ரொம்ப டிராஃபிக்கா இருந்தா டக்குனு விமானமா மத்திட்டு பறக்கலாம்.. 2இன்1 வாகனம் சீக்கிரமே விற்பனைக்கு வர போகுது!
விரைவில் பறக்கும் கார்கள் வான்வெளியில் வட்டமடிக்க இருக்கின்றன. இதற்கான முயற்சிகள் உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தியாவில்கூட இன்னும் சில வருடங்கள் அல்லது மாதங்களில் பறக்கும் டாக்சிகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சென்னை மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் இதற்கான முயற்சிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே மின்சாரம் மற்றும் எரிபொருள் என இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் வகை பறக்கும் வாகனத்தை வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுமட்டுமில்லைங்க, இந்த வாகனத்தை பறக்கும் வாகனமாக மட்டுமல்ல கார்களை போல சாலையில் பயணிக்கும் வாகனமாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இத்தகைய வாகனமே விரைவில் விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி அது 2027 ஆம் ஆண்டிற்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்பதே தற்போது தெரிய வந்திருக்கின்றது.

வடக்கு கலிபோர்னியா மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம், அஸ்கா ஃப்ளை (Aska Fly). இந்த நிறுவனம் அஸ்கா ஏ5 (Aska A5) எனும் வாகனத்தையே தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இதுவே சாலையில் பயணிக்கும் மற்றும் வானில் பறக்கும் திறன் கொண்ட வாகனம் ஆகும். மேலும், இது மின்சாரம் மற்றும் எரிபொருள் இரண்டிலும் இயங்கக் கூடியதாகவும் காட்சியளிக்கின்றது.
இந்த வாகனத்தை உருவாக்கும் பணியில் அஸ்கா ஃப்ளை கடந்த 7 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. இதன் முன் மாதிரி மாடலைகூட சென்ற ஆண்டிலேயே அது வெளியீடு செய்தது. இந்த நிலையிலேயே 2027ஆம் ஆண்டிற்குள் இது விற்பனைக்கு வந்துவிடும் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வாகனம் வானில் பறக்க பெரிய அளவில் ஓடு தளம் தேவைப்படாது. இதேபோல் தரையிறங்கவும் இறங்குதளம் தேவைப்படாது. நின்ற இடத்தில் இருந்தே இது டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகியவற்றை செய்யும். செங்குத்தாக அல்லது சாய்வாக என இரண்டு நிலைகளிலும் அது டேக்-ஆஃப் ஆகிக் கொள்ளும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இதற்காக இந்த வாகனத்தின் முன் பக்கத்தில் இரண்டு ரோட்டார்களும், பின் பக்கத்தில் நான்கு ரோட்டார்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. அதாவது, இரண்டு றெக்கைகளைக் கொண்ட விமானத்தைப் போல இது இருக்கும். இதிலேயே ரோட்டார்கள் வழங்கப்பட்டு இருக்கும். இந்த றெக்கைகளை ஒரே ஒரு பொத்தானை அழுத்துவதன் வாயிலாக மடித்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு மடித்துக் கொள்ளும்போதே அதை வழக்கமான சாலையில் இயங்கும் வாகனங்களை போல பயன்படுத்திக் கொள்ள முடியும். அஸ்கா ஏ5 வாகனத்தில் ஒரே நேரத்தில் 4 பேர் வரை பயணிக்க முடியும். நான்கு சீட்டுகளையே இது கொண்டிருக்கும். இதன் ஒட்டுமொத்த எடை 5 ஆயிரம் பவுண்டுகள் முதல் 6 ஆயிரம் பவுண்டுகள் வரை இருக்கும் என அஸ்கா ஃப்ளை நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
மேலும், இதில் 100 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கை வழங்கி இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இத்துடனேயே இதன் ரேஞ்சை கூட்டிக் கொள்ளும் விதமாக எரிபொருளில் இயங்கும் எஞ்சின் ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அவ்வாகனத்தின் ரேஞ்ச் திறனை கூடுதலாக்கிக் கொள்ள உதவியாக இருக்கும்.
இதில் ஓர் முழு சார்ஜில் 402 கிமீ தூரத்திற்கும் மேலாக பறக்க முடியும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 241 கிமீட்டருக்கும் அதிகம் ஆகும். இத்தகைய திறன் கொண்ட பறக்கும் மற்றும் சாலையில் செல்லும் திறன் கொண்ட அஸ்கா ஏ5 விரைவில் உலக சந்தையில் விற்பனைக்கு வர இருக்கின்றது.
இதன் ஒரு யூனிட்டை 8 லட்சம் அமெரிக் டாலர்களுக்கு விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 6 கோடியே 72 லட்சத்துக்கு இந்த வாகனம் விற்கப்பட இருக்கின்றதாம். இந்த வாகனத்தை வாங்க ஏற்கனவே பலர் முந்தியடித்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
நிறுவனத்தின் அறிவிப்பின்படி ஏற்கனவே 100க்கும் மேற்பட்டோர் இந்த வாகனத்தை வாங்க விருப்பம் தெரிவித்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த வாகனத்தின் பறக்கும் திறன் மற்றும் சாலையில் பயணிக்கும் திறன் ஏற்கனவே சோதிக்க ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. சமீபத்திலேயே அமெரிக்காவின் முக்கிய சாலைகளில் வைத்து இது இயக்கிப் பார்க்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
சுமார் 800கிமீட்டருக்கும் அதிகமான தூரம் வரை இந்த வாகனம் இயக்கி சோதித்து பார்க்கப்பட்டு இருக்கின்றது. இந்த சோதனையோட்டத்தில் மிக சிறப்பாக அந்த வாகனம் செயல்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, சீக்கிரமே நீண்ட தூரத்திற்கு பறக்க வைத்தும் அஸ்கா ஏ5 வாகனம் சோதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே விரைவில் அது விற்பனைக்கு வந்துவிடும் என்கிற உறுதியான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் சீக்கிரமே பரக்கும் டாக்சிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. சென்னை, பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் சீக்கிரிமே பறக்கும் டாக்சிகள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே இந்த உலகத்தில் பறக்கும் மற்றும் சாலையில் ஓடும் திறன் கொண்ட வாகனங்களும் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகி இருக்கின்றது. ஆனால், இந்த வாகனம் இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்பது இப்போதைக்கு சந்தேகமே.


Click it and Unblock the Notifications








