புரோக்கர் வேலை பார்த்தாலே இவ்வளவு சம்பாதிக்கலாமா? உலகிலேயே 60 பேர் கிட்ட மட்டும்தான் இந்த கார் இருக்கு!!
பங்கு சந்தை (Stock Market)-இல் தரகராக வேலை பார்த்து பல கோடி ரூபாய் வருமானம் சேர்த்து வைத்துள்ள தனியார் நிறுவனங்கள் ஏராளமானவை உள்ளன. அதில் ஒன்றுதான், ஏஞ்சல் புரோகிங் (Angel Broking) ஆகும். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (MD)-ஆக இருப்பவர், தினேஷ் தக்கர் (Dinesh Thakkar). பெரும் பணக்காரர்களுக்கு பொதுவாகவே விலையுயர்ந்த கார் & பைக்குகளை அவ்வப்போது வாங்குவது பிடித்தமான விஷயமாக உள்ளது. அந்த வகையில், ஏஞ்சல் புரோகிங் நிறுவனத்தின் எம்டி தினேஷ் தக்கரும் சொகுசு கார் பிரியராக உள்ளார்.
பல உயர் தரத்திலான சூப்பர்கார்களை வைத்திருக்கும் தினேஷ் தக்கர் புதியதாக ரூ.6 கோடியில் மெக்லாரன் (McLaren) கார் ஒன்றை வாங்கியுள்ளார். ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறங்களில் இரு கோடுகள் போடப்பட்ட பொனெட்டை கொண்ட வெள்ளை நிற பிராண்ட்-நியூ மெக்லாரன் காரை நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் டெலிவிரி பெறும் படங்களை தினேஷ் தக்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மும்பையில் உள்ள மெக்லாரன் கார் ஷோரூமில் கருப்பு நிற துணியால் மூடி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய மெக்லாரன் காரை தினேஷ் தக்கர் துணியை அகற்றி எல்லார் முன்பும் அறிமுகம் செய்துள்ளார். ஏஞ்சல் புரோகிங் எம்டி தினேஷ் தக்கர் வாங்கியிருப்பது மெக்லாரான் 750எஸ் ஸ்பைடர் (750S Spider) என்கிற ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.
மெக்லாரன் போன்ற விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரை பெரும்பாலானோர் வெள்ளை நிறத்தில் தேர்வு செய்வது கிடையாது. இதனால், தினேஷ் தக்கரின் மெக்லாரன் 750எஸ் ஸ்பைடர் கார் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாகவும், ஸ்பெஷலானதாகவும் காட்சியளிக்கிறது. இந்த வெள்ளை நிறத்தை மோனாகோ வெள்ளை என மெக்லாரன் நிறுவனம் அழைக்கிறது.

இத்தகைய பெயிண்ட் மட்டுமின்றி, தினேஷ் தக்கர் தேர்வு செய்திருப்பது மெக்லாரன் 750எஸ் ஸ்பைடர் காரின் 60வது ஆண்டுநிறைவு எடிசனை ஆகும். இந்த கார் உலகளவிலேயே மொத்தம் 60 யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் தினேஷ் தக்கர் வாங்கியிருக்கும் இத்தகைய அரிதான ஸ்போர்ட்ஸ் காருக்கு உள்ளே டேன் லெதர் மற்றும் அல்காண்ட்ராவில் வடிவமைக்கப்பட்ட கேபின் வழங்கப்படுகிறது.
மெக்லாரன் 750எஸ் ஸ்பைடர் 60வது ஆண்டுநிறைவு எடிசனில் 4.0 லிட்டர் ட்வின்-டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 740 பிஎச்பி மற்றும் 800 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் இந்த காரில் எட்டிவிடலாம்.

என்ஜின் வெளிப்படுத்தும் இயக்க ஆற்றல் ஆனது காரின் பின் சக்கரங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஏஞ்சல் புரோகிங் எம்டி தினேஷ் தக்கரிடம் போர்ஷே 911 டர்போ எஸ் மற்றும் 911 ஜிடி3 ஆர்.எஸ் உள்ளிட்ட விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களும் உள்ளன. இதில், 911 ஜிடி3 ஆர்.எஸ் காரில் பொருத்தப்படும் 4.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் 6-சிலிண்டர் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 525 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெக்லாரன் 750எஸ் ஸ்பைடர் போன்ற விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரை வாங்குவதே முதலில் கடினமானது. அதிலிலும், தொழிலதிபர் தினேஷ் தக்கர் வாங்கியிருப்பது உலகளவிலேயே வெறும் 60 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட 750எஸ் ஸ்பைடர் 60வது ஆண்டுநிறைவு எடிசன் ஆகும். அதாவது, இந்த காரை வாங்கும் அளவிற்கு பணம் இருந்தாலும், அதனை சொந்தமாக்குவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும்.


Click it and Unblock the Notifications









