ட அதிசெயல்திறன்மிக்க கார்கள் ஆகும்.

பொதுவாக, இவ்வாறான வாகனங்கள் இராணுவ பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுவதே வழக்கம். ஆனால், அத்தகைய வாகனங்களை பொது மக்களின் பயன்பாட்டிற்காக டார்ட்ஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. தற்போது, ஆனந்த் அம்பானிக்காக மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 கார் பிரத்யேகமான தோற்றத்திற்கு டார்ட்ஸ் நிறுவனத்தால் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த காரில், லம்போர்கினி உருஸ் காருக்கு டார்ட்ஸ் நிறுவனம் பயன்படுத்தும் பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்த காரின் வெளி மற்றும் உட்புறத்தில் உண்மையான தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாகவும், இதனால்தான் காரின் மதிப்பு சுமார் ரூ.13 கோடிக்கும் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

ஆக மொத்தத்தில், கோல்டு நிறத்தில் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட இந்த டார்ட்ஸ் எஸ்யூவி கார் முகேஷ் அம்பானி வீட்டு கார் கேரேஜில் இணைந்துள்ளது. முகேஷ் அம்பானி குடும்பத்தினரிடம் மொத்தம் 9 ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார்கள் மற்றும் இரண்டு ஃபெராரி புரோசாங்குவே கார்கள் உள்ளன. ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் மீது முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் கூடுதல் ஆர்வம் கொண்டுள்ளனர்.
குறிப்பாக, ரோல்ஸ்-ராய்ஸின் கல்லீனன் கார்களை மட்டும் 9 மாடல்களை வைத்துள்ளனர் என்றால், கல்லீனன் கார் அம்பானி குடும்பத்தினரை எந்த அளவிற்கு கவர்ந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. தற்போது இந்த குடும்பத்தில் புதியதாக இணைந்துள்ள டார்ட்ஸ் எஸ்யூவி கார், அடிப்படையில் ஓர் மெர்சிடிஸ்-மேபக் ஜி.எல்.எஸ்600 கார் என்பதை ஏற்கனவே கூறிவிட்டோம். இந்த மெர்சிடிஸ் காரும் நிச்சயமாக அதிக எண்ணிக்கையில் முகேஷ் அம்பானியிடம் இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆனந்த் அம்பானியின் இந்த திருமண பரிசை யார் வழங்கியது என்பது குறித்த விபரங்கள் இல்லை. இந்த காரில் தங்க முலாம் பூசப்பட்டு இருப்பது உண்மை எனும் பட்சத்தில், மும்பை சாலைகளில் தங்க கார் உலா வர போவது உண்மையில் பிரம்மிக்க வைக்கும் விஷயம் ஆகும். ரூ.5,000 கோடியில் திருமணத்தை நடத்தியவர்களுக்கு ரூ.13 கோடியில் கார் எல்லாம் பெரிய விஷயமாகவே இருக்காது.


Click it and Unblock the Notifications









