ராமர் கோயிலுக்கு வருபவர்கள் தான் மெயின் டார்க்கெட்!! வேற லெவலுக்கு மாறும் அயோத்தி!
நொய்டா மற்றும் அகமதாபாத்தை தொடர்ந்து, இந்தியாவில் அடுத்ததாக பொருளாதார ரீதியாகவும், சுற்றுலா துறை ரீதியாகவும் முன்னேற்றம் காணவுள்ள நகரமாக பலரால் கணிக்கப்பட்டு இருப்பது உத்தர பிரதேசத்தின் அயோத்தி ஆகும். ஏனெனில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ராமர் கோயில் அயோத்தியில் திறக்கப்பட உள்ளது.
இதனால், விரைவில் மொத்த நாடும் தேடி வரவுள்ள நகரமாக அயோத்தி விளங்கும் எனவும், இந்த நகரத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனவும் இப்போதே கூட்டி, கழித்து ஒரு கணக்கை போட்டு வைத்துள்ளனர். ராமர் கோயில் தான் முக்கிய சுற்றுலா தளமாக இருக்கும் என்றாலும், அதனை சுற்றியும் பல சுற்றுலா மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, மக்கள் வந்து போவதற்கு ஏதுவாக அயோத்தியில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஏற்கனவே கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டன. வருகிற டிசம்பர் 25ஆம் தேதி அயோத்தி விமான நிலையம் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, அயோத்தி விமான நிலையத்தில் விமான சேவைகள் இந்த வருடம் முடிவதற்குள்ளாக துவங்கிவிடும் என தெரிகிறது.
அதேபோல், நீர் மெட்ரோ சேவையையும் கொண்டுவரும் முனைப்பில் உத்தர பிரதேச அரசாங்கம் உள்ளது. அயோத்தியில் சர்யு என்ற நதி பாய்ந்து செல்கிறது. இந்த நதியில் படகு சேவை துவங்கப்படுகிறது. இந்த சேவைக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் தான் நீர் மெட்ரோ ஆகும். சர்யு நதியில் குப்தார் காட் பகுதியில் இருந்து ராம் கி பாயிடி பகுதி வரையில் செயல்படக்கூடியதாக இந்த படகு சேவை இருக்கும்.

இந்த படகு சேவை மக்களுக்கான போக்குவரத்தாக இருப்பது மட்டுமின்றி, உலக தரத்திலான சுற்றுலா பகுதியாகவும் விளங்கும் என கூறப்படுகிறது. ஆனால், இந்தியாவின் முதல் நீர் மெட்ரோ சேவை இது கிடையாது. கேரளாவில் கொச்சியில் நாட்டின் முதல் நீர் மெட்ரோ சேவையை கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரதமர் துவங்கி வைத்தார்.
நீர் மெட்ரோ என இதற்கு பெயர் வைக்கப்படுவதற்கு காரணம், இந்த சேவையில் மாடர்ன் தரத்திலான சிறிய ரக கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன. மக்களின் போக்குவரத்துக்காக இந்த கப்பல்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகின்றன. பாயிண்ட்-பாயிண்ட் ஆக இல்லாமல், இரயில், பேருந்து சேவையை போல், 2க்கும் மேற்பட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் நீர் மெட்ரோ சேவை இருக்கும்.
இவ்வாறான படகு சேவைகள் சாலை போக்குவரத்தில் ஏற்படும் நெரிசல்களை குறைப்பது மட்டுமின்றி, பயண நேரத்தையும் குறைக்கும். ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நீர் மெட்ரோ சேவையை அதிகம் பயன்படுத்துவார்கள் என்கிற நோக்கத்தில் உ.பி அரசு இதனை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவே எதிர்பார்த்திருக்கும் ராமர் கோயில் வருகிற 2024 ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

இந்த ஒற்றை கோயில் மூலமாக மொத்த அயோத்தி நகரத்தையும் வேற லெவலுக்கு மாற்ற வேண்டும் என உ.பி அரசில் இருந்து மத்திய அரசு வரையில் திட்டம் தீட்டி வருகின்றன. ஆக மொத்தத்தில், உலகின் மிக முக்கியமான இந்து மத தளமாக அயோத்தி வேகமாக மாறி வருகிறது. ராமர் கோயில் திறக்கப்படும் அதே தேதியில் பிரதமர் அயோத்தி நீர் மெட்ரோ சேவையையும் துவங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீர் மெட்ரோ சேவையின் மற்றொரு முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இது சூரிய ஆற்றலில் இயங்குகிறது. இதனாலேயே, நீர் மெட்ரோ சேவையை நாடு முழுவதும் விரிவுப்படுத்தும் முனைப்பில் மத்திய அரசு உள்ளது. நீர் மெட்ரோ சேவையில் பயன்படுத்தப்படும் படகுகளில் 50 பயணிகளை ஒரே நேரத்தில் அழைத்து செல்ல முடியும் என்பதால், இந்த படகு பயணத்தில் மகிழ்ச்சிக்கும் எந்த குறையும் இருக்காது.


Click it and Unblock the Notifications









