லட்ச ரூபாய்கள் செலவு செய்து அப்பா, அம்மா பைக் வாங்கி கொடுக்குறது இதுக்குதானா! நடுரோட்டில் சில்லறை வாரிய இளைஞர்
பெனெல்லி (Benelli) சூப்பர்பைக் ரைடர் ஒருவர் ஹூண்டாய் அல்கஸார் எஸ்யூவி காரை ஓவர்டேக் செய்யும்போது எதிர்பாராத விதமாக சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பின் மீது மோதி விபத்திற்குள்ளாகி உள்ளார். அதன்பின் அவருக்கு என்ன நடந்தது என்பதை, இந்த சம்பவம் குறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் மூலம் பார்க்கலாம்.
விலையுயர்ந்த பைக்குகளை வாங்கிவிட்டு, அதில் சாலையில் ஆக்ரோஷமாக ஓட்டி சாகசம் காட்டுவது நம் மக்களிடத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளம் தலைமுறையினர் இணையத்தில் லைக்ஸ் & ஷேர்-க்காக இவ்வாறான ஆபத்தான செயல்களில் அதிகம் ஈடுப்படுகின்றனர். ஒரு சிலர், ஒருபடி மேலே போய் பிசியான சாலையில் வீலிங் செய்வதை கூட இதற்கு முன்னர் நமது செய்தித் தளத்தில் பார்த்துள்ளோம்.

ஆனால், இவ்வாறான செயல்கள் எப்போதுமே ஆபத்தில்தான் சென்று முடிகின்றன. அவ்வாறான ஒரு சம்பவமே இங்கு பெனெல்லி டிஎன்டி 300 பைக் ரைடர் ஒருவருக்கு நடந்துள்ளது. அதிவேகமாக ஹூண்டாய் அல்கஸார் ஒன்றை முந்தும்போது சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு சுவரில் மோதி இந்த பெனெல்லி பைக் ரைடர் சாலையில் சில்லறையை வாரியுள்ளார்.
இதுதொடர்பாக அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவை கீழே செய்தியின் இறுதியில் காணலாம். இந்த வீடியோவை அவர் நேரலையாக காட்சிப்படுத்தி இணையத்தில் பதிவேற்றம் செய்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த வீடியோவில் துவக்கத்தில், இளைஞர்கள் சிலர் தங்களது விலையுயர்ந்த பைக்குகளுடன் சாலையில் ஆக்ரோஷமாக வாகனம் ஓட்டுவதை காணலாம்.

இந்த ஆக்ரோஷமான பயணத்தில் அவர்கள் பயன்படுத்தி இருப்பது கேடிஎம் ஆர்சி390, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்.ஆர்310 மற்றும் பெனெல்லி டிஎன்டி 300 போன்ற விலைமிக்க பைக்குகள் ஆகும். இதில் பெனெல்லி பைக்கில், சம்பவத்தின்போது பின் இருக்கையிலும் ஒருவர் அமர்ந்திருந்தார். ஆதலால், பேரிகேட்டில் மோதி பைக் கீழே சரிந்ததும், பைக்கில் இருந்த இருவரும் சாலையில் விழுந்தனர்.
இந்த பயணத்தின்போது, அப்பாச்சி ஆர்.ஆர்310 மற்றும் விபத்திற்கு உள்ளான பெனெல்லி பைக் ரைடர்கள் இருவரிடமும் ஹெல்மெட்டில் கேமரா இருந்துள்ளது. இதில், அப்பாச்சி பைக் ரைடர் தான் நேரலையாக பைக் ரைடிங்கை காட்சிப்படுத்திக் கொண்டு இருந்தார். ஆனால் கீழே பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், அப்பாச்சி பைக் ரைடரின் பார்வையில் இந்த விபத்து எவ்வாறு இருந்தது? அதேபோல், பெனெல்லி பைக் ரைடரின் பார்வையில் இந்த விபத்து எவ்வளவு பயங்கரமானதாக இருந்தது? என்பதை காணலாம்.

இந்த சம்பவம் நடைபெற்றது அதிகாலை சமயத்தில் ஆகும். முந்தைய காலங்களில் இவ்வாறான ஆக்ரோஷமான பயணங்களை நடு இரவில் மேற்கொள்வர். ஆனால், இப்போதெல்லாம் அந்த சமயத்தில் போலீஸாரின் கண்காணிப்பு அதிகமாகிவிட்டதால், அதிகாலையில் இவ்வாறான செயல்களில் ஈடுப்படுகின்றனர். பைக்கின் டாப்-ஸ்பீடை சோதிப்பதற்காக இவ்வாறு நடந்துக் கொண்டதாக இந்த செயலில் ஈடுப்பட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின்போது, விபத்திற்குள்ளான பெனெல்லி டிஎன்டி 300 பைக்கிற்கு பின்னால் கேடிஎம் ஆர்சி390 பைக் ரைடர் இருந்துள்ளார். நல்லவேளையாக ஆர்சி390 பைக்கின் சக்கரங்கள் பூட்டப்பட்டு இருந்ததால் அவர் கீழே விழுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை தான் ஏபிஎஸ் (ஆண்டி-பிரேக் சிஸ்டம்) என்கிறார்கள். அதாவது, சடர்ன் பிரேக்கை ஓட்டுனர் கொடுத்தாலும், முழுமையாக சக்கரங்கள் நிற்காதப்படி பார்த்துக் கொள்ளவதே ஏபிஎஸ்-இன் பணி ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்கள் இன்றைய கால பைக்குகளில் அதிகளவில் வழங்கப்படுவதை இளைஞர்கள் நிறைய பேர் தவறாக பயன்படுத்துகின்றனர். இவ்வாறான தொழிற்நுட்பங்கள் அவசர காலத்தில் உயிரை காப்பாற்றவே தவிர, ஆக்ரோஷமான பயணங்களுக்கானவை அல்ல. இந்த டெக்னாலஜிகள் இருந்தாலும், கொஞ்சம் கண்ட்ரோலை இழந்தால் என்ன நடக்கும் என்பதை இந்த நிகழ்வில் இருந்து கற்றுக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications









