கண் கட்டி வித்தையில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்! வீடியோவை ரிப்பீட் பண்ணி பார்த்தபோது அதிர்ச்சி! நாடே ஆடி போயிருச்சு
இந்தியாவில் ஆட்டோ டிரைவர்கள் (Auto Drivers) பலர் விதிமுறைப்படி மீட்டர் மூலம் கட்டணம் வசூல் செய்வதில்லை. தங்கள் இஷ்டத்திற்கு கட்டணங்களை நிர்ணயம் செய்கின்றனர். இதனால் பாதிக்கப்படும் பயணிகள், அரசு அதிகாரிகளிடம் உரிய முறையில் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாக புகார் அளிப்பதையே பலர் தற்போது நிறுத்தி விட்டனர்.
உள்ளூரை சேர்ந்த பயணிகளிடம் மட்டுமல்லாது, இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளிடமும் ஆட்டோ டிரைவர்கள் மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இதை நிரூபிக்கும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

வங்க தேசத்தை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் சமீபத்தில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் (Bangalore) வந்திருந்தார். கூடவே காதலியையும் அவர் அழைத்து வந்திருந்தார். பெங்களூரில் உள்ள சுற்றுலா தலங்களை (Tourist Places) எல்லாம் கண்டுகளித்து விட்டு வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம்.
இதன் ஒரு பகுதியாக ஆட்டோவில் பெங்களூர் பேலஸ் செல்ல முடிவு செய்தார். இதற்காக ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் பேசியபோது, அவர் மீட்டர் மூலம் கட்டணம் வசூலிக்க ஒப்பு கொண்டார். பெங்களூர் பேலஸ் சென்றடைந்த பிறகு, ஆட்டோ மீட்டர் 320 ரூபாயை கட்டணமாக காட்டியுள்ளது.
அப்போது வங்கதேச சுற்றுலா பயணி 500 ரூபாய் நோட்டு ஒன்றை ஆட்டோ டிரைவரிடம் வழங்கியதை வீடியோவில் மிக தெளிவாக காண முடிகிறது. ஆனால் ஆட்டோ டிரைவரோ சுற்றுலா பயணியின் கவனத்தை திசை திருப்பி, அந்த 500 ரூபாய் நோட்டை சட்டை மடிப்பிற்குள் மறைத்து வைத்து கொண்டார்.
அதற்கு பிறகு சுற்றுலா பயணி 100 ரூபாய் நோட்டை மட்டுமே வழங்கியதாக அவர் நடித்தார். இதனால் சுற்றுலா பயணி குழப்பம் அடைந்தாலும், அந்த இடத்தில் அவர் எதுவும் எதிர்வினையாற்றவில்லை. அதற்கு பதிலாக மேலும் ஒரு 500 ரூபாய் நோட்டை ஆட்டோ டிரைவரிடம் சுற்றுலா பயணி வழங்கினார்.
தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் இந்த காட்சிகள் எல்லாம் தெளிவாக பதிவாகியுள்ளன. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பெங்களூர் காவல் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். வீடியோவின் மூலம் ஆட்டோ டிரைவரை கண்டறிந்து, அவரை காவல் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
காவல் துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் கைது மட்டும் போதாது எனவும், சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவரின் டிரைவிங் லைசென்ஸ் (Driving Licence) ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நெட்டிசன்களின் கருத்தையேதான் நாங்களும் வலியுறுத்துகிறோம். வெறும் கைதுடன் நிற்காமல், மற்ற ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான காரியங்களை காவல் துறை அதிகாரிகள் செய்ய முன் வர வேண்டும். அப்போதுதான் மற்ற ஆட்டோ டிரைவர்கள் இவ்வாறான காரியங்களை செய்ய தயங்குவார்கள்.


Click it and Unblock the Notifications








