புதிதாக திறந்த மேம்பாலத்தை குப்பை தொட்டியாக மாற்றிய இந்தியர்கள்! 17,000 கோடியை கொட்டி இருக்காங்க..
உலக நாடுகள் அனைத்தையும் திரும்பி பார்க்கச் செய்யும் வகையில் மும்பை - நவி மும்பை இரு நகரங்களுக்கு இடையே மிக நீளமான கடல் பாலம் அமைக்கப்பட்டது. இதனையே சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, நாட்டிற்காக அர்பணித்தார். பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த கடல் மேம்பாலத்தை நம்ம ஆட்கள் சிலர் குப்பைக் கூளமாக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
வாகனங்கள் சுலபமாகவும், விரைந்துக் கடக்கும் நோக்கிலும் கட்டப்பட்டு இருக்கும் இந்த கடல் பாலம் திறந்து சில நாட்களே ஆகின்ற நிலையில் மக்கள் இவ்வாறு செய்திருப்பது பெருத்த வேதனையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரூ. 17,843 கோடி செலவில் கட்டப்பட்டதே இந்த பாலம் ஆகும். இதற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவாக 'அடல் சேது' என பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தநிலையில், சமீபத்திலேயே அந்த பணிகள் முழுமையாக நிறைவடைந்தன.
இதைத்தொடர்ந்து, சென்ற வாரம் இந்த மேம்பாலத்தை திறந்து வைத்து நாட்டிற்காக பிரதமர் நேரந்திர மோடி அர்பணித்தார். இந்த நிலையிலேயே இது பயன்பாட்டிற்கு வந்து ஒரு வாரம்கூட முழுமையாக நிறைவுறாத நிலையில், வாகன ஓட்டிகள் சிலர் அந்த அழகிய கடல் மேம்பாலத்தை குப்பை கூளமாக்கத் தொடங்கிவிட்டனர் என்கிற விபரம் வெளியாகி இருக்கின்றது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக இணையத்தில் வாகன ஓட்டிகள் சிலரால் போடப்பட்ட குப்பைகளின் படம் வெளியாகி இருக்கின்றது. மேலும், ஒரு சிலர் இந்த பாலத்தை சுற்றுலா தளம்போல பயன்படுத்தத் தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வியக்க வைக்கும் வகையில் இந்த பாலம் இருப்பதால் உள்ளூர் வாசிகள் சிலர் அந்த பாலத்தில் மீது செல்ஃபி மற்றும் ரீல்ஸ் வீடியோவையும் எடுக்கத் தொடங்கி இருக்கின்றனர்.
இருப்பினும், இது ஓர் வாகன போக்குவரத்திற்கான தடம் என்பதால் இவ்வாறு நாம் செய்வது சரியானது அல்ல என்பதை உணர்ந்தாக வேண்டும். இதனால்தான், இதைக் கட்டுப்படுத்தும் விதமாக மும்பை நகர காவல்துறையினர் விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

முக்கியமாக, போக்குவரத்து இடையூறு அளிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ஃபி மற்றும் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அபராதம் விதிக்க காவல்துறையினர் தொடங்கி இருக்கின்றனர். மற்ற வாகனங்கள் தடையின்றி சென்று வர வேண்டும் என்கிற நோக்கிலேயே காவல்துறை இவ்வாறு கடுமையான நடவடிக்கையை எடுக்கத் தொடங்கி இருக்கின்றது.
மஹாராஷ்டிராவின் இரு முக்கிய நகரங்களே மும்பை மற்றும் நவி மும்பை ஆகும். இந்த இரு நகரங்களையே அடல் சேது இணைக்கும் வகையில் அரபிக் கடல் பரப்பில் அமைக்கப்பட்டு இருக்கின்றது. சுமார் 21.8 கிமீ நீளம் இதில் கடல் வழியிலேயே பயணிக்கும். இதனாலேயே இதைக் காண உள்ளூர் மற்றும் வெளியூர் வாசிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
அவ்வாறு வருபவர்களில் சிலர் தாங்கள் பன்படுத்தி சில பொருட்களின் கழிவுகளை அப்படியே பாலத்தின் மீதே வீசிச் சென்றிருக்கின்றனர். மிக அழகான பாலத்திற்கு இழுக்கு சேர்க்கும் விதமாக இவ்வாறு சிலர் செய்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையிலேயே தேவையில்லாமல் வாகனத்தை நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் மும்பை நகர காவலர்கள் களமிறங்கி இருக்கின்றனர்.
இதுவரை 264 மோட்டார்சைக்கிள் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கின்றது. ஒவ்வொரு மோட்டார்சைக்கிள் உரிமையாளரிடமும் ரூ. 500 அபராதம் வசூலிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மேம்பாலத்தில் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது என்பதை ஏற்கனவே மும்பை காவல்துறை வகுத்து இருக்கின்றது. மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஆனால், 4 சக்கர வாகனங்களுக்கான ஸ்பீடு லிமிட் ஆகும். ஆனால், ஏற்றம் மற்றும் இறக்கத்தில் மணிக்கு 40 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இது அனைத்து விதமான வாகனங்களுக்கும் பொருந்தும். இந்த மேம்பாலத்தில் மோட்டார்சைக்கிள், டிராக்டர் மற்றும் ஆட்டோக்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது.
இன்னும் தெளிவாக செல்ல வேண்டும் என்றால் குறைவான வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு இந்த மேம்பாலத்தில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பன்முக ஆக்சில்கள் கொண்ட டிரக் மற்றும் பேருந்துகள் மும்பை நோக்கி வருபவைகளுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, விரைவில் செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்கவும் தடை என்கிற பதாகைகளை மும்பை காவல்துறை கடல் பாலத்தில் வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன போக்குவரத்து விதிமீறல்களின் விகிதம் நாளுக்கு நாள் இந்தியாவில் பெருகிய வண்ணம் இருக்கின்றது. இதனால் வாகனங்கள் சார்ந்து அரங்கேறும் விபத்துகளின் விகிதமும் அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. இதனால்தான் வாகன போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை காவல்துறை எடுத்து வருகின்றது.


Click it and Unblock the Notifications









