எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்க புதிய யுக்தி... பிரபல கிரிக்கெட் வீரரை நாடிய க்ரீவ்ஸ் நிறுவனம்!!
க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி (Greaves Electric Mobility), இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று. எலக்ட்ரிக் 2-வீலர்கள் மற்றும் 3-வீலர்களை விற்பனை செய்யும் இது, மிக நீண்ட வருடங்களாக பருத்தி உற்பத்தியில் ஈடுப்பட்டுவரும் க்ரீவ்ஸ் காட்டனின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. பல்வேறு விதமான எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துவரும் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்தின் பிராண்ட் தூதராக (Ambassador) பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் நியமிக்கப்பட்டு உள்ளார். யார் அந்த கிரிக்கெட் வீரர் என்பதையும், க்ரீவ்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எந்தவொரு கார்ப்பிரேட் நிறுவனத்திற்கும் விளம்பரம் ஆனது முக்கியமாகும். இதில் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மட்டும் என்ன விதிவிலக்கா. க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்தின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டு இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் வேறு யாரும் இல்லை, அக்ஷர் பட்டேல் ஆவார். இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக அக்ஷர் பட்டேல் விளங்குகிறார்.

நடந்து முடிந்த இருபது ஓவர் உலக கோப்பை 2024 தொடரில் அக்ஷர் பட்டேலின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. இந்த உலக கோப்பை தொடரில் 9 விக்கெட்களை வீழ்த்தியது மட்டுமின்றி, 47 ரன்களை அக்ஷர் பட்டேல் குவித்து இருந்தார். இந்த நிலையில், எதிர்கால எலக்ட்ரிக் போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் விதமாக க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்துடன் கிரிக்கெட் வீரர் அக்ஷர் பட்டேல் இணைந்துள்ளார்.
க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்தின் எலக்ட்ரிக் 2-வீலர்கள் ஆம்பியர் என்கிற பிராண்டின் கீழும், எலக்ட்ரிக் 3-வீலர்கள் க்ரீவ்ஸ் 3 வீலர்ஸ் என்கிற பிராண்டின் கீழும், எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷாக்கள் எலெ இ-ரிக்ஷாஸ் என்கிற பிராண்டின் கீழும் விற்பனை செய்யப்படுகின்றன. க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்தின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதால், மேற்கூறப்பட்ட 3 பிராண்ட்களின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் பொறுப்பு கிரிக்கெட் வீரர் அக்ஷர் பட்டேலுக்கு உள்ளது.
இதுகுறித்து அக்ஷர் பட்டேல் கூறுகையில், "165 வருட பராம்பரிய பிராண்டுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டியின் நோக்கமான ஸ்மார்ட் மற்றும் நிலையான மொபைலிட்டியை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதை நான் உண்மையிலேயே ஆதரிக்கிறேன். ஒளிமயமான மற்றும் மின்மயமான இந்தியாவை உருவாக்குவது எனது நோக்கத்துடன் ஒத்துப்போகிறது" என்றார்.

க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டியின் நிர்வாக இயக்குனர் & சிஇஓ கே விஜய குமார் இதுகுறித்து கூறுகையில், "க்ரீவ்ஸ் குடும்பத்திற்கு அக்ஷர் பட்டேலை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவரது ஆல்-ரவுண்டர் ஆளுமை இந்தியாவிற்கான ஸ்மார்ட் மற்றும் நிலையான மொபைலிட்டி சொல்யூஷன்களை உருவாக்கும் எங்கள் பார்வை உடன் முழுமையாக ஒத்துப் போகிறது.
இந்த கூட்டணி எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், தூய்மையான, பசுமையான எதிர்காலத்தை நோக்கிய மொபைலிட்டியை ஊக்குவிப்பதும் ஆகும். அக்ஷரின் வெற்றி & தோல்வி பயணம் எங்களுடைய சொந்த பயணத்தை பிரதிபலிக்கிறது. மேலும் ஒன்றாக மாற்றத்தை உண்டாக்குவதையும், நாடு முழுவதும் உள்ள சமூகங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளோம்" என்றார்.
எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் கடந்த 13 வருடங்களாக க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. ஆம்பியரில் இருந்து விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், மார்க்கெட்டில் பிரபலமானவைகளாக உள்ளன. மேலும், க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்தின் மூலமாக கிடைக்கும் மானியத்தினால் க்ரீவ்ஸ் 3 வீலர்ஸின் விற்பனையும் சிறப்பாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், எந்தவொரு கார்ப்பிரேட் நிறுவனத்திற்கும் விளம்பரத்திற்கு விஐபிகளின் முகம் தேவைப்படுகிறது. இதன் மூலமாக வெற்றி கண்ட நிறுவனங்கள் ஏராளம். அந்த வரிசையில், விரைவில் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனமும் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கிரிக்கெட் ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேலை பிராண்ட் தூதராக நியமித்து, தங்களது நிறுவனம் அனைத்து விஷயங்களிலும் ஆல்ரவுண்டராக செயல்படுகிறது என்பதை க்ரீவ்ஸ் நிறுவனம் மறைமுகமாக கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications








