குடிபோதையில் வந்து ரகளை செய்தவரை சுற்றி வளைத்த பொதுமக்கள்! யார்னு தெரிஞ்சதும் ஷாக்! போலீஸ்லாம் வந்துட்டாங்க!
மது போதையில் வாகனங்களை ஓட்டுவது சட்டப்படி தவறு. எனவே மது போதையில் வாகனங்களை இயக்குபவர்களுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு சில சமயங்களில், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளே, மது போதையில் வாகனங்களை இயக்கி, சட்டத்தை மீறுகின்றனர்.
அப்படியான ஒரு சம்பவம் கேரள மாநிலம் கொச்சியில் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. கொச்சியில் உள்ள காக்கநாடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், துணை மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பினு. இவர் சமீபத்தில் தனது காரில், வழகலா ஜங்ஷன் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அவர் மது போதையில் இருந்தார்.

அந்த சமயத்தில் ஒரு தம்பதி, ஆட்டோ ரிக்ஸாவில் இருந்து, மீன்களை இறக்கி, தங்கள் சாலையோர கடையில் வைத்து கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்ற பினு, ஆட்டோ ரிக்ஸாவை சரக்குகளை (மீன்கள்) கொண்டு செல்ல பயன்படுத்த கூடாது என கூறினார். எனவே அதை செய்த காரணத்திற்காக அபராதம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பினு பேசியதில் இருந்து, அவர் குடிபோதையில் இருப்பதை, அந்த தம்பதியினர் அறிந்து கொண்டனர். எனவே அங்கிருந்த பொதுமக்களை அவர்கள் உதவிக்கு அழைத்தனர். இதன் பேரில் பினுவை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டனர். அத்துடன் இது குறித்து அவர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் பேரில் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வந்து சேர்ந்ததும், பினு மது போதையில் இருப்பதை உறுதி செய்யும் சோதனையை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதன் பேரில் நடத்தப்பட்ட சோதனையில், பினு மது போதையில் இருந்ததை காவல் துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
அத்துடன் அங்கிருந்த தாலுகா மருத்துவமனைக்கும் பினுவை காவல் துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு நடத்தப்பட்ட சோதனைகளிலும், பினு மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் குடிபோதையில் வாகனம் ஓட்டியது மற்றும் நடத்தை விதிமுறைகளை மீறியது போன்ற காரணங்களுக்காக, பினு மீது காவல் துறை அதிகாரிகள் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் நடந்த மறுநாளே, போக்குவரத்து துறை கமிஷனர், பினுவை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் அவர் மீதான விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video), மனேரமா நியூஸ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலை தளங்களில் தற்போது இந்த வைரல் வீடியோ வேகமாக பரவி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மது போதையில் வாகனங்களை இயக்குவது தவறானது. இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு, மது போதையில் வாகனங்களை இயக்குவதுதான் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளது. அப்படி இருக்கும்போது, சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகளே, சட்டத்தை மீறுவது என்பது மிகவும் வருத்தமான ஒரு விஷயம்தான்.
இருப்பினும் மது போதையில் வாகனத்தை இயக்கிய துணை மோட்டார் வாகன ஆய்வாளர் பினு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதும், அத்துடன் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது. இவர் போன்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே, எதிர்காலத்தில் மற்ற அதிகாரிகள் இது போன்ற தவறுகளை செய்ய தயங்குவார்கள்.


Click it and Unblock the Notifications








