முடி வெட்டுபவராக துவங்கிய வாழ்க்கை... இன்று ரேஞ்ச் ரோவர் உடன் மொத்த மாறிடுச்சு!
பெங்களூருவைச் சேர்ந்த ரமேஷ் பாபு, சிகையலங்கார நிபுணராக தனது தொழிலை தொடங்கி, தற்போது மிகப்பெரிய கார் வாடகை நிறுவனத்தின் உரிமையாளராக மாறியுள்ளார். அவரது ரமேஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனம் தனது சொகுசு கார் சேவையில் புதிதாக 3.2 கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் லாங்-வீல்பேஸ் (Range Rover LWB) காரை இணைத்துள்ளது.
இந்த புதிய சேர்த்தல், அவரது நிறுவனத்தின் கார் சேவையை மேலும் பெரியதாக்கி உள்ளது. ரமேஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் சொகுசு கார் சேவையில், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் (Rolls-Royce Ghost), மெர்சிடிஸ்-மேபேக் (Mercedes-Maybach), மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-வேகன் (Mercedes-Benz G-Wagon), லேண்ட் ரோவர் டிஃபென்டர் 130 (Land Rover Defender 130), பி.எம்.டபிள்யூ ஐ7 (BMW i7) போன்ற பல உயர் ரக கார்கள் ஏற்கனவே உள்ளன.

புதிய ரேஞ்ச் ரோவர் LWB காரின் வருகை, ரமேஷ் பாபுவின் டிராவல்ஸ் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் கூடுதலான சொகுசு அனுபவத்தை வழங்கும். ரேஞ்ச் ரோவர் LWB காரின் டெலிவரி புகைப்படங்கள், ரமேஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன.
இந்த புகைப்படங்களில், ரமேஷ் பாபு தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுடன் இணைந்து டீலர்ஷிப்பில் தனது புதிய ரேஞ்ச் ரோவரைப் பெற்றுக் கொள்வதைக் காணலாம். ரமேஷ் பாபு வாங்கியிருக்கும் புதிய ரேஞ்ச் ரோவர் எச்.எஸ்.இ (HSE) லாங் வீல்பேஸ் மாடல், 3.2 கோடி ரூபாய் மதிப்பிலானது.

ஃபுஜி ஒயிட் நிறத்தில் ஜொலிக்கும் இந்த கார், உள்ளே பீஜ் நிற லெதர் இருக்கைகள், மர வேலைப்பாடுகள் மற்றும் பிரஷ்டு அலுமினிய அலங்காரத்துடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீளமான வீல்பேஸ் காரணமாக, இந்த காரினுள் பின் இருக்கை பயணிகளுக்கு அதிக இடவசதி கிடைக்கும்.
ரேஞ்ச் ரோவர் HSE LWB காரில் 3.0 லிட்டர் D350 இன்ஜினியம் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 346 bhp சக்தியையும், 700 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் நான்கு சக்கரங்களுக்கும் என்ஜின் ஆற்றல் செலுத்தப்படுகிறது.

இந்த கார், 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 6.4 வினாடிகளில் எட்டிவிடும். ரமேஷ் பாபுவின் உத்வேகமளிக்கும் கதை பலருக்கு தெரியாமல் இருக்கலாம். பெங்களூருவில் பிறந்த இவரது தந்தை ஒரு சிகையலங்கார நிபுணர். ரமேஷுக்கு 7 வயதாக இருக்கும்போது அவரது தந்தை காலமானார். இதனால், அவரது தாய் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.
சிறு வயதிலேயே பல்வேறு வேலைகளைச் செய்து கொண்டே தனது படிப்பைத் தொடர்ந்த ரமேஷ் பாபு, பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, உயர் கல்விக்குச் செல்லாமல், தனது தந்தையின் சிகையலங்கார கடையை மீண்டும் தொடங்கினார். தனது முடி திருத்தும் திறனை மேம்படுத்தி, நல்ல வருமானம் ஈட்டினார். அதன் பிறகு, மாருதி சுஸுகி ஓம்னி (Maruti Suzuki Omni) வேன் வாங்க போதுமான பணத்தைச் சேமித்தார்.

பயன்பாட்டில் இல்லாத நேரத்தில் தனது வேனை வாடகைக்கு விடுவதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம் என்று யோசனை கூறப்பட்டது. அதன்படி, கார் வாடகை வணிகம் மூலம் அதிக வருமானம் ஈட்டத் தொடங்கி, பல கார்களுடன் தனது தொழிலை விரிவுபடுத்தினார். 2004-ல் ஒரு மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் காரை வாங்கியது, ரமேஷ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தை ஒரு பிரீமியம் கார் வாடகை நிறுவனமாக மாற்றியது.
அதன் பின்னர், அவர் மேலும் பல சொகுசு கார்களை வாங்கத் தொடங்கினார். 2011-ல் அவர் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் I, பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்தியாவில் வாடகைக்கு விடப்பட்ட முதல் ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் அதுவும் ஒன்று. அதன்பின்னர், மெர்சிடிஸ்-மேபேக் S600 மற்றும் பல மெர்சிடிஸ்-பென்ஸ் S-கிளாஸ் மற்றும் E-கிளாஸ் மாடல்கள் உட்பட பல சொகுசு கார்களை வாங்கினார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடினமாக உழைத்தால் யார் வேண்டுமாயினும் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதற்கு பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் பாபு வாழும் சாட்சியாகும். தந்தையின் தொழில் உடன் நிறுத்தாமல், தனக்கான ஒரு தொழிலை இவர் ஆரம்பித்ததன் மூலமே தற்போது புதியது புதியதாக ரேஞ்ச் ரோவர் கார்களை வாங்கும் அளவிற்கு சென்றுள்ளார்.


Click it and Unblock the Notifications









