இவ்ளோ பெரிய ஆளு சாதாரண ஸ்கூட்டரை வாங்கியிருக்காரா! நம்ம பண்பாட்டை மறக்காம தேங்கா ஒடச்சதெல்லாம் வேற லெவல்!
திரைப்பட நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் போன்றவர்கள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்த கார் மற்றும் பைக்குகளை வாங்குவதைதான் விரும்புகின்றனர். ஆனால் இங்கே ஒரு பிரபலம், அவ்வளவாக அறிமுகமே இல்லாத ஒரு நிறுவனத்தின் வாகனத்தை வாங்கியுள்ளார். மிகவும் விலை குறைவான அந்த வாகனம், ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பது நமக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. இது குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. சரி, வாருங்கள். இனி நேரடியாக செய்திக்குள் செல்லலாம்.
மஸராட்டி லீவண்டே (Maserati Levante), மெர்சிடிஸ் மேபெக் ஜிஎல்எஸ் 600 (Mercedes Maybach GLS 600), லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) மற்றும் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) போன்ற விலை உயர்ந்த கார்களை எல்லாம் சொந்தமாக வைத்துள்ள ஒரு நபர், சாதாரண எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அதுவும் இந்தியர்களால் புது வாகன டெலிவரியின்போது பாரம்பரியமாக செய்யப்படும் பூஜைகளை எல்லாம் செய்து, தேங்காய் உடைத்து, அவர் அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெலிவரி எடுத்தார் என்று சொன்னால் யாராக இருந்தாலும் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகதான் இருக்கும். ஆனால் இவை அனைத்தும் உண்மைதான்.
பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூரை (Arjun Kapoor) பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம். இவர் தற்போது மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். அது பீகாஸ் ஆர்யூவி 350 மேக்ஸ் (BGauss RUV 350 Max) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். உண்மையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அவ்வளவாக பிரபலம் கிடையாது.

ஆனால் தற்போது அர்ஜூன் கபூர் வாங்கியுள்ளதால், இனி வேகமாக பிரபலமாகும் என நாம் எதிர்பார்க்கலாம். பீகாஸ் ஆர்யூவி 350 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது. அவை i EX, EX மற்றும் Max ஆகியவை ஆகும். இதில், மேக்ஸ் வேரியண்ட்டைதான், அர்ஜூன் கபூர் வாங்கியுள்ளார்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த வேரியண்ட்டின் விலை 1.35 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. சாமானிய மக்களுக்கு வேண்டுமானால் இது சற்று அதிக விலையாக இருக்கலாம். ஆனால் அர்ஜூன் கபூர் போன்ற இந்தியா முழுக்க பிரபலமாக உள்ள ஒரு பாலிவுட் நடிகருக்கு, இது மிகவும் சாதாரணமான ஒன்றாகும்.
எனவேதான் அர்ஜூன் கபூர் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியிருப்பது, பேசுபொருளாக மாறியுள்ளது. பீகாஸ் ஆர்யூவி 350 மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், 3 kWh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 145 கிலோ மீட்டர் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அராய் அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் (ARAI Range) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அர்ஜூன் கபூர் டெலிவரி எடுக்கும் வைரல் வீடியோ (Viral Video) தற்போது யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதை அர்ஜூன் கபூரின் ரசிகர்கள், ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அர்ஜூன் கபூரின் இந்த நடவடிக்கை, பீகாஸ் ஆர்யூவி 350 மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிரபலப்படுத்துவதற்கு மட்டுமல்லாது, இந்தியாவில் ஒட்டுமொத்தமாக அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களையும் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக்க உதவி செய்யும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.
ஏனெனில் பிரபலங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கினால், இந்திய பொதுமக்களும் தயக்கத்தை கடந்து, எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் வாங்க முன்வருவார்கள். இது இந்தியாவின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு உதவி செய்யலாம். பாலிவுட் பிரபலங்கள் தற்போது எலெக்ட்ரிக் கார்களை அதிகளவில் வாங்க தொடங்கி விட்டனர். ஆனால் மிக பிரபலமான நடிகர் ஒருவர், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியிருப்பது, ஆச்சரியமான ஒரு விஷயம்தான்!


Click it and Unblock the Notifications








