பெங்களூர் டூ லண்டன்... சொந்த சோலார் வாகனத்தில் செல்லும் எஞ்சினியர்!
பெங்களூரை சேர்ந்த இளம் பொறியாளர் ஒருவர் சொந்தமாக சோலார் ஆட்டோரிக்ஷா ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த ரிக்ஷாவில் பெங்களூரிலிருந்து லண்டனுக்கு பயணம் கட்ட உள்ளார்.
நவீன் ரபெல்லி என்ற அந்த இளம் பொறியாளர் ரேவா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். சொந்தமாக சோலார் ஆட்டோரிக்ஷாவை உருவாக்கும் எண்ணத்துடன் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு வெளியில் வந்துவிட்டார்.
பின்னர் லோடு ஆட்டோரிக்ஷா ஒன்றை வாங்கி அதில் தனது தொழில்நுட்ப திறமையை காட்டியுள்ளார். அந்த டீசல் ஆட்டோரிக்ஷாவை சூரிய மின்சக்தியில் இயங்கும் விதத்தில் மாற்றியுள்ளார். ஆட்டோரிக்ஷாவின் மேற்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதியில் சோலார் பேனல்களை பொருத்தியுள்ளார்.
சிறுக சிறுக சேமித்த பணத்தில் இந்த ஆட்டோரிக்ஷாவை வடிவமைத்துள்ளார். இந்த ஆட்டோரிக்ஷாவில் பொருத்தப்பட்டிருக்கும் லீட் ஆசிட் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 8 மணி நேரம் பிடிக்குமாம். ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் செல்லலாம் என்றும் நவீன் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் இதுபோன்ற வாகனங்களை ஊக்குவிப்பதற்காக இதே ஆட்டோரிக்ஷாவில் பெங்களூரிலிருந்து லண்டன் மாநகருக்கு விரைவில் அவர் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
மும்பை சென்று அங்கிருந்து கப்பலில் ஈரான் நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கிருந்து துருக்கி, பல்கேரியா வழியாக லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளார். மொத்தம் 9,600 கிமீ தூரத்துக்கு இந்த பயணத்தை அவர் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த பயணத்தின்போது பெரும்பாலும் ஆட்டோரிக்ஷாவிலேயே தங்குவதற்கும், உறங்குவதற்கும் திட்டமிட்டுள்ளார். நவீனுடன் அவரது நண்பர் ஒருவரும் செல்கிறார். மேலும், ஆட்டோவில் பொருத்தப்பட்டிருக்கும் லீட் ஆசிட் பேட்டரிக்கு பதிலாக லித்தியம் அயான் பேட்டரியை பொருத்தவும் முயற்சித்து வருகிறார்.
வாழ்த்துகள் நவீன்


Click it and Unblock the Notifications









