செல்போனில் என்ன பண்றாங்க பாருங்க... டிராபிக் ஜாமில் சிக்கியபோது பெண் செய்த காரியம்... வீடியோ வைரல் ஆகுது!
பெங்களூர் (Bangalore) நகரம் இதமான வானிலைக்கு பெயர் பெற்றது. எனவே பெங்களூர் நகரில் வசிக்க வேண்டும் என்ற கனவு நிறைய பேருக்கு இருக்கிறது. ஆனால் பெங்களூர் நகரிலும் ஒரு சில மோசமான பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன. இதில், போக்குவரத்து நெரிசல் (Traffic Congestion) மிகவும் முக்கியமானது.
உலகிலேயே போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக பெங்களூர் உள்ளது. எனவே பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கும்போது பல்வேறு வித்தியாசமான காட்சிகளை நம்மால் பார்க்க முடியும். பஸ் டிரைவர் ஒருவர் மதிய உணவு சாப்பிட்டதை இதற்கு உதாரணமாக கூற முடியும். பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகமாக உள்ள பகுதிகளில் ஒன்று சில்க் போர்டு ஜங்ஷன் (Silk Board Junction). இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இந்த போக்குவரத்து நெரிசலில், பிடிஎம்சிடி என சுருக்கமாக அழைக்கப்படும் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தின் (BMTC - Bangalore Metropolitan Transport Corporation) பஸ் ஒன்றும் சிக்கி கொண்டது. நீண்ட நேரமாகியும் வாகனங்கள் நகராத காரணத்தால், அந்த பஸ்ஸின் டிரைவர், தான் கொண்டு வந்திருந்த மதிய உணவை எடுத்து சாப்பிட தொடங்கி விட்டார்.
டிரைவர் இருக்கையிலேயே அமர்ந்து அவர் உணவை சாப்பிட்ட வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் காட்டு தீ போல் பரவியது. இந்த வரிசையில் மற்றொரு வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. பெங்களூர் நகரில் எடுக்கப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், பெண் ஒருவர் ஸ்கூட்டரில் போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
ஆனால் அவர் வெறுமனே நின்று கொண்டிருக்கவில்லை. செல்போன் மூலம் ஆன்லைன் மீட்டிங்கில் கலந்து கொண்டிருந்தார். ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரில் பொருத்தப்பட்டிருந்த ஹோல்டரில் செல்போன் வைக்கப்பட்டிருந்தது. அந்த செல்போனில் ஜூம் (Zoom) மூலமாக அவர் மீட்டிங்கில் பங்கேற்றிருந்தார். இந்த வைரல் வீடியோ, சமூக வலை தளங்களில் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. இந்த பெண்ணின் செயல் சமூக வலை தளங்களில் மிக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஸ்கூட்டர் ஓட்டி கொண்டே அலுவலகத்தின் மீட்டிங்கில் கலந்து கொள்வது என்பது கவன சிதறலை ஏற்படுத்தலாம் என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நெட்டிசன்களின் கருத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். உண்மையில் வாகன ஓட்டும்போது அலுவலகத்தின் மீட்டிங்குகளில் கலந்து கொண்டால், கவன சிதறல் ஏற்படும். இது சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். எனவே வாகனம் ஓட்டும்போது கவனம் சாலையில் மட்டும் இருப்பது நல்லது.
ஆனால் பெங்களூர் நகரில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது. கடந்த காலங்களில் டூவீலர்களின் பின்னால் அமர்ந்து கொண்டு, லேப்டாப் மூலம் நிறைய பேர் வேலை செய்து கொண்டே பயணம் செய்துள்ளனர். இதுவும் ஆபத்தான விஷயங்கள்தான் என நாங்கள் கருதுகிறோம்.
இந்த விஷயத்தில் ஊழியர்கள் மீது தவறு இருக்கிறதா? அல்லது அலுவலகங்கள் மீது தவறு இருக்கிறதா? என்பது தெரியவில்லை. ஆனால் இரு தரப்பும் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வேலையை வீட்டிலேயோ அல்லது அலுவலகத்திலேயோ முடித்து விட்டு, வாகனத்தில் ஏற வேண்டும். அலுவலகங்களும் ஊழியர்களுக்கு கூடுதல் பணி சுமையை அளித்து அழுத்தம் வழங்க கூடாது. அப்போது மட்டுமே இது போன்ற விஷயங்கள் நடைபெறாமல் இருக்கும்.


Click it and Unblock the Notifications








