இது செம ஐடியாவா இருக்கே... கார் ஓட்டும்போது ஹெல்மெட் அணியும் லாரி ஓனர்கள் சங்க தலைவர்... காரணம் என்ன தெரியுமா?
இந்தியாவில் தற்போதெல்லாம் சிசிடிவி கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராத ரசீதை போக்குவரத்து காவல் துறையினர் தங்கள் கைகளால் வழங்குவதில்லை. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள சிஸ்டமே, வாகன உரிமையாளரின் செல்போனுக்கு, அபராத ரசீதை அனுப்பி வைத்து விடும்.
அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. ஆனால் இந்த தொழில்நுட்பத்தில் ஒரு சில சமயங்களில் குளறுபடிகளும் ஏற்படுகின்றன. அதாவது டூவீலரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணியில்லை என்பது போன்ற காரணங்களை கூறி சிலருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த வரிசையில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு அபராதம் விதிப்பில் தற்போது குளறுபடி நடைபெற்றுள்ளது. அவரது பெயர் பகதூர் சிங் பரிகார் என்பதாகும். அவரது ஊரில் இயங்கி வரும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ள பகதூர் சிங் பரிகார் ஆடி நிறுவனத்தின் சொகுசு கார் ஒன்றை வைத்துள்ளார்.

சமீபத்தில் இவரது செல்போனுக்கு மெசேஜ் ஒன்று வந்தது. இந்த மெசேஜில், அவரது ஆடி காருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த அபராத ரசீதில் இணைக்கப்பட்டிருந்தது ஒரு பைக்கின் புகைப்படம் ஆகும். அவரது ஆடி காரின் புகைப்படம் இணைக்கப்படவில்லை. ஹெல்மெட் அணியவில்லை என்ற காரணத்தை கூறி, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை எல்லாம் பகதூர் சிங் பரிகார் விவரித்தார். ஆனால் தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று கொண்டுள்ளதால், இதைப்பற்றி விசாரிக்க முடியாது என காவல் துறை அதிகாரிகள் கைவிரித்து விட்டனர். இதனால் பகதூர் சிங் பரிகார் அதிருப்திடையந்தார்.

ஆனால் அவர் இந்த பிரச்னையை அப்படியே விட்டு விட கூடாது என முடிவு செய்தார். இதையடுத்து இந்த குழப்பங்களுக்கு எதிரான போராட்டம் ஒன்றை அவர் முன்னெடுத்துள்ளார். இதன்படி தற்போது ஹெல்மெட் அணிந்து கொண்டுதான் அவர் தனது ஆடி காரை ஓட்டுகிறார். பகதூர் சிங் பரிகார் ஹெல்மெட் அணிந்து கொண்டு ஆடி காரை ஓட்டும் வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. பகதூர் சிங் பரிகாரின் இந்த நூதன போராட்டத்தால், போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளுக்கு தர்ம சங்கடமான சூழல் உருவாகியிருக்கிறது. எனவே நெட்டிசன்கள் இந்த போராட்டத்தை சிறப்பான ஐடியா என கூறி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் இது போன்ற குளறுபடிகள் நடைபெறுவது என்பது இது முதல் முறையல்ல. டூவீலர் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியவில்லை, கார் ஓட்டும்போது ஹெல்மெட் அணியவில்லை என்பது போன்ற காரணங்களை கூறி, கடந்த காலங்களில் பலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நன்கு வளர்ச்சி அடைந்த வெளிநாடுகளை போல் இந்தியாவிலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு, அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் அபராதம் விதிக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். ஆனால் அதில் ஏற்படும் குளறுபடிகளை உடனடியாக களைய வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உள்ளது.
ஆனால் குளறுபடிகள் இன்னும் முழுமையாக களையப்படவில்லை. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இது போன்ற சம்பவங்களே இதற்கு உதாரணம். இனி மேலும் இத்தகைய குளறுபடிகள் நீடித்து கொண்டிருந்தால், அரசு மற்றும் அதிகாரிகள் மீது வாகன உரிமையாளர்கள் கடும் அதிருப்தியடைய நேரிடலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








