ஸ்கூட்டிக்கு மூனே கால் லட்சம் அபராதம் போட்ட போலீஸ்! காரணம் என்னனு தெரிஞ்சா இனி இந்த விஷயத்தை செய்ய மாட்டீங்க!
முன்பெல்லாம் காவல் துறை அதிகாரிகள் வாகன தணிக்கை நடத்தி, விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் (Fine) விதித்து வந்தனர். ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. காவல் துறை அதிகாரிகள் சாலையில் இல்லை என நினைத்து கொண்டு விதிமுறைகளை மீறி விட வேண்டாம்.
காவல் துறை அதிகாரிகள் இல்லை என்றாலும் கூட, கேமராக்கள் உங்களை கண்காணித்து கொண்டிருக்கும். இதன் அடிப்படையில் அபராதம் விதிக்கும் காலம் தற்போது வந்து விட்டது. இந்த அதிநவீன தொழில்நுட்பங்களை எல்லாம் பொருட்படுத்தாமல், கண்மூடித்தனமாக விதிமுறைகளை மீறிய ஒருவர் தற்போது பெரும் சிக்கலில் சிக்கி கொண்டுள்ளார்.

அபராதம் கட்டுவதற்காக பர்சனல் லோன் (Personal Loan) வாங்கும் சூழல் அவருக்கு உருவாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் (Bangalore) நகரை சேர்ந்த தினேஷ் என்பவர்தான் இந்த கதையின் கதாநாயகன். கங்காநகர் பகுதியை சேர்ந்த இவர், டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+ (TVS Scooty Pep+) ஸ்கூட்டர் ஒன்றை வைத்திருந்தார்.
கடந்த 2021ம் ஆண்டு இந்த ஸ்கூட்டர் வாங்கப்பட்டது. வாங்கிய புதிதில் எல்லாம் நன்றாகதான் சென்று கொண்டிருந்தது. ஆனால் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதிதான் வில்லங்கம் ஆரம்பித்தது. இந்த நாளை தினேஷ் ஆயுளுக்கும் மறக்க மாட்டார். ஏனெனில் இந்த நாளில்தான், அவர் வைத்திருந்த ஸ்கூட்டர் மீது முதல் போக்குவரத்து விதிமுறை மீறல் பதிவானது.

அன்றில் இருந்து, நடப்பு 2023ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 634 முறை, தினேஷின் ஸ்கூட்டியில் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான போக்குவரத்து விதிமுறை மீறல்கள் என்னவென்றால், ஹெல்மெட் அணியாதது மற்றும் செல்போனில் பேசி கொண்டே வாகனம் ஓட்டியது ஆகும்.
இந்த அனைத்து விதிமுறை மீறல்களுக்குமான அபராத தொகை எவ்வளவு தெரியுமா? 3.25 லட்ச ரூபாய்! இது ஸ்கூட்டரின் விலையை (Price) விட பல மடங்கு அதிகம். இவ்வளவு பெரிய தொகையை செலுத்தாமல் ஹாயாக சுற்றி கொண்டிருந்த காரணத்தால், ஆர்டி நகர் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள், தினேஷின் ஸ்கூட்டரை தேடி வந்தனர்.
நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்பு, தற்போது தினேஷின் ஸ்கூட்டர் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறை மீறல்கள் அனைத்தும், ஆட்டோமேட்டிக் இன்டலிஜெண்ட் டிராஃபிக் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் கேமரா (Automatic Intelligent Traffic Management System Camera) மூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, காவல் துறை அதிகாரிகளிடம், தினேஷ் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தார்.
இவ்வளவு பெரிய தொகையை கட்ட முடியாது என தினேஷ் கூற, அபராதத்தை செலுத்தாமல் ஸ்கூட்டரை விட மாட்டோம் என காவல் துறை அதிகாரிகள் கறாராக கூறி விட்டனர். இப்போது என்ன செய்வது? என தெரியாமல் தினேஷ் முழித்து கொண்டுள்ளார். இது குறித்த செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த நிகழ்வு, நம் அனைவருக்குமே ஒரு பாடம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. சாலையில் தயவு செய்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுங்கள். இது காவல் துறையின் அபராதங்களில் இருந்து மட்டுமல்லாது, சாலை விபத்துக்களில் சிக்குவதில் இருந்தும் நம்மை பாதுகாக்கும்.


Click it and Unblock the Notifications








