ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இது பெருமைங்க... பஜாஜ் ஆட்டோ செய்த காரியம் - இந்திய தயாரிப்புகளுக்கு கிடைத்த கௌரவம்
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம். இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் பஜாஜ் ஆட்டோ இந்தியாவில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கும் தனது தயாரிப்புகளை வழங்குகிறது. இதற்காக, சில வெளிநாடுகளிலும் பஜாஜ் நிறுவனம் உற்பத்தி தொழிற்சாலையை கொண்டுள்ளது. அந்த வரிசையில், பிரேசில் நாட்டில் பஜாஜ் நிறுவனம் தற்போது தொழிற்சாலையை திறந்துள்ளது. இதன் மூலமாக 100 நாடுகளில் தனது தயாரிப்புகளை விற்பனை செய்வதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியா உள்பட உலகளவில் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுள் ஒன்றாக பஜாஜ் ஆட்டோ விளங்குகிறது. இந்தியாவில் இந்த நிறுவனத்துக்கு புனேவில் தொழிற்சாலை உள்ளது. இந்த நிலையில், தென் அமெரிக்க நாடான பிரேசிலில் புதிய தொழிற்சாலையை பஜாஜ் ஆட்டோ திறந்துள்ளது.

ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் விற்பனை செய்யும் வாகனங்களுக்கு இணையாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெளிநாடுகளிலும் தனது வாகனங்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்கிறது. இதற்காக, இந்தியாவில் உற்பத்தி செய்து நிறைய 2-சக்கர மற்றும் 3-சக்கர வாகனங்களை வெளிநாடுகளுக்கு பஜாஜ் ஏற்றுமதி செய்து வருகிறது. குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகளில் பஜாஜின் வாகனங்கள் சிறப்பாக விற்பனையாகுகின்றன.
இந்த நிலையில்தான், பிரேசிலில் இந்த இந்திய நிறுவனம் தனது புதிய தொழிற்சாலையை திறந்துள்ளது. பிரேசில் நாட்டில் மனாஸ் என்கிற பகுதியில் பஜாஜ் ஆட்டோவின் தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது. இந்த பஜாஜ் தொழிற்சாலை திறப்பு நிகழ்ச்சியில் பிரேசில் நாட்டின் அமேசான் மாநில ஆளுநர் மற்றும் அதிகாரிகள், டீலர்கள் மற்றும் கூட்டணி வணிக நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த புதிய தொழிற்சாலை திறப்பு ஆனது உலகின் விருப்பமான இந்திய நிறுவனமாக தாங்கள் இருப்பதை வெளிப்படுத்துவதாக பஜாஜ் ஆட்டோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கால்தடம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பதியப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பஜாஜ் ஆட்டோவின் வாகனங்கள் 100 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
பிரேசிலில் திறக்கப்பட்டுள்ள பஜாஜின் இந்த புதிய தொழிற்சாலை மொத்தம் 9,600 சதுர மீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இந்த தொழிற்சாலையில் அதிநவீன தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. என்ஜின் அசெம்பிளி, வாகன அசெம்பிளி மற்றும் டெஸ்ட்டிங் அசெம்பிளி உள்ளிட்டவை அனைத்தும் இந்த ஆலையில் கட்டிங்-எட்ஜ் தரத்தில் உள்ளன.

இந்த தொழிற்சாலையில் வருடத்திற்கு 20,000 வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு ஒரேயொரு ஷிஃப்ட் ஆக இந்த தொழிற்சாலையை இயக்க பஜாஜ் திட்டமிட்டுள்ளது. இந்த தொழிற்சாலையை உருவாக்கும் பணிகளில் கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதத்தில் பஜாஜ் ஈடுப்பட ஆரம்பித்தது. இதன்படி பார்த்தால், வெறும் 1 வருடத்தில் தொழிற்சாலை உருவாக்கப்பட்டு, வாகனங்கள் உற்பத்தி பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
தற்போதைக்கு டோமினார் பைக்குகளை மட்டுமே இந்த புதிய தொழிற்சாலையில் பஜாஜ் உற்பத்தி செய்து வருகிறது. வரும் மாதங்களில் மேலும் புதிய தயாரிப்புகளை உற்பத்தி செய்ய பஜாஜ் திட்டமிட்டுள்ளது. வருடத்திற்கு 50,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் இந்த தொழிற்சாலையை மாற்றுவது பஜாஜின் நோக்கமாக உள்ளது. இந்த உற்பத்தி பணிகளை மேற்கொள்வதற்காக ஐ.எஸ்.ஓ சான்றிதழை பஜாஜ் பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓர் இந்திய நிறுவனம் பிரேசில் வரையில் தனது சேல்ஸ் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி இருப்பதுடன், அங்கு தனது தொழிற்சாலையையும் நிறுவி இருப்பது இந்திய தயாரிப்புகளை உலக மக்கள் எவ்வாறு அணுகுகின்றனர் என்பதை காட்டுகிறது. ஆதலால், இது பஜாஜுக்கு கிடைத்த வெற்றி மட்டுமின்றி, இந்திய தயாரிப்புகளுக்கும் கிடைத்த வெற்றி ஆகும்.


Click it and Unblock the Notifications









