“ஆட்டோ ஓட்டுனர்களும் அட்வான்ஸாக இருப்போம்ங்க” - பெண் பயணியை சில நிமிடங்களில் மெர்சலாக்கிய ஆட்டோ டிரைவர்!!
இன்றைய உலகில் தொழிற்நுட்பம் மிக அதீத வளர்ச்சி அடைந்துள்ளது. இருவருக்கு இடையே நடக்கும் பண பரிவர்த்தனையில், பணத்தை கொடுப்பவர் தன்னிடம் உள்ள ஒரு பொருளை காட்ட, பணத்தை பெறுவர் தனது கை மணிக்கட்டை காட்டினாலே இருவருக்கும் இடையே பண பரிவர்த்தனை முடிந்துவிடும் என ஒரு 50 வருடத்திற்கு முன்பு சொன்னால், நிச்சயமாக யவரொருவரும் உங்களை நம்ப மாட்டார்கள்.
ஆனால் இன்று அப்படி தான் பண பரிவர்த்தனை நடந்துக் கொண்டிருக்கிறது. பெங்களூரு, இந்தியாவின் மென்பொருள் தலைநகரம். நம் நாட்டில், தொழிற்நுட்ப வளர்ச்சியை அபரிதனமாக கண்டுவரும் நகரங்களுள் முதன்மையானதும் பெங்களூர் என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, இந்த நகரில் பண பரிவர்த்தனைகள் கிட்டத்தட்ட முற்றிலுமாக டிஜிட்டல் மயமாகி விட்டது.

மாநகர பேருந்துகள் என பெங்களூரில் மிகவும் சில இடங்களில் மட்டுமே காகித பணம் கொடுக்க வேண்டியதாக உள்ளது. பெங்களூரில் ஓர் சிறிய பான் கடையில் கூட டிஜிட்டல் முறையில் மொபைல் போன் வாயிலாக பணத்தை செலுத்தலாம். ஒரு க்யூ.ஆர் ஸ்கேன் கோட் இருந்தால் போதும்... எங்கு வேண்டுமானாலும் பண பரிவர்த்தனையை செய்துவிடலாமே! இப்படிப்பட்ட சூழல் நிலவும் பெங்களூரில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பயணியிடம் இருந்து டிஜிட்டல் முறையில் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
ஓர் சிறிய பான் கடையிலேயே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி இருக்கும்போது, ஆட்டோவில் இருக்காதா? இதில் என்ன சிறப்பு உள்ளது? என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த ஆட்டோ ஓட்டுனர் தான் கையில் அணிந்து இருந்த ஸ்மார்ட்வாட்ச்சில் வைத்திருந்த க்யூ.ஆர் ஸ்கேன் கோட்-இன் படத்தை காட்டி பயண சேசைக்கான கட்டணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

அதாவது, ஆட்டோ ஓட்டுனர் மற்றும் கஸ்டமர் இருவரும் தங்களது முகத்தை ஒருவருக்கொருவர் பார்க்காமலேயே இந்த பண பரிவர்த்தனை நடந்து முடிந்துள்ளது. இதனை ஆட்டோவில் பயணித்த மற்றொரு பெண் பயணி தனது மொபைல் போனில் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது பல லைக்குகள், ரீபோஸ்ட்கள் மூலம் டுவிட்டரில் பலரது கவனத்தை பெற்றுள்ளது.
இந்த டுவிட்டர் பதிவில், "இன்று நம்ம யாத்ரியில் நம்ம டோனி ஸ்டார்க்கை சந்தித்தேன். என் ஆட்டோ டிரைவரிடம் க்யூ.ஆர் குறியீட்டை கேட்டேன். மனிதன் தன் கையை திருப்பி அவருடைய ஸ்மார்ட்வாட்ச்சை என்னிடம் காட்டினார். அவர் தனது ஸ்மார்ட்வாட்ச்சில் ஸ்க்ரீன்சேவராக க்யூ.ஆர் குறியீட்டை சேமித்து வைத்துள்ளார். அவ்வளவு ஸ்வாக்" என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
'நம்ம யாத்ரி' என்பது ஓர் மொபைல் செயலி ஆகும். இந்த மொபைல் செயலி ஆனது கர்நாடக ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்கள் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவது குறிப்பிடத்தக்கது. ஆட்டோ டிரைவரின் ஸ்மார்ட்வாட்ச் பண பரிவர்த்தனையை கண்டு ஆச்சரியமடைந்த பெண் பயணி நம்ம யாத்ரி செயலி மூலமாக ஆட்டோவை புக் செய்துள்ளார்.
தலைநகர் டெல்லியை போல், பெங்களூரிலும் தொழிற்நுட்பங்களையும், மென்பொருளையும் அட்வான்ஸாக உபயோகப்படுத்தக்கூடிய மக்களை நிறைய இடங்களில் பார்க்கலாம். கடந்த மார்ச் மாதத்தில், உபேர் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது யூடியூப் சேனலின் பெயரையும், புகைப்படத்தையும் ஆட்டோவிற்குள் நாலாப்புறமும் ஒட்டி வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்றிருந்தன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஏற்கனவே கூறியதுதான், தொழிற்நுட்பங்களின் பயன்பாட்டில் பெங்களூர் நாளுக்கு நாள் வளர்ச்சிக் கண்டு வருகிறது. நம் சென்னையும் அவ்வாறே வளர்ச்சி கண்டு வருகிறது என சொன்னாலும், பெங்களூரில் இந்த வேகம் அதிகமாக உள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டும். இதற்கு முக்கிய காரணம், பெங்களூரில் சாஃப்ட்வேர் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பல புதியதாக முளைத்துள்ளன/ முளைத்து வருகின்றன.


Click it and Unblock the Notifications