ஆட்டோக்களில் இனி இந்த மாதிரி அட்டைகளை பார்க்க முடியும்!! இதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா?
ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் அவர்களது பண்டைய மொழி தான் அவர்களுக்கு உயிர் மூச்சாக இருக்கும். இந்த விஷயத்தில் கன்னட மக்கள் கொஞ்சம் அதிக தீவிரமானவர்கள் என்பதை பல்வேறு நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். நம் தமிழர்களை போலவே, கர்நாடக மாநில மக்களும் அவர்களது கன்னட மொழியில் அதிக ஈடுப்பாடு கொண்டவர்களாக இருக்கின்றனர். இதற்கு சாட்சியாக மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
நம் சென்னையை போலவே, கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரிலும் பலரது வாழ்க்கை 3-சக்கர ஆட்டோ ரிக்ஷாவை நம்பியே உள்ளது. ஆனால், பெங்களூர் ஆட்டோக்காரர்கள் கொஞ்சம் அட்வான்ஸாக இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது, கஸ்டமரை பிடிப்பது மற்றும் அவர்களிடம் இருந்து கட்டணத்தை பெறுவது உள்ளிட்டவற்றை எல்லாம் இணையம் வாயிலாகவே முடித்துக் கொள்கின்றனர்.

சில வாரங்களுக்கு முன்பு பெங்களூர் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது கைக்கடிகாரம் மூலம் பயணியிடம் இருந்து பயண கட்டணத்தை பெற்றது இணையத்தில் கவனத்தை ஈர்த்தது. இவரை போன்ற ஆட்டோ டிரைவர்கள் நிறைய பேர் பெங்களூரில் உள்ளனர். ஆதலால், பெங்களூரில் ஆட்டோவில் பயணம் செய்ய உள்ளீர்கள் எனில், நீங்கள் டிரைவரின் முகத்தையோ அல்லது அவர் உங்களது முகத்தையோ பார்க்க கூட வேண்டாம்; அதாவது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற தேவை கூட இருக்காது.
அந்த அளவிற்கு பெங்களுரை க்யூ.ஆர் கோட்கள் ஆட்சி செய்து வருகின்றன. இந்த நிலையில், க்யூ.ஆர் கோட்-ஐ இங்கு ஒரு பெங்களூர் ஆட்டோ டிரைவர் கன்னட மொழியை பிறர் கற்றுக் கொள்வதற்காக பயன்படுத்துகிறார். பயணிகள் கன்னட மொழியில் பேசவில்லை என்றால் பெங்களூரில் ஆட்டோ டிரைவர்கள் கோபித்து கொள்வதை பரவலாக பார்க்க முடியும். இதற்கு அவர்களது கன்னட மொழிப்பற்று தான் காரணமாக இருக்கிறது.
கர்நாடகாவில் இருக்கும்போது கன்னட மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று கூட ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் கூறுவதை கேட்டிருப்பீர்கள். இந்த செய்தியில் நாம் பார்க்கும் ஆட்டோ டிரைவர் ஒருபடி மேலே போய் பயணிகளுக்கு கன்னட மொழியை கற்றுக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதாவது, ஆட்டோவில் பயணம் செய்யும்போது கலந்துரையாடுவதற்கு தேவையான வார்த்தைகளை ஆங்கிலத்திலும், அதற்கு இணையான கன்னட மொழி அர்த்தத்தையும் ஆட்டோவிற்குள் கொடுத்துள்ளார்.
இதற்காக, ஆட்டோவிற்குள் இடதுப்பக்கத்தில் ஒரு காகித அட்டையை லேமினேஷன் செய்து மாட்டி வைத்துள்ளார். இதை பார்த்து பயணிகள் தன்னிடம் கேள்விகளை எழுப்பலாம், அதற்கு தான் கூறும் பதில்களையும் அவற்றில் செக் செய்து பார்க்கலாம் என்பது இந்த ஆட்டோ டிரைவரின் விருப்பமாகும். 'ஆட்டோ கன்னடிகா உடன் கன்னடத்தை கற்றுக் கொள்ளுங்கள்' என்கிற தலைப்புடன் இந்த அட்டை ஆட்டோவிற்குள் தொங்கவிடப்பட்டுள்ளது.
ஆட்டோவிற்குள் இருக்கும்போது பொதுவாக என்னென்ன மாதிரியான கேள்விகளை பயணிகள் கேட்பார்கள், ஆட்டோவில் இருந்து இறங்கிய பிறகு என்னென்ன கேள்விகளை கேட்பார்கள் என்பதை புரிந்து வைத்து இந்த அட்டையில் மொழி பெயர்ப்பை வழங்கியுள்ளார். மேலும், இந்த அட்டையில் க்யூ.ஆர் கோட்களும் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை மொபைலில் ஸ்கேன் செய்து கன்னட மொழியை கற்றுக் கொள்வதற்கான டெமோவை பெறலாம்.
இந்த குறிப்பிட்ட பெங்களூர் ஆட்டோ டிரைவர் பயன்படுத்துவது ஒ.எஸ்.எம் ஸ்ட்ரீம் சிட்டி எலக்ட்ரிக் ஆட்டோ ஆகும். ஒ.எஸ்.எம் நிறுவனத்தால் உருவாக்கப்படும் இந்த எலக்ட்ரிக் ஆட்டோவின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.3 லட்சமாக உள்ளது. இதில் 8.5kWh பேட்டரி பேக் பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் 113கிமீ தொலைவிற்கு ஆட்டோவை ஓட்டி செல்லலாம். பேட்டரியை 0-இல் இருந்து முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 4 மணிநேரங்கள் வரையில் தேவைப்படும் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான ஒரு மாடர்ன் எலக்ட்ரிக் ஆட்டோவை பயன்படுத்துவதில் இருந்தே இந்த குறிப்பிட்ட ஆட்டோ டிரைவர் மிகவும் அட்வான்ஸாக யோசிக்கக்கூடியவர் என்பதை அறிய முடிகிறது. இத்தகைய மனிதரிடம் இருந்து இவ்வாறான கன்னடம் கற்றுக் கொடுக்கும் யோசனை வந்திருப்பதில் இருந்து ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. இதை பார்த்து மேலும் சில ஆட்டோ டிரைவர்கள் கர்நாடகாவில் இதனை பின்பற்ற ஆரம்பிப்பர் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








