பிஜேபி அரசு செய்த தவறா? கர்நாடகாவுக்கு இப்போது வரையில் கிடைக்காமல் போகும் நல்ல விஷயம்!!
ஏத்தர் எனர்ஜி (Ather Energy), இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. பெங்களூரில் இருந்து பல்வேறு இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் நுழைந்துள்ளன. அவற்றுள் ஒன்றுதான் ஏத்தர் எனர்ஜி ஆகும். ஆனால், தலைமையகத்தை மட்டுமே பெங்களூரில் கொண்டுள்ளது. மற்றப்படி, ஏத்தர் எனர்ஜியின் தொழிற்சாலைகள் யாவும் கர்நாடகாவிற்கு வெளியே செயல்படுகின்றன. இந்த நிலையில், ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 3வது தொழிற்சாலையை நிறுவ தயாராகி வருகிறது. ஆனால், இந்த முறையும் கர்நாடகாவிற்கு பதிலாக மஹாராஷ்டிராவில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் நீண்ட வருடங்களாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்துவரும் நிறுவனம் ஏத்தர் எனர்ஜி ஆகும். இதன் மூலமாக இ-ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் நன்கு அனுபவம் வாய்ந்த நிறுவனமாக விளங்கும் ஏத்தர் எனர்ஜி ஹீரோ மோட்டோகார்பின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. 2013ஆம் ஆண்டில் பெங்களூரில் ஏத்தர் எனர்ஜி நிறுவப்பட்டது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வடிவமைப்பது, அதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது உள்ளிட்டவற்றை எல்லாம் பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொண்டாலும், தொழிற்சாலை என வந்ததும் நம் தமிழ்நாட்டை தேடி ஏத்தர் எனர்ஜி ஓடி வந்தது. பெங்களூருக்கு அருகே இருக்கும் ஒசூரில் தொழிற்சாலையை நிறுவியது. தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் எந்த அளவிற்கு தொழில்துறை மையமாக விளங்குகிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
ஓசூரில் பத்தோடு பதினொன்றாக தொழிற்சாலையை நிறுவிய ஏத்தர் எனர்ஜியின் வணிகம் வேகமாக வளர ஆரம்பித்தது. ஏத்தர் எனர்ஜியின் '450' எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. இதனால், முதல் தொழிற்சாலை ஏத்தர் நிறுவனத்துக்கு போதவில்லை. இதனையடுத்து ஓசூரிலேயே 2வது தொழிற்சாலையை இந்த பெங்களூர் நிறுவனம் நிறுவியது.

இவற்றை தொடர்ந்து 3வது தொழிற்சாலையை நிறுவ ஏத்தர் எனர்ஜி தயாராகி வருகிறது. இந்த தொழிற்சாலையையும் கர்நாடகாவில் இல்லாமல், மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் நிறுவ ஏத்தர் நிறுவனம் இடம்பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கர்நாடக மக்களிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, கர்நாடக மாநில அரசியல்வாதிகள் ஏத்தர் எனர்ஜியின் இந்த செயலுக்கு நேரடியாக தங்களது எதிர்ப்பை காட்ட ஆரம்பித்துள்ளனர்.
கர்நாடக எதிர்கட்சி தலைவரும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான அரவிந்த் பெல்லாட் தனது எக்ஸ் தள பக்கத்தில், "ஏத்தர் எனர்ஜி போன்ற கர்நாடகாவை சேர்ந்த நிறுவனம் தனது 3வது ஆலையை கர்நாடகாவிற்கு பதிலாக மஹாராஷ்டிராவில் அமைக்க திட்டமிட்டு இருப்பது ஏமாற்றமளிக்கிறது. முதலமைச்சர் சித்தராமையா மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீல் ஆகியோர் விரைந்து செயல்பட்டு, ஏத்தருடன் இணைந்து ஆலையை கர்நாடகாவிற்கு கொண்டுவர அவர்களை வற்புறத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏத்தர் எனர்ஜியின் தொழிற்சாலைக்கு கர்நாடகாவில் ஹூப்லி மற்றும் தார்வாட் பகுதிகள் ஏற்றவையாக உள்ளதாகவும், இந்த பகுதிகளில் டாடா மோட்டார்ஸ் போன்ற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலையை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ள கர்நாடக எம்.எல்.ஏ அரவிந்த் பெல்லாட், வேலை வாய்ப்புகள் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் இந்த வாய்ப்பை வீணடிக்க வேண்டாம் எனவும் மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.
எம்.எல்.ஏ அரவிந்த் பெல்லாட் இந்த எக்ஸ் பதிவில், பதிவிட்டுள்ள படத்தில் காட்சி தருவது கடந்த 2023ஆம் ஆண்டில் ஓசூரில் திறக்கப்பட்ட ஏத்தர் எனர்ஜியின் 2வது தொழிற்சாலையின் படம் ஆகும். இதற்கு பதில் அளித்துள்ள கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீல், "2022இல் ஏத்தர் 50 ஏக்கர் நிலத்தை கேட்டது. ஆனால், பிஜேபி வழங்கவில்லை. இது பிஜேபி-இன் தவறு. நான் அந்த வாய்ப்பை மீண்டும் பெற முயற்சிக்கிறேன்" என கூறியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு, ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி என மாறிமாறி குறைக் கூறி கொள்கின்றன. ஆனால், மாநிலத்திற்கு எந்த நல்லதும் நடக்கவில்லை. தற்போதைய தொழில்துறை அமைச்சர் ஏத்தர் நிறுவனத்தை கர்நாடகாவிற்கு அழைப்பதாக தெரிவித்துள்ளார். ஏத்தர் மஹாராஷ்டிராவுக்கு செல்லுமா அல்லது கர்நாடகாவிலேயே தங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









