மனுஷன் எப்போ எப்போ-னு காத்திருந்திருப்பாரு போல.. கூப்பிட்டதும் ஓடி வந்து காரை வாங்கிய மகாராஜா பட வில்லன்!
மகாராஜா படத்தில் வில்லனாக தோன்றி தமிழ் திரைப்பட ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்த நடிகர் அனுராக் காஷ்யப். இந்த படத்தில் மட்டுமல்ல இன்னும் பல படங்களில் தன்னை ஓர் முரட்டுத் தனமான வில்லனாக அவர் காண்பித்திருக்கின்றார். அந்தவகையில், விஜய் சேதுபதி, அதர்வா மற்றும் நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகிய 'இமைக்கா நொடிகள்' படத்திலும் அவர் சிறந்த வில்லன் ரோலை ஆற்றியிருப்பார். இதுமட்டும அல்ல விடுதலை பாகம் 2 போன்ற இன்னும் சில தமிழ் படங்களிலும் அவர் நடித்திருக்கின்றார்.
ஆனால், இந்தியில் இவர் பல படங்களை பண்ணியிருக்கின்றார். மேலும், இவர் இந்தியில் திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். இத்தகைய ஓர் பிரபலமே தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்யிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அனுராக் காஷ்யப் காரை டெலிவரி பெறும் படங்களும் வெளியாகி உள்ளன.

அவர் வாங்கியிருப்பது மஹிந்திரா (Mahindra) நிறுவனம் சமீபத்தில் வெளியீடு செய்த எக்ஸ்இவி 9இ (XEV 9e) கார் மாடல் ஆகும். இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. நேற்றைய தினமே இந்த காரின் டெலிவரி பணிகளை மஹிந்திரா நிறுவனம் நாட்டில் தொடங்கியது என்பது கவனிக்கத்தகுந்தது.
ஆகையால், டெலிவரி பணிகள் தொடங்கியதும் முதல் ஆளாக ஓடிச் சென்று இந்த காரை அனுராக் டெலிவரி பெற்றிருப்பாரோ என நம்மில் பலரை இந்த நிகழ்வு நினைக்கச் செய்திருக்கின்றது. இதேபோல், இவருக்கு காரை டெலிவரி வழங்க மஹிந்திரா கார் விற்பனையகத்தின் முக்கிய அதிகாரிகள் பலரும் அங்கே வந்திருக்கின்றனர்.
அனுராக் காஷ்யப் தன்னுடைய புதிய மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரை, மஹிந்திரா மோடி எனும் விற்பனையாளர் வாயிலாகவே வாங்கி இருக்கின்றார். இந்த நிறுவனத்தின் சிஇஓ அஜிப் பாய் மற்றும் துணைத் தலைவர் கைலாஷ் ஜோஷி ஆகியோரே காருக்கான சாவியை நடிகரிடத்தில் வழங்கி இருக்கின்றனர்.
மஹிந்திரா நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலே எக்ஸ்இவி 9இ ஆகும். இந்த கார் மாடல் இந்தியாவில் ரூ. 21.90 லட்சம் தொடங்கி ரூ. 30.50 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த கார் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்துகின்ற விதமான தகவல்களே ஒவ்வொரு நாளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரை வாங்கவிருக்கும் ஒரே பிரபலமாக அனுராக் காஷ்யப் இருக்கப் போவதில்லை.
ஏனெனில், இந்த காரை இசைப் புயல் ஏஆர் ரஹ்மானும் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எனவே இன்னும் பல பிரபலங்களின் பிரியமான கார் மாடலாக இது இருக்கும் என தெரிகின்றது. இதுமட்டுமல்ல புக்கிங் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 இந்த இரண்டு கார் மாடலுக்கும் சேர்ந்து 30,179 புக்கிங்குகள் கிடைத்தன.
பிஇ 6, இதுவும் ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். எக்ஸ்இவி 9இ உடன் சேர்ந்தே இதுவும் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 இரண்டும் உருவத்தில் மாறுபட்டுக் காட்சியளித்தாலும் பேட்டரி பேக் மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்டவற்றில் இரண்டும் ஒரே மாதிரியாக உள்ளன.
இரண்டு கார் மாடல்களின் உயர் நிலை வேரியண்டுகளில் 79 kWh பேட்டரி பேக்கும், ஆரம்ப நிலை வேரியண்டுகளில் 59 kWh பேட்டரி பேக்கும் வழங்கப்பட்டு இருக்கும். இதில் சிறிய பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 542 கிமீ ரேஞ்சையும், பெரிய பேட்டரி பேக் 656 கிமீ ரேஞ்சையும் தரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சிறந்த உதாரணமாக டாடா நெக்ஸான்.இவி மற்றும் எம்ஜி விண்ட்ஸர் இவி-யை கூறலாம். இவர்களின் வரிசையில் விரைவில் மஹிந்திாரவின் எக்ஸ்இவி 9இ மின்சார காரும் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








