என்ஜீனியரிங் வரை படிச்சு என்ன பிரயோஜனம்? கார் டெக்னாலஜியை இந்த அளவுக்கு கண்மூடித்தனமா நம்பக் கூடாது!!
அஸ்ஸாம் (Assam) மாநிலத்தில் பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காரின் அடாஸ் சிஸ்டத்தை தவறான முறையில் பயன்படுத்தி உள்ளார். அப்படி என்ன செய்தார் அந்த இளைஞர்? இந்த மஹிந்திரா காரில் வழங்கப்படும் அடாஸ் தொகுப்பில் என்னென்ன வசதிகள் இடம்பெறுகின்றன? வாருங்கள் விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
அடாஸ் (ADAS) என சுருக்கமாக அழைக்கப்படும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் இன்றைய கால மாடர்ன் கார்களில் பரவலாக இடம்பெற ஆரம்பித்துள்ளது. டிரைவரின் உதவி இல்லாமல், சில சமயங்களில் காரே தானாக இயங்கக்கூடிய வகையில் அடாஸ் வடிவமைக்கப்படுகிறது. அதாவது, காரை சுற்றிலும் பொருத்தப்படுகின்ற சென்சார்கள் மூலமாக சாலையின் தன்மை, மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை அறிந்து அதற்கேற்ப எச்சரிக்கைகளை அடாஸ் வழங்குகிறது.

சில நேரங்களில் தேவைப்பட்டால், காரின் கண்ட்ரோலையும் அடாஸ் தானாக எடுத்துக் கொள்ளும். இந்தியாவில் முதல்முறையாக அடாஸ் உடன் எம்ஜி க்ளோஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, அடுத்த சில மாதங்களிலேயே மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி700 காரை அடாஸ் உடன் அறிமுகம் செய்தது. முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி500 காரின் இடத்திற்கு, மஹிந்திரா எக்ஸ்யூவி700 2021 ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
கார்களில் அடாஸ் வழங்கப்படுவதன் முக்கிய காரணம் என்னவென்றால், விபத்து நேரும் சமயங்களில் டிரைவரால் காரை கண்ட்ரோல் செய்ய முடியாமல் போகலாம் என்பதால், பயணிகளின் உயிரை காப்பாற்ற வழங்கப்படுகிறது. ஆனால், நம் இந்தியர்களை பற்றித்தான் தெரியுமே. எந்தவொரு புதிய தொழிற்நுட்பத்தையும் தவறாக பயன்படுத்தி பார்க்கவே நம் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்களே...

அந்த வரிசையில், அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் என்ஜீனியரிங் மாணவர் ஒருவர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் ஒன்றில் அடாஸின் உதவியுடன் ஆபத்தான ஸ்டண்ட்களை பொது சாலையில் செய்துள்ளார். இது தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இந்த இளைஞர் காரின் ஜன்னல் வழியாக மேற்கூரைக்கு செல்வதையும், பின்னர் அங்கு நின்றுக் கொண்டு நடனமாடுவதையும் காண முடிகிறது.
அந்த சமயத்தில், காரில் இந்த இளைஞரின் நண்பர்களும் இருந்துள்ளனர். அவர்கள் தங்களது மொபைல் போன்களில் காட்சிப்படுத்திய வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி, போலீஸாரை அதிர்ச்சியுற செய்துள்ளது. இந்த செயலில் ஈடுப்பட்ட இளைஞருக்கு வயது 18- 19 மட்டுமே இருக்கும். இவர் ஜன்னல் வழியாக காருக்கு வெளியே சென்ற பின், முன் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தனது ஒரு கையில் ஸ்டேரிங்கை கண்ட்ரோல் செய்துக் கொண்டே மற்றொரு கையில் அந்த நிகழ்வை காட்சிப்படுத்தி உள்ளார்.

காருக்கு வெளியே சென்ற அந்த இளைஞர் இடையில் மீண்டும் காருக்கு உள்ளே வந்து கொஞ்சம் நேரம் காரை கண்ட்ரோல் செய்துவிட்டு, பின்னர் மீண்டும் காருக்கு வெளியே ஜன்னல் வழியாக சென்றுள்ளார். அத்துடன், காரின் மேற்கூரையில் மேலும் சில இளைஞர்கள் இருப்பதையும் காரின் பனோராமிக் சன்ரூஃப் வழியாக வீடியோவில் காண முடிகிறது.
மஹிந்திராவின் 5 இருக்கைகளை கொண்ட எஸ்யூவி காரான எக்ஸ்யூவி700 -இல் கேமரா மற்றும் ரேடார் தொழிற்நுட்பத்துடன் அடாஸ் வழங்கப்படுகிறது. அடாஸ் மூலமாக இந்த மஹிந்திரா காரில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஹை பீம் அசிஸ்ட், டிராஃபிக் சிக்னல்களை தன்னிச்சையாக அடையாளம் காணும் வசதி, ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக் மற்றும் டிரைவர் தூங்குவதை கண்டறியும் சிஸ்டம் உள்ளிட்டவற்றை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது எவ்வளவு ஆபத்தான செயல் என்பதை நாங்கள் கூற வேண்டியது இல்லை. விபத்து ஏற்பட்டால், காரில் இருந்து வெளியே சென்ற அந்த டிரைவர் தான் முதலாவதாக வெளியே தூக்கி வீசப்படுவார். தொழிற்நுட்பங்களை இந்த அளவிற்கு கண்மூடித்தனமாக நம்புவது ஆபத்தானது. படித்த பட்டதாரி இளைஞர்கள் இவ்வாறு செய்வதை பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









