மோடி-அமித்ஷாவின் துணிச்சலுக்கு கிடைத்த முதல் வெற்றி.. காஷ்மீரில் அடுத்து நடக்கவுள்ள புரட்சி இதுதான்
காஷ்மீர் விவகாரத்தில் மோடி-அமித் ஷா கூட்டணி எடுத்த துணிச்சலான முடிவுக்கு வெற்றி கிடைக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவு 370 அதிரடியாக திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் துணிச்சலான ஒரு முடிவை எடுத்துள்ளது. இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்ததில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பங்களிப்பு முக்கியமானது.

இது வெறும் அதிரடி முடிவு மட்டுமல்ல. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவும் கூட. முந்தைய அரசுகள் செய்ய தவறியதை மோடி-அமித்ஷா கூட்டணி மிக துணிச்சலுடன் செய்திருப்பதாகவும், இது அவசியமான ஒன்றும் எனவும் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இந்த முடிவுக்கு எதிர்ப்புகளும் எழாமல் இல்லை.

ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் சூழலில், தொழில் துறையினர் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொழில் புரட்சி ஏற்பட மத்திய அரசின் இந்த முடிவு வழிவகுக்கும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதைய நிலையில் காஷ்மீரில் பெரிதாக தொழில் வளம் இல்லை.

இயற்கையாக அமையப்பெற்ற வேளாண்மையும், கை வினை பொருட்கள் தயாரிப்பும் காஷ்மீரின் முக்கிய தொழில்கள். சுற்றுலாவில் தலை சிறந்து விளங்க வேண்டிய ஒரு மாநிலம் காஷ்மீர். ஆனால் தீவிரவாதம் அதற்கும் தடையாக உள்ளது. எனினும் இனி இந்தியாவின் மற்ற மாநிலங்களை போல், காஷ்மீரிலும் தொழில்துறை மேம்படும் என நம்பப்படுகிறது.

இந்த சூழலில் சட்டப்பிரிவு 370 திரும்ப பெறப்பட்டுள்ளதையடுத்து, ஸ்டீல்பேர்டு நிறுவனம், ஜம்மு-காஷ்மீரில், புதிய உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை தொடங்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டீல்பேர்டு நிறுவனம் ஹெல்மெட் தயாரிப்பில் தலைசிறந்து விளங்குகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

குடிமக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க வழி வகை செய்வதுடன், அங்கு தொழில் புரட்சி ஏற்பட உதவும் வகையில்தான், ஸ்டீல்பேர்டு ஹை-டெக் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஜம்மு-காஷ்மீரில் தனது உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டு வருவதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் நடவடிக்கையை ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்ஸ் நிறுவனத்தின் சேர்மன் சுபாஷ் கபூர் வரவேற்றுள்ளார். அதேபோல் ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் கபூரும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த முடிவு உதவி செய்யும் என கூறியுள்ள ராஜீவ் கபூர், நாங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக ஹிமாச்சல பிரதேச மாநிலம் பாடி பகுதியில் ஸ்டீல்பேர்டு நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

அங்கு ஸ்டீல்பேர்டு நிறுவனம் ஏற்கனவே 150 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. அத்துடன் அந்த தொழிற்சாலையில் உற்பத்தி திறனை ஒரு நாளைக்கு 44,500 ஹெல்மெட்களாக உயர்த்தவும் அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்களுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஹெல்மெட் துறையில் ஸ்டீல்பேர்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. படிப்படியாக முன்னேறி இன்று உச்சத்தை அடைந்துள்ளது. பிரேசில், இந்தோனேஷியா, கொரியா, தைவான், எகிப்து, வியட்நாம் மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஸ்டீல்பேர்டு ஹெல்மெட்கள் ஏற்றுமதியாகின்றன.

ஹெல்மெட்களில் பல்வேறு வகைகள் உள்ளன. எனவே அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதற்காக ஓபன் ஃபேஸ், ஃபுல் ஃபேஸ் என பல்வேறு வகையான ஹெல்மெட்களையும் ஸ்டீல்பேர்டு நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. தற்போது ஸ்டீல்பேர்டு நிறுவனம் ஜம்மு காஷ்மீரில் தொழிற்சாலை தொடங்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அங்கு தொழில் துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி என்றும் கூட சொல்லலாம்.


Click it and Unblock the Notifications