தமிழ்நாடு அரசுக்கு கோயில் கட்டி கும்பிடணும்!! 2026 வரை சாலை வரி என்கிற ஒன்றே கிடையாது!
எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதினால், சுற்றுச்சூழலுக்கும், அரசாங்கத்திற்கும் நிறைய நன்மைகள் உள்ளதாக மத்திய அரசு கருதுகிறது. இது நம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் பல நாட்டு அரசாங்கங்களுக்கு இதே எண்ணம் தான் உள்ளது. நம் மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்கி வருகிறது. அதேபோல், எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவோரை ஊக்கப்படுத்தும் விதமாக சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இதுகுறித்து ஆந்திர மாநில அரசு புதியதாக அறிவித்துள்ள அறிவிப்பை பற்றி இனி பார்க்கலாம்.
மத்திய அரசாங்கம் ஃபேம்-2 திட்டத்தின்படி எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மானியங்களையும், சில விதிமுறைகளில் இருந்து விலக்குகளையும் கடந்த சில வருடங்களாவே வழங்கி வருகிறது. சமீபத்தில்தான், எலக்ட்ரிக் 2-வீலர்களுக்கான மத்திய அரசின் மானியம் சற்று குறைத்துக் கொள்ளப்பட்டது. எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை பிக்-அப் ஆக ஆரம்பித்துள்ளதால் மானியம் குறைத்துக் கொள்ளப்பட்டது.

இருப்பினும், மற்ற எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தொடர்ந்து மானியங்களும், சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு மட்டுமின்றி, மாநில அரசாங்கங்களும் தங்களது விருப்பத்திற்கேற்ப எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியம் மற்றும் சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்த வகையில், மாநில அரசாங்கங்களால் நிர்ணயிக்கப்படும் சாலை வரி எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பல மாநிலங்களில் பூஜ்ஜிய ரூபாயாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
நம் தமிழ்நாட்டு அரசாங்கம் 2023ஆம் ஆண்டுடன் முடிவுற்ற எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சாலை வரி விலக்கை 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் இன்னும் 2 வருடங்களுக்கு நீட்டித்து கடந்த 2023ஆம் ஆண்டில் அறிவிப்பை வெளியிட்டது. இது எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு திட்டமிட்டு வந்தவர்களுக்கு இன்ப செய்தியாக அமைந்தது. மறுப்பக்கம், ஆந்திரா மாநிலத்திலும் எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக, 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 'எலக்ட்ரிக் மொபைலிட்டி பாலிசி' என்கிற திட்டத்தை ஆந்திர மாநில அரசு அறிமுகம் செய்தது. எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை எல்லா விதங்களிலும் ஊக்கப்படுத்துவதும், ஆதரிப்பதும் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதன்பின், அதே 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் எலக்ட்ரிக் வாகனங்களை ஆர்டிஓ-இல் பதிவு செய்வதற்கான கட்டணம் மற்றும் சாலை வரியை முற்றிலுமாக விலக்கிக் கொள்வதாக ஆந்திர அரசு அறிவித்தது.
இந்த விலக்குகள் தனி நபருக்கு மட்டுமின்றி, ஆந்திர அரசாங்க நிர்வாகங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், 2018 ஜூன் மாதத்தில் இந்த அறிவிப்பு வெளியிடுவதற்கு முன் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கியவர்களும் சாலை வரி கட்ட தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. 2018இல் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் மொபைலிட்டி திட்டம் 2023ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.

ஆனால், அதனை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து இந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதியில் ஆந்திர அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி, 2024 ஜூலை 7ஆம் தேதி வரையில் ஆந்திராவில் உள்ள ஆர்டிஓ-களில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரி வசூலிக்கப்படவில்லை. இந்த நிலையில், எலக்ட்ரிக் மொபைலிட்டி பாலிசி 2018-23ஐ 2024 ஜூன் 8ஆம் தேதியில் இருந்து அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்க கடந்த செப்டம்பர் 18ஆம் தேதியன்று ஆந்திர அரசாங்கத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்த அறிவிப்பு கிட்டத்தட்ட 1 மாதம் கழித்து தற்போது அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி வரையில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் சாலை வரி விலக்கை அனுபவிக்கலாம். பேட்டரிகள் அல்லது அல்ட்ரா கேபாசிட்டர்கள் அல்லது எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களாக கருதப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆந்திர அரசாங்கத்தின் சாலை வரி விலக்கு மேலும் 6 மாதங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாலும், டிசம்பர் 7ஆம் தேதிக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த விஷயத்தில் நம் தமிழ்நாடு அரசை பாராட்டலாம். ஏனெனில், 2025 டிசம்பர் 31 வருவதற்கு இன்னும் 14 மாதங்கள் உள்ளன. இதனால், ஆந்திர மாநில அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சாலை வரி விலக்கை மேலும் நீட்டிகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









