10ரூபா, 20ரூபா கீரையை விற்க அரை கோடி ரூபா காரில் வந்த விவசாயி.. எல்லாரையும் திரும்பி பார்க்க வச்சுட்டாரு!
"இந்தியாலதாங்க இப்படி எல்லாம் நடக்கும்" என சொல்லும் அளவிற்கு முற்றிலும் விநோதமான நிகழ்வுகள் சில நம் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. ஏன், இப்போதும் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. அந்தவகையில், சமீபத்தில் நடைபெற்ற விநோத நிகழ்வுகுறித்து வெளியாகி இருக்கும் வீடியோ பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஆடி காரில் வரும் ஒருவர் ரோட்டோரத்தில் வைத்து தான் விளைவித்த உணவு பொருட்களை விற்பனைச் செய்யும் வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாகிக் கொண்டிருக்கின்றது. கேரள மாநிலத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. வீடியோவில், விலை உயர்ந்த காருக்கு அதிபதியான அந்த நபர், தன்னுடைய தோட்டத்தில் விளைந்த கீரை வகையை ஓர் ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றார்.

அந்த கீரையை சாலையோர சந்தையில் வைத்து விற்கும் காட்சிகளே இடம் பெற்றிருக்கின்றன. இதில் மிக பெரிய ஹைலைட்டாக அவர் இதை எல்லாம் விற்பதற்காக வந்த காரே இருக்கின்றது. பத்து ரூபா, 20 ரூபா மதிப்புள்ள கீரை வகைகளை விற்க அவர் சந்தைக்கு ஆடி சொகுசு காரையே பயன்படுத்தி இருந்திருக்கின்றார்.
மேலும், ஆடி காரில் வரும் வரை ஓர் பணக்காரரை போல தோற்றத்திலும், சந்தைக்கு வந்த பின்னர் வேட்டியை கழட்டிவிட்டு, முழு வியாபாரியையும் போலவும் அவர் மாறி இருக்கின்றார். இந்த காட்சிகளே இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அந்த இளம் பணக்கார விவசாயி பயன்படுத்தியது ஆடி ஏ4 செடான் ரக சொகுசு காராகும்.

பொதுவாக, இந்த காரை பயன்படுத்தி வரும் பலரும் சந்தைக்கு வந்து காய்கறி வாங்கவே யோசிப்பார்கள். ஆனால், இந்த நபரோ சந்தையில் கீரைகளை விற்க இந்த காரில் வந்திருக்கின்றார். இதனால்தான் பலரும் இதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர். அவர் கொண்டு வந்த அனைத்து கீரைகளும் விற்று தீர்ந்த பின்னர் மீண்டும் பணக்காரரை போல மினுக்கும் வேட்டியை அணிந்து அவர் வந்தே அதே சொகுசு காரில் புறப்படுகின்றார்.
இந்த விவசாயியின் பெயர் சுஜித் என கூறப்படுகின்றது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தபடி விவசாயத்தை அவர் பார்த்துக் கொண்டிருக்கின்றார். இவரின் இந்த செயலுக்காக கேரளா அரசாங்கமே அவருக்கு விருதினை வழங்கி இருக்கின்றது. இவரும் மற்ற விவசாயிகளைப் போலவே மிகவும் ஏழ்மையான சூழலிலேயே தன்னுடைய விவாசய தொழிலை தொடங்கி இருக்கின்றார்.

ஆனால், சந்தையின் தேவை என்ன? எதில் அதிகம் லாபம் கிடைக்கும் என்பதை உணர்ந்து தன்னுடைய தொழிலை அவர் மாற்றி இருக்கின்றார். இதுவே அவரை சொந்தமாக ஆடி ஏ4 செடான் காரை வைத்திருக்கும் அளவிற்கு உயர்த்தி இருக்கின்றது. மேலும், இவர் தன்னுடைய விவசாய பொருட்களை விற்பனைச் செய்ய பிறரை நாடவில்லை.
அவரே அவரின் உற்பத்தியை சந்தைப்படுத்தி இருக்கின்றார். இதன் விளைவாகவே கடந்த பத்து வருடத்தில் அதீத வளர்ச்சியை அவர் சந்தித்து இருக்கின்றார். விவசாயிகள் ஒரு சிலர் போட்ட காசையே திருப்பி எடுக்க முடியவில்லை என கூறி புலம்பிக் கொண்டிருக்கும் நம்முடைய இந்த நாட்டிலேயே ஒரு சில விவசாயிகள் மிகுந்த ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.
சந்தையின் தேவைக்கு ஏற்ப விவசாயிகள் தங்களை மாற்றிக் கொண்டால் விவசாயமும் பணக்கார தொழிலாக மாறும் என்பதற்காகவே இந்த சம்பவங்கள் நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆமாங்க, இந்தியாவில் இதுபோன்று சொகுசு கார்களை பயன்படுத்தும் விவசாயிகள் பலர் இருக்கின்றனர். அந்தவகையில், சமீபத்தில்கூட தமிழகத்தைச் சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் பி-கிளாஸ் எம்பிவி ரக காரை வாங்கி இருந்தார். இதுபோன்ற நிகழ்வுகள் பல நம்முடைய நாட்டில் அரங்கேறி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேரள விவசாயி பயன்படுத்திய ஆடி ஏ4 சொகுசு செடான் ரூ. 43.85 லட்சம் தொடங்கி ரூ. 51.85 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய உயரிய விலைக் கொண்ட காரிலேயே கீரையை விற்க விவசாயி சந்தைக்கு வந்திருக்கின்றார் என்றால் உங்களாலேயே நம்ப முடியவில்லை அல்லவா...


Click it and Unblock the Notifications









