காருக்குள் இருந்தவர்களுக்கு இது மறுஜென்மம் - எமன் விடுமுறையில் சென்ற நேரத்தில் நடந்த சம்பவம்!!
கோவாவில் மலைப்பகுதியில் அந்தரத்தில் தொங்கி கிடந்த விலையுயர்ந்த ஆடி கார் தொடர்பான வீடியோவை உங்களில் சிலர் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். மலைப்பகுதியில் கார் ஓட்டுவது நிச்சயமாக சவாலான காரியம். கொஞ்சம் கரணம் தப்பினால் கூட மரணம் என்கிற அளவிற்கு சாலைகள் வளைந்து வளைந்து செல்லும். இதன் காரணமாகவே மலை சாலைகளில் வாகனம் ஓட்டும்போது குறைவான வேகத்திலும், எப்போது கவனம் சாலையில் இருக்கும்படியும் செயல்பட வேண்டியது அவசியம். சொகுசு ஆடி காரில் சென்ற இங்கு ஒரு க்ரூப் காரை அந்தரத்தில் தொங்கும்படி நிறுத்தியுள்ளனர்.
கோவா மாநிலம் ஒன்றும் மலைப்பிரதேச மாநிலம் கிடையாது. கோவா ஆனது கடல் மற்றும் கடற்கரை சார்ந்த மாநிலம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். இருப்பினும், இந்த மாநிலத்தில் சில மலைப்பிரதேச பகுதிகள் உள்ளன. அதில் ஒரு மலைப்பகுதியில் இருந்து முக்கியமான கடற்கரைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள பகுதி திலாரி காட் வால் (Tilari Ghat Wall).

திலாரி காட் வால் பகுதியில் சென்று கொண்டிருந்த விலையுயர்ந்த ஆடி ஏ4 கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலையில் இருந்து கீழே விழ பாய்ந்தது. ஆனால் நல்லவேளையாக, காரின் 2 சக்கரங்கள் சாலையின் தடுப்பு சுவரில் சிக்கிக் கொண்டு நின்றன. அதாவது, காரின் மற்ற 2 சக்கரங்கள் அந்த தடுப்பு சுவரையும் தாண்டி சென்ற நிலையில், மீதி 2 சக்கரங்கள் சுவரை தாண்ட முடியாமல் சிக்கின.
இவ்வாறு நடப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே. ஏனெனில், காரின் இரு சக்கரங்கள் அந்த பக்கம் சென்றுவிட்டாலே மீதி 2 சக்கரங்களும் தானாகவே பேலன்ஸை இழந்து சென்றுவிடும். இந்த சம்பவத்தில், சாலை தடுப்பு சுவரின் மீது இந்த ஆடி கார் சரியாக அமர்ந்துள்ளது. ஆதலால் இந்த விஷயத்தில், காரின் உடலமைப்பு, எடை, சம்பவத்தின்போது டிரைவரின் செயல்பாடு, காரின் வேகம் என பல விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது.

மலைக்கு அடிவாரத்தில் இருந்து ஏதேனும் மரங்கள் காரின் ஒரு பக்கத்தை தாங்கி பிடித்திருக்கலாம். இதனால், கூட கார் கவிழாமல் இருந்திருக்கலாம். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வேறொரு வாகனத்தில் இருந்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதால், மலையின் அடிவாரத்தை பார்க்க முடியவில்லை. சம்பவம் நடைபெற்று முடிந்த பின்பே இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த ஆடி ஏ4 காரை டிரைவர் கொஞ்சம் வேகமாக ஓட்டி வந்துள்ளார். வழக்கமான மலைப்பகுதி சாலைகளை காட்டிலும், இவ்வாறான கடற்கரைக்கு செல்லும் மலை சாலைகள் இன்னும் சறுகலானதாக இருக்கும். இதனால், இவ்வாறான சாலைகளில் வேக வரம்பானது மிகவும் குறைவாகவே இருக்கும்.

இந்த சம்பவத்தில் காரில் சென்ற அனைவரும் பத்திரமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடியோவில், காரும் பெரியதாக சேதாரம் அடையாத நிலையில் காட்சியளிக்கிறது. இந்த விபத்தில் சிக்கியுள்ள ஆடி ஏ4 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது இந்தியாவில் ஆடி நிறுவனத்தின் விலை குறைவான கார்களுள் ஒன்றாக உள்ளது. ஆடி ஏ4 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.46 லட்சத்தில் இருந்து ரூ.54.58 லட்சம் வரையில் உள்ளன.
கடைசியாக 2022 செப்டம்பர் மாதத்தில் அப்டேட் செய்யப்பட்ட ஆடி ஏ4 கார் பிரீமியம், பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் டாப் வேரியண்ட்டான ஏ4 டெக்னாலஜியை தான் பலரும் தேர்வு செய்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆடி காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. டீசல் என்ஜின் ஆப்ஷன் எதுவும் இந்த காரில் வழங்கப்படுவதில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த ஆடி காரில் சென்றவர்களுக்கு இது மறுஜென்மம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், ஏற்கனவே கூறியதுபோல் இவ்வாறு கார் அந்தரத்தில் சரியான பேலன்ஸில் தொங்குவதற்கு வாய்ப்புகள் குறைவே. சம்பவத்தின்போது, காரில் இருந்து வெளியே இறங்கி வருவதற்குள் உள்ளே இருந்தவர்களுக்கு தலைச்சுற்றி இருக்கும். ஏனெனில், உள்ளே இருந்தவர்கள் கொஞ்சம் அந்த பக்கம் சென்றிருந்தால் கூட கார் மலையில் இருந்து விழுந்திருக்கும்.


Click it and Unblock the Notifications









