ஆட்டோ டிரைவர்ஸ் எல்லாம் இனி இதை ஃபாலோ பண்ண போறாங்க... நேரம் ரொம்ப மிச்சம் ஆகும்!!
பெங்களூரு (Bengaluru),இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பெரிய அளவில் வளர்ச்சி கண்ட நகரங்களுள் முக்கியமானது என சொன்னால், அது மிகையில்லை. ஏனெனில், தற்கால உலகளாவிய தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் மென்பொருள் தலைநகரமாக பெங்களூர் விளங்குகிறது. ஒரு நகரம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்கிறது என்றாலே, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரமும் வளர்ச்சியடைந்து வருகிறது என்று அர்த்தம். இதனை வெளிக்காட்டும் வகையில், பெங்களூரில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களை பற்றி நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில் தற்போது ஒரு சம்பவத்தை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.
இணையத்தில் வைரலாகிவரும் இந்த நிகழ்வை பற்றிய விபரங்களை வெளியிட்டு இருப்பவர் வேறு யாருமில்லை, இந்திய இரயில்வே துறை அமைச்சரான அஷ்வினி வைஷ்ணவ் ஆவார். இவரது எக்ஸ் தளத்தில் புதியதாக ஒரு போட்டோ பகிரப்பட்டுள்ளது. அந்த படத்தில், ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது கை கடிகாரத்தை பின் இருக்கை பயணிக்கு காட்டியவாறு இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

என்னவென்று, அந்த ஆட்டோ டிரைவரின் கை கடிகாரத்தை சற்று உற்று கவனித்தால், ஸ்மார்ட் வாட்ச்சான அதில் க்யூ.ஆர் கோட் காட்டப்படுகிறது. அதாவது, பணப்பரிவர்த்தனைக்கான க்யூ.ஆர் கோடை பின் இருக்கை பயணிக்கு அந்த ஆட்டோ டிரைவர் காட்டியுள்ளார். இதனை அந்த ஆட்டோ பயணி தனது மொபைல் போனில் போட்டோ எடுக்க, அந்த போட்டோ எப்படியோ மத்திய இரயில்வே துறை அமைச்சர் வரையில் சென்றுள்ளது.
மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், "யுபிஐ ஸ்வேக். பணப்பரிவர்த்தனைகள் இன்னும் சூப்பர் ஈசியாக" என குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் கூறுவதை போன்று, இப்போதெல்லாம் பணப்பரிவர்த்தனைக்கு ரூபாய் நோட்டுகளையும், சில்லறைகளையும் தேடிக் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லாமல், எந்தவொரு நேரடி தொடர்பும் இல்லாமல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடிகிறது.
யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் நம் நாட்டில் கடந்த சில வருடங்களாகவே பயன்பாட்டில் உள்ளது. ஆனால் முன்பு, ஒருவரிடம் இருந்து பணத்தை யுபிஐ வழியாக பெற வேண்டுமென்றால், மொபைல் போனில் க்யூ.ஆர் கோடை காட்ட வேண்டும் அல்லது க்யூ.ஆர் கோட் ஸ்டிக்கரை காட்ட வேண்டியதாக இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் கைக் கடிகாரத்தில் மொபைல் போன் அழைப்புகளை கூட மேற்கொள்ள முடிவதால், க்யூ.ஆர் கோடையும் ஸ்மார்ட் வாட்ச்சில் கொண்டுவர முடிகிறது.
இதனால், மொபைல் போனை எடுக்க வேண்டிய அவசியம் கூட இல்லாமல் போய்விட்டது. இதனால்தான், அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள படத்தில் ஆட்டோ டிரைவர் பின்னால் முழுவதுமாக கூட திரும்பவில்லை. ஸ்மார்ட் வாட்ச்கள் மூலமாக பணத்தை பெறும் செயல்முறைகள் நாடு முழுவதும் சில இடங்களில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாலும், பெங்களூரில் தான் இவ்வாறான மக்களை அதிகமாக பார்க்க முடிகிறது.
மத்திய அமைச்சரின் இந்த எக்ஸ் பதிவிற்கு பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில் ஒருவர், "நிச்சயமாக இவர் (ஆட்டோ டிரைவர்) என்ஜினீயரிங் பட்டதாரியாக இருக்க வேண்டும்" என்றும், மற்றொருவர் "மாடர்ன் பிரச்சனைகளுக்கு மாடர்ன் தீர்வுகள் தேவை" என்றும், இன்னொருவர் "இது புதிய இந்தியாவின் புதிய புகைப்படம்" என்றும் தெரிவித்துள்ளனர்.
2016ஆம் ஆண்டில் இந்திய தேசிய பணப்பரிவர்த்தனைகள் கார்ப்பிரேஷனால் யுபிஐ அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலமாக, இரு வங்கிகள் இடையே பணப்பரிவர்த்தனைகளை மிகவும் விரைவாகவும், எளிதாகவும் மேற்கொள்ள முடிகிறது. குறிப்பாக, சில்லறைகளை தேடுவது மற்றும் பணம் திருடு போவது உள்ளிட்டவற்றை யுபிஐ பணப்பரிவர்த்தனை தவிர்க்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வின் எக்ஸ் பதிவிற்கு ஒருவர் கமெண்ட் செய்திருப்பதை போன்று, புதிய டிஜிட்டல் இந்தியாவின் புதிய தோற்றத்தை பிரதிப்பலிக்கக்கூடியதாக இந்த புகைப்படம் உள்ளது. இதன் மூலமாக, போக்குவரத்து துறையும் வேகமாக செயல்பட்டு வருகிறது. யுபிஐ பணப்பரிவர்த்தனை மூலமாக ஆட்டோ டிரைவர்கள் நிறைய நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications








