குட்டி யானையின் கதையை கேட்டு கண்கலங்கிய வனத்துறையினர்! பேருந்தை மட்டும் குறி வைத்து துரத்தியது இதனால்தானா?
கேரளாவின் வயநாடு பகுதியில் யானை குட்டி ஒன்று அந்த வழியாக செல்லும் பேருந்துகளை மட்டும் குறி வைத்து துரத்துவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து போலீசாரும், வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போதுதான், ஒரு அதிர்ச்சிக்கரமான, அதேநேரம் கண்கலங்க வைக்கும் விஷயம் ஒன்று தெரியவந்துள்ளது. அது என்ன என்பதை பற்றியும், அந்த குட்டி யானையை அதன்பின் என்ன செய்தார்கள் என்பதை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதினால், தண்ணீருக்கும், உணவுக்கும் வனவிலங்குகள் பொதுமக்கள் வாழும் பகுதிகளுக்கு வருவதை அவ்வப்போது பார்க்க முடிகிறது. முக்கியமாக, சாலைகளில் செல்லும் வாகனங்களை வனவிலங்குகள் இடையூறு செய்வதை நேரிலேயே நிறைய பேர் பார்த்திருப்பீர்கள். ஏனெனில், நிறைய சாலைகள் காடுகளுக்கு நடுவே தான் செல்கின்றன.

ஆதலால், வாகனங்களை வனவிலக்குகள் இடையூறு செய்கின்றன என சொல்வதை விட, வனவிலங்குகளை தான் வாகனங்கள் இடையூறு செய்கின்றன என சொல்ல வேண்டும். வனவிலங்குகளில் பெரும்பாலும் யானைகள் தான் சாலைக்கு வந்து வாகனங்களை இடைமறிக்கின்றன. ஏனெனில், பொதுவாகவே யானைகள் உணவை தேடி ஒவ்வொரு நாளும் நீண்ட தொலைவிற்கு செல்லக்கூடியவை. இருப்பினும் அவை கூட்டமாகவே செல்லக்கூடியவை.
தனியாக ஒரு யானை திரிவது கொஞ்சம் அரிதானதே. அதிலிலும், குட்டி யானை ஒன்று தனியாக திரிவதை பார்க்கவே முடியாது. அப்படியிருந்தும் இங்கு ஒரு குட்டி யானை தாயிடம் இருந்து தொலைந்து போய் அந்த வழியாக செல்லும் பேருந்துகளை துரத்தியப்படி இருந்துள்ளது. குறிப்பாக, பேருந்துகளை மட்டுமே ஏன் துரத்துகிறது? என்கிற கேள்வி எழலாம். காரணம், பேருந்துகள் பெரிய உருவம் கொண்ட தாய் யானை போன்று அந்த குட்டி யானைக்கு காட்சி தந்துள்ளது.

இதுதொடர்பான வீடியோ பார்ப்போர் அனைவரையும் மனம் உருகி கண்கலங்க வைத்துள்ளது. ஆனால், குட்டி யானையின் இந்த செயலால் அதற்கு பெரிய ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக வீடியோவிற்கு நிறைய பேர் கமெண்ட் செய்துள்ளனர். ஏனெனில், தாய் யானையின் அடியில் தஞ்சம் அடைவதுபோல் பேருந்தை துரத்திய குட்டி யானை, பேருந்தின் பின் சக்கரங்களுக்கு அடியில் பதுங்க முயற்சித்துள்ளது.
நல்லவேளையாக, குட்டி யானை துரத்துவதை பார்த்ததும் ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டார். பின்னர் மெதுவாக பேருந்தை இயக்கிய போது மீண்டும் குட்டி யானை துரத்த ஆரம்பித்துள்ளது. 100 மீட்டர் தொலைவிற்கு பேருந்தை துரத்திய குட்டி யானை பின்னர் குறுக்கே மாருதி ஆல்டோ கார் ஒன்று வந்ததால் இடையில் நின்றுவிடுவதை வீடியோவில் காணலாம்.

அதனை தொடர்ந்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், உள்ளூர்வாசிகளும் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க, வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சாலையில் தாயை தேடி சுற்றி திரிந்த குட்டி யானையை பிடித்து அதற்கு தேவையான சிறு, சிறு மருத்துவ உதவிகளை வழங்கிய வனத்துறையினர், பின்னர் அதன் தாய் யானையை தேடும் முயற்சியில் இறங்கினர்.
அதன்படி, தாய் யானை கண்டுப்பிடித்து அதனுடன் குட்டி யானையை வனத்துறையினர் கொண்டு போய் சேர்த்தனர். ஒருவேளை தாய் யானையை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்றால், குட்டி யானையை வனத்துறையினர் தான் பாதுகாக்க வேண்டி இருந்திருக்கும். கார், வேன், பேருந்துகளில் செல்லும்போது இவ்வாறு வனவிலங்கு துரத்தும்போது பதராமல் வாகனத்தை வேகமாக கொண்டு செல்ல பாருங்கள். அல்லது அங்கேயே நிறுத்திவிட்டு, என்ஜின் & விளக்குகளை அணைத்துவிடுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார், வேன், பேருந்து போன்ற மூடிய வாகனத்தில் செல்லும்போது இவ்வாறு வனவிலங்குகள் துரத்தினால் பெரியதாக பிரச்சனை இல்லை. அதுவே, இருசக்கர வாகனங்களில் செல்லும்போதுதான் பிரச்சனையே. ஆதலால், முடிந்தவரையில் வனப்பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் செல்ல வேண்டாம். குட்டி யானையால் எந்த ஆபத்தும் வர போவதில்லை என்றாலும், அதன் தாய் யானை அருகே தான் சுற்றி திரிந்துக் கொண்டிருக்கும் என்பதால் எப்போது வேண்மென்றாலும் பிரச்சனை வரலாம்.


Click it and Unblock the Notifications









