பிரதமர் மோடியின் வழியை பின் தொடர்ந்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன்....
பிரதமர் மோடி தனது கான்வாயில் பயன்படுத்தி வருவதைப்போன்று, ஜெகன் மோகன் ரெட்டியும் அவரது கான்வாயில் கருப்பு நிறத்திலான டொயோட்டா பார்ச்சூனர் கார்களைப் பயன்படுத்தி வருகின்றார். இதற்காக செய்யப்பட்ட செலவு மற்றும் கார் குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆந்திர மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்று முடிவடைந்தது. இதில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, அம்மாநிலத்தின் பிரதான கட்சியான தெலுங்கு தேசத்தைக் காட்டிலும் பெரும்பான்மையான இடங்களில் தேர்ச்சியடைந்து வெற்றி பெற்றது. அவ்வாறு, அம்மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 151 இடங்களில் அந்த கட்சி வெற்றி வாகை சூடியது.

ஆனால், அப்போது ஆளும்கட்சியாக இருந்த, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 தொகுதிகளை மட்டுமே பெற்று தோல்வியுற்றது. ஒய்எஸ்ஆர் கட்சியின் அமோகமான வெற்றியைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 30ம் தேதி ஆந்திராவின் புதிய முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார். இந்த கட்சி துவங்கி முதல் முறையாக முதல்வர் அரியணை ஏறுபவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பயணத்திற்காக ரூ. 3 கோடி செலவில் ஆறு புதிய கார்கள் வாங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு, புல்லட் ப்ரூஃப் தரத்திலான, டொயோட்டா நிறுவனத்தின் ஆறு கார்கள் வாங்கப்பட்டுள்ளன. அதில், ஐந்து கார்கள் எஸ்யூவி ரகத்திலான டொயோட்டா பார்ச்சுனர் காரும், முதலமைச்சரின் பயன்பாட்டிற்காக டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரும் வாங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி, அவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நிறைந்த காரில் கெத்தாக வளம் வரும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், அவர் இசட் ப்ளஸ் பாதுகாப்புடன் கூடிய, புல்லட் ப்ரூஃப் காரில் கான்வாய் வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தற்போது இந்த வீடியோதான் ஆட்டோ உலகின் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

முன்னதாக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் கான்வாய்க்காக, அம்மாநில காவல்துறை தரப்பில் டாடா சஃபாரி கார்களே பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவரின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டு, புல்லட் ப்ரூஃப் தரத்திலான டொயோட்டா கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.

அதேசமயம், காவல் துறை முன்னதாக தேர்ந்தெடுத்த டாடா சஃபாரி கார்களும், புல்லட் ப்ரூஃப் தரத்திலானவைத் தான், இருப்பினும் அவை கார் ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் முழுமையாக தெரியவில்லை. ஜெகன் மோகன் ரெட்டி அவருடைய பொதுப்பணியை ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், புதிய கார்களில் பயணம் செய்து வருகின்றார். அதில், அவரின் பயணத்திற்கு டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பயன்படுத்துவது உறுதியாகியுள்ளது.
தற்போது புதிதாக வாங்கப்பட்டுள்ள ஆறு டொயோட்டா கார்களுக்குமே புல்லட் ப்ரூஃப் மேற்கூரைப் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், சந்தையில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் இந்த மாடல் காரைக் காட்டிலும், தற்போது கான்வாயில் பயன்படுத்தப்பட்டு வரும் கார்கள் சற்று கூடுதலான விலையைப் பெற்றுள்ளது.

அவ்வாறு, பாதுகாப்பு அதிகாரிகள் பயன்படுத்தி வரும் டொயோட்டா பார்ச்சூனர் கார் ரூ. 50 லட்மாகவும், ஜெகன்மோகன் ரெட்டிக்கு பயன்படுத்தப்படும் கார் ரூ. 1 கோடி செலவிலும் வாங்கப்பட்டுள்ளது. இதில், ஜெகன் மோகன் ரெட்டியின் காருக்கு மட்டும் கூடுதல் பாதுகாப்பு வசதிக்காக ரூ. 30 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை கூடுதலாக செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

புதிய முதலமைச்சரின் கான்வாயில் பயன்படுத்தப்படும் அனைத்து கார்களும் கருப்பு நிறத்தில் வாங்கப்பட்டுள்ளன. அதேசமயம், கான்வாயில் பயன்படுத்தப்பட்டு வரும் அனைத்து பார்ச்சூனர் கார்களுமே முந்தைய தலைமுறை மாடலாக இருக்கின்றன.

டொயோட்டாவின் பார்ச்சூனர் கார், இந்தியாவின் எஸ்யூவி கார்கள் சந்தையில் மிகவும் பிரபலமான காராக இருந்து வருகின்றது. ஏன் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கான்வாயில் கூட புல்லட் ப்ரூஃப் தரத்திலான டொயோட்டா பார்ச்சூனர் கார்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோன்று, அவரின் கான்வாயில் பயன்படுத்தப்படும் அனைத்து பார்ச்சூனர்கள் கார்களும் கருப்பு நிறத்திலானவைத்தான்.

இதேபோன்று, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அம்பானி குடும்பத்தினரும் புதிய தலைமுறை பார்ச்சூனர் கார்களைத்தான் தங்களின் கான்வாயில் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு, டொயோட்ட நிறுவனத்தின் பார்ச்சூனர் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு நிலவி வருவது குறிப்பிடத்தகுந்தது.
Source: AP News Online Entertainment


Click it and Unblock the Notifications