அம்பானி குடும்பத்திலேயே கொஞ்சம் வித்தியாசமானவர்... பாதுகாப்புக்கு எந்த வாகனங்களும் இல்லை!!
அனில் அம்பானி (Anil Ambani), இந்தியாவில் இவருக்கு அறிமுகமே தேவையிருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு பிரபலமானவரான இவர் தான் ரிலையன்ஸ் க்ரூப் (Reliance Group)-இன் தலைவர் ஆவார். சகோதரர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani)-ஐ போன்று அனில் அம்பானியும் விலையுயர்ந்த கார்களை வாங்கி குவிப்பதில் ஆர்வமிக்கவர். கோடி கணக்கில் சொத்து வைத்திருப்பவர்களுக்கு அவ்வப்போது சொகுசு கார்களை வாங்க சொல்லியா தர வேண்டும்... அந்த வரிசையில், புதியதாக வாங்கிய மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் (Mercedes-Benz S-Class) காரில் அனில் அம்பானி காட்சி தந்துள்ளார்.
திருபாய் அம்பானியின் இளைய மகனும், தொழிலதிபருமான அனில் அம்பானியிடம் ஏகப்பட்ட சொகுசு கார்கள் உள்ளன. ஆனால், இவர் முகேஷ் அம்பானியை போன்று அவ்வப்போது ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார்களையும், பெண்ட்லீ (Bentley) கார்களையும் வாங்கிக் குவிக்க கூடியவர் அல்ல. அனில் அம்பானி சொகுசு கார்களை வாங்கினாலும், அவை சில கோடி ரூபாய் மட்டுமே விலை கொண்டவைகளாக இருக்கின்றனர்.

இன்னும் சொல்லப்போனால், வீட்டில் அத்தனை விலையுயர்ந்த கார்கள் இருப்பினும், அனில் அம்பானி பரவலாக தனது அன்றாட பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வந்தது ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) என்கிற எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ ஆகும். இந்த எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.46 லட்சம் மட்டுமே ஆகும்.
ஆனால், அனில் அம்பானி சமீபத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் என்கிற லக்சரியான செடான் காரில் காட்சி தந்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், அனில் அம்பானி தான் காரை ஓட்டி சென்றுள்ளார். இது, 2024ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புத்தம் புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்-கிளாஸ் கார் ஆகும். ஆதலால், இதனை அனில் அம்பானி சில மாதங்களுக்கு முன்னர் தான் வாங்கியிருக்க கூடும்.

அனில் அம்பானி வைத்திருப்பது எஸ்-கிளாஸ் காரின் எஸ்450 (S450) வேரியண்ட்டை ஆகும். மும்பையில் உள்ள தனியார் விமான நிலையத்தில் இருந்து பளபளக்கும் எஸ்-கிளாஸ் காரை அனில் அம்பானி ஓட்டி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டிரைவர் இருக்கையில் அனில் அம்பானி அமர்ந்திருக்க, அவருக்கு அருகே முன் இருக்கையில் அவரது மனைவி டினா அமர்ந்திருப்பதை வீடியோவில் காணலாம்.
காருக்கு முன்னாலும், பின்னாலும் பாதுகாப்புக்காக எந்த வாகனத்தையும் பார்க்க முடியவில்லை. அனில் அம்பானியின் கருப்பு நிறத்திலான இந்த எஸ்-கிளாஸ் காரில் '1300' என்கிற ஃபேன்சி நம்பர் பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. எஸ்-கிளாஸ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த லக்சரி செடான் கார்களுள் எஸ்-கிளாஸ் முக்கியமானது ஆகும்.

முன்பு எஸ்-கிளாஸ் காரின் விலை அதிகமாக இருந்தது. ஆனால், எப்போது இந்தியாவிலேயே இந்த காரை அசெம்பிள் செய்ய ஆரம்பித்தார்களோ அதன்பின் எஸ்-கிளாஸின் விலை குறைந்தது. அனில் அம்பானி வைத்திருக்கும் எஸ்-கிளாஸ் எஸ்450 காரில் 3.0 லிட்டர், 6-சிலிண்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முகேஷ் அம்பானியை போலவே அவரது இளைய சகோதரர் அனில் அம்பானியும் பெரும் தொழிலதிபர் தான். இருப்பினும், இருவருக்கும் இடையே பண்புகளில் சில கவனிக்கத்தக்க வித்தியாசங்கள் இருப்பதை மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவின் மூலம் அறிய முடிகிறது. முக்கியமாக, ரிலையன்ஸ் க்ரூப் போன்ற மிக பெரும் நிறுவனத்தின் தலைவர் எந்தவொரு பாதுகாப்பு வாகனங்களும் இன்றி, தனியாக காரை ஓட்டி செல்வதை பார்க்கும்போது கொஞ்சம் ஆச்சிரியமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









