போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி! பெங்களூரில் திரண்ட பைக் ரைடர்கள்!
இந்தியாவில் இளைஞர்கள் பலர் போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். இளைஞர்கள் மட்டுமல்லாது, இளம்பெண்களும் கூட போதை பொருட்களுக்கு அடிமையாகி கொண்டிருப்பது வேதனையின் உச்சம். பெரு நகரங்களில் போதை பொருட்களுக்கு அடிமையான இளம்பெண்களை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும். எனவே போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
சர்தார் மன்மீட் சிங் இதனை கச்சிதமாக செய்து வருகிறார். 'க்ரீன் மேன் ஆஃப் இந்தியா' என்ற புனைப்பெயரால் அறியப்படும் இவர், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவர் தொடர்ச்சியாக மரங்களை நட்டு கொண்டுள்ளார். அத்துடன் இவர் பைக் காதலர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

எனவே இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, போதைக்கு எதிரான டூவீலர் விழிப்புணர்வு பேரணியை இவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தி கொண்டுள்ளார். இந்த வரிசையில் பெங்களூர் நகரில் கடந்த ஜூன் 26ம் தேதி, போதை பொருட்களுக்கு எதிரான டூவீலர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி, போதை பொருள் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டுதான் பெங்களூர் நகரில் இந்த டூவீலர் பேரணி நடைபெற்றது. இதில், பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணை தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கர்நாடக மாநில சட்டமன்றமான விதான் சவுதாவில் தொடங்கிய இந்த டூவீலர் பேரணி, பெங்களூர் நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளை கடந்து, எலஹங்கா பகுதியில் அமைந்துள்ள போதை பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் அலுவலகத்தில் நிறைவடைந்தது. போதை பொருள் கட்டுப்பாட்டு பணியகமும் ஒருங்கிணைந்து இந்த பேரணியை நடத்தியது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த பேரணியில் ஆண், பெண் பாகுபாடின்றி 250க்கும் மேற்பட்ட ரைடர்கள் கலந்து கொண்டனர். ராயல் என்பீல்டு புல்லட் 350, ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650, ஹோண்டா ஹைனெஸ் சிபி350 போன்ற பைக்குகள் இந்த பேரணியில் அணிவகுத்தன. அத்துடன் ஹார்லி டேவிட்சன், கேடிஎம் மற்றும் டிரையம்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் பைக்குகளையும் காண முடிந்தது.
எலஹங்கா பகுதியில் உள்ள போதை பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தை பேரணி சென்றடைந்தவுடன், அனைவரும் போதை பொருட்களுக்கு எதிரான உறுதி மொழியை எடுத்து கொண்டனர். அத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. வரும் காலங்களில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த டூவீலர் பேரணி நடத்தப்படவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய போதை பொருட்களுக்கு எதிராக பைக் ரைடர்கள் ஆண், பெண் பாகுபாடின்றி பேரணியில் ஒருங்கிணைந்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்க விஷயம் ஆகும். பெங்களூர் நகர மக்களுக்கு அவர்கள் ஒரு நல்ல செய்தியை எடுத்து கூறி சென்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications








