சென்னை நிறுவனத்தின் ரூ866 கோடி ஆர்டரை தட்டி தூக்கிய பெங்களூரு நிறுவனம்! என்ன நடந்தது?
சென்னை ஐசிஎஃப் ஆலையிலிருந்து பெங்களூருவில் உள்ள பிஇஎம்எல் நிறுவனத்திற்கு ரூபாய் 866.87 கோடிக்கான அதிவேக ரயில் தயாரிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் புல்லட் ரயிலுக்கு இணையாகவே அதிக வேகத்தில் பயணம் செய்யும் ரயில்கள் தயாரிக்கப்பட இருக்கிறது. 2026ம் ஆண்டு இறுதிக்குள் இந்த ரயில்கள் எல்லாம் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் எல்லாம் அறிமுகமான பிறகு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்த ரயிலில் உள்ள அதிக வசதிகள் மற்றும் ரயில் வடிவமைப்பு காரணமாக பலர் இந்த ரயிலில் பயணம் செய்ய விரும்பி வருகிறார்கள். இதனால் அதிக எண்ணிக்கையிலான வந்தே பாரத் ரயில்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்நிலையில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகமாகும் போது இது சர்வதேச அளவில் செயல்படும் புல்லட் ரயில் வடிவமைப்பு போல இருப்பதாகவும் அதில் உள்ள பல்வேறு வசதிகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த ரயிலின் வேகம் அந்த அளவுக்கு இல்லை. சாதாரண ரயில் வேகத்தை விட குறைவாகவோ அல்லது அதற்கு நிகராகவோ தான் இருக்கிறது.
வந்தே பாரத் ரயில் பயணம் செய்வதன் மூலம் பயண நேரத்தை ஓரளவுக்கு குறைக்க முடியும் என்றாலும் பெரிய அளவில் மாற்றி விட முடியாது. இதனால் நீண்ட தூரத்தில் இருக்கும் இரு நகரங்களை மிகக் குறைவான நேரத்தில் கடப்பதற்கு விமானம் மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது. விமானத்தின் பயண டிக்கெட் மிக அதிகமான விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் வந்தே பாரத் ரயில் போன்ற ஒரு ரயில் அதே நேரத்தில் அதிக வேகத்தில் பயணிக்கும் ஒரு ரயிலை உருவாக்க வேண்டும் என தற்போது ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆனால் ஐசிஎஃப் நிர்வாகத்திற்கு தற்போது இந்த ரயிலை உருவாக்குவதற்கான போதுமான கட்டுமான வசதிகளும் நேரமும் இல்லை. தற்போது வந்தே ரயிலை தயாரிக்க ஏகப்பட்ட ஆர்டர்கள் குவிந்துள்ளதால் அதை தயாரிப்பதிலேயே பிஸியாக இருக்கிறது.
இந்நிலையை சென்னை ஐசிஎஃப் நிர்வாகம் பெங்களூருவில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பிஇஎம்எல்) என்ற நிறுவனத்திற்கு இந்த ரயிலை தயாரிப்பதற்கான ஆர்டரை தற்போது வழங்கியுள்ளது. இதற்காக நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது இதன்படி ரூபாய் 866.87 கோடியை அந்நிறுவனத்திற்கு வழங்கி இந்த அதிவேகமாக பயணிக்கும் ரயிலை உருவாக்க ஆர்டர்களை வழங்கி உள்ளது.

இதன்படி பிஇஎம்எல் நிறுவனம் புதிய ரயிலுக்கான வடிவமைப்பு, தயாரிப்பு, அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என மூன்று விதமான பணிகளையும் செய்ய வேண்டும். மொத்தம் நிறுவனம் இந்த பணத்திற்கு இரண்டு அதிவேக ரயில்களை தயாரித்து வழங்க வேண்டும். ஒவ்வொரு ரயிலிலும் தலா எட்டு பெட்டிகள் இருக்கும் வகையில் உருவாக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரயில் பெட்டியில் எல்லாம் தற்போது உள்ள பயணிகள் ரயில் பெட்டியில் இருக்கும் அனைத்து அம்சங்களும் பொருத்தப்பட்டதாக இருக்க வேண்டும். இதில் உள்ள சீட்டுகள் எல்லாம் சாய்வுடன் கூடிய சீட்டுகளாகவும், திருப்பும் வகையிலான சீட்டுகள் கொண்ட ரயில் பெட்டிகளாகவும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரயில் பெட்டியில் பயணிகள் பயணம் செய்யும்போது விமான பயணம் போல சொகுசாக இருக்க வேண்டும். விமான பயணத்தில் இருப்பது போல ரயில் எந்த இடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற தகவல் பயணிகளுக்கு தெரியும் வகையில் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் கோரப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூருவில் உள்ள பிஇஎம்எல் நிறுவனம் இதை தயாரித்து விரைவில் இந்தியாவில் 250 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் ரயிலை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறதே. இதற்காக 2026ம் ஆண்டு இறுதி வரை காலக்கெடு வழங்கியுள்ளது. அதற்குள் பிஇஎம்எல் நிறுவனம் இந்த ரயிலை தயாரித்து செயல்பாட்டிற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். இது வந்தால் நிச்சயம் வெளிநாட்டில் உள்ள புல்லட் ரயில்களுக்கு மிகப்பெரிய போட்டி தான்.


Click it and Unblock the Notifications









